விதைகளே பேராயுதம்

விதைகளைப் பற்றிய அறிமுகம் – விதைகள்…
விதைகளும் நமது முன்னோர்களின் அறிவியலையும் தெரிந்துக்கொள்ள – விதைகளும் விழாக்களும்….
நாட்டு விதைகள் / மரபு விதைகள் – காய்கறி விதைகள், கீரை விதைகள்

இயற்கையையும், மண்ணையும் நேசித்த நமது பண்பாட்டில் மறுவிதைப்பிற்கு விதைகளை எடுத்துவைக்காமல் உண்ணக்கூடாது என்ற உயர்த்த சிந்தனை இருந்தது. பல்லுயிர் பெருக்கம் பற்றியெல்லாம் இன்று நவீன வலைத்தளங்களிலும், புத்தகத்திலும் பார்க்கலாம். நமது முன்னோர்கள் அவற்றோடு வாழ்ந்தவர்கள். இயற்கை நமக்கு அளித்த உணவிற்கு கைமாறாக பல பல உயிரினங்களும் பல்கிப் பெருகி உதவும் விதைகளை என்றும் சேமித்து பாதுகாத்து விதைத்தனர். அந்த விதைகளிலே உயிரும் இருந்ததும் உயிர் சூழலை பாதுகாக்கும் வல்லமையும் இருந்தது.

ஒரு விதை முளைத்தால் அதிலிருந்து ஆயிரமாயிரம் விதைகளும் லட்சக்கணக்கில் உணவும் கிடைக்கும் என்பது தான் உண்மை. ஒரு நெல் மணி முளைத்தல் ஆயிரம் நெல்லும் அதிலிருந்து அரிசியும் கிடைக்கும், அதே போல் ஒரு கத்திரி விதை முளைக்க அதிலிருந்து பல பல கத்திரிக்காயும், ஆயிரமாயிரம் கத்திரி விதைகளும் கிடைக்கும். இந்த உண்மை இன்று காணாமல் போக நமது உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும் (சத்திற்கும்) பஞ்சம் வந்துவிட்டது.

விதை… விதைக்க முளைக்கும், காய்க்கும், மீண்டும் விதையைக்கொடுக்கும்..

அன்று அவர்கள் வைத்திருந்தது உண்மையான விதைகள் அதாவது விதை… விதைக்க முளைக்கும், காய்க்கும், மீண்டும் விதையைக்கொடுக்கும்.. இந்த சூழற்சி தொடர்ந்து மீண்டும் விதை என்று சுழலும். இன்றிருக்கும் விதைகள் விதைக்க முளைக்கும், காய்க்கும் ஆனால் விதையைக்கொடுக்காது மாறாக உணவை மட்டுமே தரும். மீண்டும் உணவு கிடைக்க வேண்டுமானால் மீண்டும் விதையை வாங்க வேண்டும் (இதற்கு பெயர் மலட்டு விதை). சுழற்சி என்ற ஒன்றே இல்லை.. சுழற்சி இல்லையானால் உணவு (ஆரோக்கியம்) பஞ்சமே மிச்சம். 

அதுதான் விதைகள் கிடக்கிறதே மீண்டும் வாங்கி விதைக்க வேண்டியதுதானே என்கிறீர்களா?

சுலபமாக தோன்றலாம், விதைகளை சேமித்து பராமரித்து, அவை மீண்டும் முளைக்குமா? முளைக்காதா? என்றெல்லாம் கவலையில்லாமல் உணவு கிடைக்குமே எனறு நினைக்கலாம். இந்த நிலை தான் இன்று நம் வீட்டு ஆண் பெண்ணிடமும் உள்ளது. சுழற்சி அறுபட்டுள்ளது… தாத்தா பாட்டி, தந்தை தாய், மகன் மருமகள், மகள் மருமகன் பின்…….? பேரன் பேத்தி என்ற நிலை அறுபடுகிறது. இன்றைய தலைமுறையினர் fertility centerகளில் விதைப்பில்லாமல் காத்துக்கிடக்கின்றனர்.  எளிதாக ஆதரவின்றி ஆசிரமங்களில் கிடைக்கும் குழந்தைகளை எடுத்து வளர்க்கலாமே…. எதற்காக லட்சம் லட்சமாக செலவு செய்யவேண்டும். இரண்டும் குழந்தைகள் தானே.

