வெண்டை காய் வளர்ப்பு

எளிதாக வீட்டுத்தோட்டத்தில் வெண்டைக்காயை எவ்வாறு வளர்க்கலாம் என்று பார்ப்போம்.

சர்க்கரை நோய் தொடங்கி பல உடல் உபாதைகளுக்கும் ஏற்ற காய் வெண்டைக்காய். எல்லா காலங்களிலும் எளிதாக வளரக்கூடியது. விதைப்பு, முளைப்பு, பூத்தல், காய்ப்பு என அனைத்தும் எளிதாகவும் விரைவாகவும் பலன்கொடுக்கக்கூடிய காயும் வெண்டைக்காய் தான்.

வெண்டைக்காய் விதைகளை அனைத்து கிராம விவசாயிகளிடமும் எளிதாக பெறலாம் அல்லது நாட்டுவிதைகள் கிடைக்கும் சந்தைகளிலும் பெறலாம். ஒரு சிறு குடும்பத்திற்கு தேவையான வெண்டைக்காயினைப் பெற சராசரி பத்துச்செடிகள் தேவைப்படும். அதற்கு இருபது முதல் முப்பது விதைகள் தேவைப்படும். ஒரு தொட்டிவைக்க இரண்டு அல்லது மூன்று விதைகளை முதலில் எடுத்துக்கொள்ளலாம். தொட்டியின் அளவினைப்பொறுத்து இரண்டு முதல் நான்கு செடிகளை அதில் வளர்க்கலாம். 


எடுத்துக்கொண்ட வெண்டை விதையினை முதலில் சிறிது பஞ்சகவ்யா நீரில் விதை நேர்த்தி செய்யவேண்டும். நான்கு முதல் ஆறு மணிநேரம் விதைநேர்த்தி செய்த வெண்டைவிதையினை நேரடியாக நடலாம். வெண்டைவிதைகளை நாற்று எடுத்தும் நடலாம். 

வீட்டில் தேவையில்லாத உடைந்த பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். வெண்டை வளர்க்க சற்று ஆழமாகவும், அகலம் குறைவாகவும் இருக்குமாறு தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is soil-potting-mix-for-garden-in-tamil-organic-terrace-garden-in-tamil-home-gardening.jpg

பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும். மண்கலவையினை மண், மணல், மண்புழு உரம் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும்.

பின் விதைநேர்த்தி செய்துள்ள வெண்டைவிதைகளை அரையடி ஆழத்திற்கு ஒரு சிறுதுளையிட்டு விதையை விதைத்து மண்ணை மூடிவிடவேண்டும். 

விரைவாக முளைக்கும் வெண்டை விதைகள் நான்கு இலைவிட்டவுடனே பூக்க தொடங்கிவிடும்.  விதைத்த நாற்பத்தைந்து நாட்களில் காயைப்பெறலாம். வாரம் ஒருமுறை மண்புழு உரம் அளிப்பதும், பத்துநாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் அளிப்பதும் நல்ல வளர்ச்சியையும், காய்ப்பையும் அளிக்கும்.     

எல்லா காலங்களிலும் செழிப்பாக வளரும் வெண்டைக்கு பிடித்த காலம் வெயில் காலம் தான். வெண்டைக்காயினை சரியான நேரத்தில் பறிப்பது அவசியம். ஒருநாள் விட்டால் கூட காய்முற்றி பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்காது. அதுவே நல்ல இளங்காய்கள் சுவையானதாகவும், சத்தானதாகவும் இருக்கும்.   

பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல்

வெண்டையில் பொதுவாக அதிகளவு பூச்சி தாக்குதல் காணப்படுவதுடன் நோய் மற்றும் நூற்புழு தாக்குதலும் காணப்படும். அதிக ஈரப்பதமும் அதன் மென்மைத்தன்மையும் இதற்கு காரணமாக உள்ளது.

பொதுவாக இதனைத்தடுக்க அதிகளவு பூச்சிக்கொல்லிகளும், இராசயனங்களும் பயன்படுத்தப்பட்டு சந்தை விற்பனைக்கு வருகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகமாகவே உள்ளது. பெருமளவில் நரம்பு மண்டல குறைபாடு, புற்றுநோய், மன நோய் போன்றவையும் அதனுடன் மற்ற உபாதைகள், நீரிழிவு நோய், இதய நோய் என ஆரோக்கியமின்மை ஏற்படுகிறது.

