குளிர்காலத்தில் உண்ணக் கூடிய கீரைகள்

மழை, குளிர் என தமிழகத்தில் காலம் மாறினால் காய்கறிகளின் விலை ஒரு பக்கம் அதிகரிக்கத் தொடங்கும், மறு பக்கமோ கீரைகளும் சந்தையில் கிடைக்காது. இதற்கு காரணம் மழையால் கீரைகள் விளைச்சல் பாதிக்கப்படுவதுடன் சந்தையில் வரும் முளைக்கீரை போன்றவை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும், அதனால் அவற்றை பெரும்பாலும் யாரும் வாங்க மறுப்பார்கள். கோடைகாலத்தில் உடலை குளிர்விக்க உதவும் கீரைகளை குளிர்காலத்தில் உண்டால் தலைவலி, சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதனால் மழை, குளிர் காலங்களில் அந்த காலத்திற்கு ஏற்ற கீரைகளை உண்ண வேண்டும்.

கோடையில் பொதுவாக சிறு செடியாக வளரும் கீரைகள், அதிலும் ஒரு முறை மட்டுமே பயிராகும் குறுகிய கால கீரைகளே அதிகம் கிடைக்கும். ஆனால் குளிர் காலங்களில் நிலத்தில் அல்லது குறுகிய காலத்தில் அல்லாமல் கொடியாக அல்லது மீண்டும் மீண்டும் கிள்ளக் கிள்ள வளரும் கீரைகளே அதிகம் கிடைக்கும் அவையே அந்த காலத்திற்கும் சிறந்தது. உதாரணத்திற்கு கொடியாக படரும் முசுமுசுக்கை, தூதுவளை போன்றவை அல்லது அறுக்க அறுக்க மீண்டும் துளிர்த்து வளரும் அரைக்கீரை, புதினா போன்றவை சிறந்தது. இவையே குளிருக்கு நமது உடலை இதமாக வைக்கும் கீரைகளாகும்.

மழை காலத்திற்கு ஏற்ற கீரைகள்

தூதுவளை

மழைகாலங்களில் அதிகமாக பலரையும் தாக்கும் கப நோய்களுக்கு மிக சிறந்த கீரை தூதுவளை. சளி, இருமலுக்கு சிறந்த கீரை. இதனை துவையல், மிளகு, பூண்டு சேர்த்து ரசம் செய்து உண்பது நல்ல நிவாரணத்தை அளிக்கும். சமைக்காமலும் சிறிது கீரையை முள் அகற்றி பொட்டுக்கடலை சேர்த்தும் நன்கு மென்று உண்ணலாம். உடனே நல்ல நிவாரணத்தைப் பெறலாம்.

மூக்கிரட்டை

உடலின் ராஜ உறுப்புகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் கீரை மூக்கிரட்டை. சிறுநீரக நோய்களுக்கு மிக சிறந்தது. உடலுக்கு நல்ல வலுவையும் குளிர் காலங்களில் நல்ல வலுவையும் புத்துணர்வையும் அளிக்கும் கீரை.

அரைக்கீரை

ஆற்றலையும் உடலுக்கு தேவையான ஊட்டத்தையும் குளிர்காலத்திற்கு ஏற்ப அளிக்கும் கீரை அரைக்கீரை.

கற்பூரவள்ளி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் சளி தொந்தரவிற்கும் தொண்ட வலி, இருமல், கோழைக்கும் சிறந்த கீரை கற்பூரவள்ளி. ரசமாக செய்து அல்லது சாறு எடுத்துப் பருகலாம்.

முசுமுசுக்கை

உடலுக்கு தேவையான ஆற்றலை மழை காலத்தில் அளிக்கும் கீரை முசுமுசுக்கை. இதனை அடையாக அல்லது தோசையில் சேர்த்து உண்ணலாம்.

புதினா

எல்லா காலத்திற்கும் ஏற்ற கீரை புதினா என்றாலும் குளிர்காலத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களை சீராக அளிக்க சிறந்த கீரை மேலும் புத்துணர்வையும் அளிக்கும் கீரை.

இந்த கீரைகளை செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையான காலங்களில் உண்ணலாம். குளிர், மழை காலத்தில் வரும் தொந்தரவுகள் மறையும்.

(1 vote)