அதெப்படி, நமது குழந்தையும் மற்ற குழந்தையும் ஒன்றாகுமா என்கிறீர்களா. அதேபோல் தான் நமது செடிகளிருந்து கிடைக்கும் விதையும் கடையில் வாங்கும் விதையும் வேறுபடும். நமது மண்ணில் நமது நீருடன் நமது தட்பவெப்பத்தில் விளையும் பயிர்களிலிருந்து கிடைக்கும் விதைகள் அந்த இடத்திற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்டு பக்குவமாக இருக்கும். இந்த விதைகள் பூச்சி, நோய், மழை, வெயில் என்ற எந்த இயற்கையின் தாக்கத்தினையும் எதிர்கொண்டு நல்ல விளைச்சளை இயற்கையாக அளிக்கும். இதுவே பாரம்பரிய விதை. பல தலைமுறைகளை கடந்து விதை, செடி, தானியம், விதை என்று சுழன்று கொண்டிருப்பது. அதுவே கடைகளில் கிடைக்கும் மலட்டு விதைகள் எதற்கும் தாக்குபிடிக்காது. விளைச்சலில் மட்டும் பாதிப்பை இந்த மலட்டு விதைகள் ஏற்படுத்த வில்லை நமது பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி, சுழற்சியை அறுக்கிறது. 

காசு பணம் செலவு செய்யாமல் தூக்கிப்போட்ட பாகல் விதைகள் வேலிகளில் அன்று முளைத்தது. அவற்றை உண்ண ஆரோக்கியமாக இருந்தோம். ஒரு பாகல் விதை பல பல பாகற்காயையும் சில பாகல் விதைகளையும் அளித்தது. 

இன்று அதிக பணம் கொடுத்து மலட்டு விதைகளை வாங்கியும் அவை முளைப்பதில் சிரமம், அதற்காக அதிக இரசாயனம், பூச்சிகள் வராமல் இருக்க பூச்சிக்கொல்லி என எல்லாவற்றையும் அளித்தாலும், மீண்டும் முளைக்கும் திறனற்ற காய்கள், அதிக இரசாயனங்கள், சத்தற்ற உணவு.

இந்த நிலையே தொடர்ந்தால் நமது நிலங்களில் வேற்று விதைகள் முளைப்பதைப்போல் நமது முதலெழுத்துடன் வேற்று குழந்தைகள் நமது வீடுகளில் இனி வளருவார்கள். பார்க்க விதைகளும், குழந்தைகளும் வேறுபட்டது. இன்று உணவிற்கு வேறுவழியில்லை நமது பாரம்பரிய விதைகள் பல தொலைந்துவிட்டதே அதே போல் நமது ஆரோக்கியமும் அதனுடன் தொலைந்ததே வேறு வழியில்லை.

விதைகளே பேராயுதம்

விதைகளே பேராயுதம்‘… இவற்றினை வைத்து எந்த அணுகுண்டும் நிகழ்த்த முடியாத அளவு நாடு, சமூகம், இனம் என எல்லாவற்றையும் அழித்துவிடலாம். நமது பாரம்பரிய விதைகளை இழந்தால் நமது மரபையும், மரபணுவையும் இழக்கநேரும். நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு என பலவற்றை இழக்க நேரும். நாம் என்ற அடையாளம் காணாமல் போகும். மாட்டிக்கொண்டிருக்கும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் வரும் காலங்களில் நமது சமூகத்தையே யாரும் காப்பாற்ற முடியாது. நமது பாரம்பரியம் காப்போம். நமது மரபிற்கும் மரபணுவிற்கும் ஏற்ற உணவினை நமது பாரம்பரிய விதைகள் மூலம் பெருக்குவோம். “எதை உண்கிறோமோ அதுவாக மாறுகிறோம்”. “you are what you eat”.

(6 votes)