வெண்டையில் சிவப்பு சிலந்தி, இலைதத்து பூச்சி, தண்டு மற்றும் காய் துளைப்பான், மஞ்சள் நரம்புத் தேமல் நோய் மற்றும் வேர் முடிச்சு நூற்புழு ஆகிய தாக்குதல்கள் காணப்படும். சிவப்பு சிலந்திகள் வெண்டை இலையினை அடியில் தின்று இலைகளை வளைத்து சுருட்டிவிடும்.

வெண்டை இலைகளை வெள்ளைநிற இலைதத்து பூச்சிகள் பெருமளவில் தாக்கினால் இலைகள் மஞ்சளாக மாறி சுருண்டு விடுவதுடன் செடியும் சிவப்பாக மாறிவிடும்.

காய் மற்றும் தண்டு துளைப்பான் வெண்டைச்செடிக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்த துளைப்பான்கள் இளம் வெண்டை செடிக்குள் புகுந்து மெல்ல மெல்ல செடியின் உட்பகுதிகளை துளையிட்டு உண்டு செடி பட்டுப்போவதற்கு காரணமாகஇருக்கும். 
மஞ்சளாக வளர்ச்சிகுன்றி இருக்கும் வெண்டைச் செடிகளை கண்ணுக்கு தெரியாத நூற்புழுக்கள் தாக்கியிருக்கும். இவை செடிகளின் வேர்களில் முடிச்சுகளாக இருந்து செடியின் வளர்ச்சியையும், காய்ப்பையும் பாதிக்கும்.

இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

  • முதலில் நோய் காணப்படும் செடிகளை உடனடியாக பிடுங்கி அழித்துவிடவேண்டும்.
  • வீட்டுதோட்டத்தில் அங்கங்கே டெல்டா ட்ராப் என்று சொல்லக்கூடிய பொறியினை வைப்பதாலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறியினை வைப்பதாலும் வெள்ளை ஈ போன்ற பூச்சிகளின் தாக்குதல் குறையும். 
  • மேலும் மஞ்சள் நிற பூக்களை வளர்ப்பதும் பூச்சி தாக்குதலை குறைக்கும்.
  • வேப்பங்கொட்டை சாறு கரைசலை வாரம் ஒருமுறை தெளிக்க இவை கட்டுப்படும்.
  • அவ்வப்பொழுது பஞ்சகவ்யா, மண்புழு உரம் அளிப்பதும் இவற்றை பாதுகாப்பதுடன் நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.
  • தரமான நாட்டுவிதைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடியதாக இருக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்களும் அதிகளவில் இருக்கும். 
  • இந்த வெண்டை செடியிலிருந்து மீண்டும் தரமான விதைகளை எடுக்க சிறந்த பட்டத்தில் விதைத்து பறிக்காமல் செடியிலேயே முற்றவிட வேண்டும். பின் அவற்றை வசம்பு, வேம்பு, நாட்டுப்பசு சாணப்பொடி தூவி பாதுகாக்கவேண்டும். மீண்டும் விதைக்க விதை நேர்த்தி செய்து விதைக்கவும்.
  • வெண்டையில் பலவகைகள் உண்டு.. காலமும் பட்டமும் அறிந்து விதைக்க நல்ல பலனை அனைத்துவகை வெண்டையும் அளிக்கும்.

இவ்வாறு இயற்கையில் வளர்ந்த வெண்டையில் இருக்கும் சத்துக்களுக்கு ஈடுஇணையே இல்லை. இயற்கையில் விளையும் இந்த வெண்டைக்காயினை சமைக்காது அன்றாடம் பச்சையாக உண்ண பலப்பல உடல் உபாதைகள் காணாமல் போகும். உடலின் நோய்த்தடுப்பாற்றல் அதிகரிப்பதுடன் உடல் பருமன் குறையும். சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும், சிறுநீரக பாதிப்பிற்கு மாமருந்தாகவும் இயற்கையில் விளைந்த இந்த வெண்டைக்காய் உதவும்.