முசுமுசுக்கை கீரை – நம் மூலிகை அறிவோம்

Mukia maderaspatana; Cucumis maderaspatanus; முசுமுசுக்கை இலை

சாதாரணமாக தமிழகத்தில் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை தான் இந்த முசுமுசுக்கை. இது ஒரு சிறு கொடி வகையை சேர்ந்தது. பல செடிகளுக்கு ஊடே இதுவும் முளைத்திருக்கும். முசுமுசுக்கையின் இலைகள் சுணைகளுடையது, காய்கள் பச்சை நிறத்திலும், செந்நிற பழங்களையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும் கொண்ட ஒரு கொடி. உடலில் இருக்கும் நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்கக் கூடியது. சளியை அகற்றக்கூடிய தன்மையும் கொண்டது. முசுமுசுக்கையின் வேர் சுவாச மண்டல தொந்தரவுகளை அகற்றும்.

சுரம், கபகாய்ச்சல், ருசியின்மை, வாசனையின்மை நீங்க

பொதுவாக இந்த முசுமுசுக்கை இலைகளை தோசை மாவுடன் சேர்த்து அரைத்து சாப்பிடும் பழக்கம் நமது கிராமங்களில் அதிகமாக உள்ளது. அதேபோல் துவையலாகவும் செய்து சாப்பிட சுரம், சளிசுரம், இரைப்பிருமல், இரத்த காசம், நீர்க்கோவை, கபகாய்ச்சல், ருசியின்மை, வாசனையின்மை, மூக்கு ஒழுகுதல், புண் போன்ற பல தொந்தரவுகள், நோய்கள் நீங்கும்.

ஆஸ்துமா, கண் எரிச்சல், உடல் எரிச்சல் நீங்க

முசுமுசுக்கை சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து அதனை நன்கு காய்ச்சி அந்த எண்ணெயில் வாரம் ஒருமுறை ஆஸ்துமா, கண் எரிச்சல், உடல் எரிச்சல் நீங்கும்.

பித்த கிறுகிறுப்பு நீங்க

நான்கு கைப்பிடி அளவு முசுமுசுக்கை இலையை கொண்டு வந்து அம்மியில் வைத்து கொரகொரப்பாக அரைத்து அதை ஒரு பெரிய அடை போல தட்டி தலையில் வைத்து மணலை வறுத்து ஒரு துணியில் கொட்டி மூட்டையாக கட்டி, அந்த அடையின் மேல் வைத்து மண்டையில் சூடேறி உறைக்கும் வரை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த விதமாக ஐந்து முறை வைத்து எடுக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு இவ்விதம் செய்து வந்தால் பித்த கிறுகிறுப்பு மாறிவிடும்.

காசம், ஈழை, இருமல் குணமாக

முசுமுசுக்கை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 30 கிராம் நெய்யில் சேர்த்து வதக்கி ருசிக்காக சிறிதளவு உப்பு சேர்த்து காலையில் ஒரு பகுதியும் மாலையில் ஒரு பகுதியும் சாப்பிட்டு வந்தால் காசம், ஈழை, இருமல் குணமாகும். நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.

நெஞ்சு வலி, புகை இருமல், காச நோய்

நெஞ்சு வலி, புகை இருமல், காச நோய் போன்றவற்றிற்கு இது சிறந்த பச்சிலை மருந்து. முசுமுசுக்கை இலையைச் சாறெடுத்து அதனுடன் கோரோஜனை சேர்த்து மருந்தாக சாப்பிடவேண்டும். ஜலதோஷத்திற்கும் இது நல்ல பயன் தரும்.

மேகநோய்

முசுமுசுக்கை இலை சாற்றுடன் கழுதையின் சிறுநீரை சேர்த்து தயாரிக்கும் மருந்தை கலந்து காலை மாலை என ஆறு நாட்கள் உட்கொண்டால் மேகநோய் எனப்படும் ‘பெண் சீக்கு’ நிச்சயமாக குணமாகும். இது சாப்பிடும் காலத்தில் காரம், உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டியது முக்கியம்.

வெட்டை நோய் (கொனேரியா)

முசுமுசுக்கை கொழுந்து இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து தான்றிக்காயுடன் சேர்த்து அரைத்து எருமை வெண்ணெய் சேர்த்து ஒரு வாரம் சாப்பிட வெட்டை நோய் பூரணமாக குணமாகும்.

உணவு செரியாமை

உணவு செரியாமை வாந்தி எடுக்கும் நிலை அடிக்கடி இருந்தாலும் இதே முறையில் வறுத்து தான்றிக்காயுடன் சேர்த்து சாப்பிடலாம், குணம் தெரியும்.

(2 votes)