மண்புழு உரம் தயாரிப்பது எப்படி

நமது வீடுகளில் எளிதாக எவ்வாறு மண்புழு உரம் தயாரிப்பது என பார்ப்போம்.

வீட்டில் மண்புழுக்களா? என்று பயப்பட வேண்டாம். வீட்டிலிருக்கும் பால்கனியில் கூட மண்புழுக்களை வைத்து உரம் தயாரிக்கலாம். மண்ணை விட்டு வெளியில் வராது.

ஏதேனும் நிழல்பாங்கான, சற்று வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் ஒருமாதமாக வீட்டுக்கழிவுகளை மக்கவைத்திருக்கும் தொட்டியை “தொட்டி முறையில் வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம்” எவ்வாறு தயாரிப்பது என்ற பகுதியில் உள்ளதுபோல் இயற்கை உரம் தயார்செய்து அதனை முதலில் எடுத்துக்கொள்ளவும்.

பின் அருகில் இருக்கும் பெரிய நிழல் கொடுக்கும் வளமான மரத்தின் அடியில் லேசாக தோண்டினால் கிடைக்கும் பத்து பதினைந்து மண்புழுக்களை மண்ணுடன் வெளிச்சம் படாமல் எடுத்து வரவேண்டும் அல்லது அருகிலிருக்கும் ஏதேனும் அரசு வேளாண் நிலையங்களிலிருந்து மண்புழுக்களை வாங்கிக்கொள்ளலாம். பின் அவற்றை ஒருமாதமான மக்கிய சமையலறைகழிவுகள் உள்ள தொட்டியில் விடவேண்டும்.

நமது சமையலறை உரத்தினை பராமரித்தவாறு இதனையும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொருநாளும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு தேவைக்கேற்றவாறு தண்ணீர் தெளிக்கவேண்டும். சாணக்கரைசல், சாணப்பொடியுடன் மண்புழுக்கள் விரும்பி உண்ணும் வெல்லப்பாகினையும் தெளிக்கவேண்டும். இவற்றை பிரட்டிவிடவேண்டாம்.

ஒவ்வொரு வாரமும், அந்த தொட்டியிலிருந்து மேலாக குருணை குருணையாக கிடைக்கும் கருப்பு உரத்தைமட்டும் எடுத்துக்கொண்டு நாம் அடுத்ததாக சேர்த்து தயாரித்து வைத்திருக்கும் வீட்டுக்கழிவு மக்கு உரத்தை இதில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கழிவுகளையும் உரமாக்கலாம், ஒவ்வொரு வாரமும் நமக்கு மண்புழு உரமும் கிடைக்கும். இந்த தொட்டியை ஏதேனும் சாக்கு கொண்டு மூடிவைக்கவேண்டும். பல்லி, எலி இவற்றிலிருந்து மண்புழுக்களை பாதுகாக்கவேண்டும். மண்புழுக்களின் முட்டைகளை பாதுகாத்து அதிலேயே வைக்க அவை பெருக்கமடையும்.

மண்புழு உரம் என்பது இந்த வீட்டுக் கழிவுகளை மண்புழுக்கள் அவற்றின் நொதிகள், நுண்ணுயிர்களுடன் சிதைத்து நல்ல உரமாக மாற்றுவது. இதனில் பலமடங்கு செடிகள் வளர தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களுடன் பல நுண்சத்துக்களும் அடங்கியுள்ளது. மேலும் இவை செடிகளில் ஏற்படும் நோய்களையும் குறைக்கும், சத்துக்களையும் அளிக்கும், செடிகளுக்கு நல்ல சத்துக்களை அளிப்பதால் பூச்சித்தாக்குதலும் கட்டுப்படுத்தப்படும். 

வீட்டில் தொட்டிகளில் இல்லாமல் தரையில் மண்புழு உரம் தயரிக்க மண்புழுக்களை எங்கிருந்தும் எடுத்துவரவேண்டாம். நமது வீட்டிலிருக்கும் மர நிழலில் மண்ணில் மூன்றடிக்கு தோண்டியிருக்கும் இடத்தில அன்றாடம் நமது வீட்டுக்காய்கறிக்கழிவுகளை மக்கவைக்கும் அதே குழியில் சிறிது சாணத்துடன் சம பங்கு வெல்லத்தையும் கலந்து ஊற்ற விரைவில் மண்புழுக்கள் வந்துவிடும், கவலைவேண்டாம். 

இவ்வாறு வீட்டுக்கழிவுகளைக்கொண்டு மண்புழு உரத்தினை தயார் செய்து நமது தோட்டத்திற்கு தேவையான உரத்தினை நாமே செய்து பயன்படுத்தலாம். குப்பைகளை உரமாக்குவதால், செலவுகளை கட்டுப்படுத்துகிறோம். 

சத்தான, இயற்கையான காய்களையும், பழங்களையும் உண்மையில் எந்த செலவுமின்றி நமது நண்பனான மண்புழுக்களின் துணையுடன் பெறலாம். எந்த பலனும் எதிர்பார்க்காமல் இரவு பகலாக நமக்க உழைக்கும் நண்பன் மண்புழுக்கள். நமது உற்றார் உறவினர்களுக்கும் இதனை பகிர்ந்து அனைவரும் பயன்பெற செய்வோம், குப்பையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்.

மேலும்
மண் புழுக்கள் – வகைகள்
மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

(1 vote)