மண் கலவை – வீட்டுத் தோட்டம்

மண் கலவையை எவ்வாறு தயார்செய்வது – வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டத்தில் மண்ணின் அவசியத்தை முதலில் தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – மண்.

மண்ணில்லாத தோட்ட முறை (Soil less Cultivation) அதன் முழு பயனை கொடுப்பதில்லை. சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவாது. காய்களையும், கீரைகளையும் பெறலாமே தவிர உண்மையான சத்துக்களை இந்த காய்களும் கீரைகளும் அளிக்காது.

தோட்டம் அமைக்க மண் அவசியம் என்றவுடன் மொட்டைமாடிகளில் எப்படி இவ்வளவு மண்ணை வைப்பது, பாரம் தாங்குமா என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.

மண் என்பது அதன் கரிம அளவைக் கொண்டே தரம் பிரிக்கப்படுகிறது. பொதுவாக உயிருள்ள மண் என்பது பாறை துகள்கள், ஈரப்பதம், காற்று, இலைதழை மக்கு போன்றவற்றைக் கொண்டது. மக்கு பொருட்களை மண்ணில் கலப்பதால் மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் மண்ணை வளமானதாக மாற்றுகிறது. கரிமம், தாதுப்பொருட்கள், நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை இவற்றால் இயற்கையாக உருவாகிறது.

ஒவ்வொரு முறையும் செடிகளின் அறுவடைக்கு பின் மண்ணைமீண்டும் வளமாக மற்றவும், நல்ல விளைச்சளைப் பெறவும் இவை துணைபுரியும். உவர், களர், மணல் என உயிரற்ற அனைத்து மண்ணையும் மக்கு குப்பைகள், எருக்கள், சில பயிர்களின் விதைப்புகள் துணை கொண்டு வளமான மண்ணாக சிலமாதங்களிலேயே மாற்றலாம்.

உவர், களர், மணல் என உயிரற்ற அனைத்து மண்ணையும் மக்கு குப்பைகள், எருக்கள், சில பயிர்களின் விதைப்புகள் துணை கொண்டு வளமான மண்ணாக சிலமாதங்களிலேயே மாற்றலாம்.

தோட்டமமைக்க தேவையான மண் கலவையை எவ்வாறு தயார்செய்வது என பார்போம்…

செம்மண் அல்லது நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மேல் மண், கரித்தூள், சாம்பல், மணல், மக்கிய எரு, இலை, தழை, காய்ந்த சருகுகள், மக்கும் குப்பைகள், தேங்காய் நார்கழிவு (துகள்கள்), மண்புழு உரம், கரும்பு சக்கை போன்றவற்றை முதலில் எடுத்துக்கொள்ளவும்.

அனைத்தும் கிடைக்கவில்லை என்றால் மண், மணல், மக்கிய எரு, மண்புழு உரம் போன்றவற்றை ஒவ்வொரு பங்கு எடுத்துக்கொண்டு அவற்றுடன் எவையெல்லாம் கிடைக்கிறதோ அவற்றை ஒருபங்கு என்று மொத்தம் ஐந்து பங்காக எடுத்துக்கொண்டு ஒன்றாக சேர்த்து தயார்செய்யலாம். தயார் செய்த மண்கலவையுடன் ஒரு சதவிதம் வேப்பம்புண்ணாக்கையும் சேர்த்து கலந்துக் கொள்ளவேண்டும்.

இந்த கலவையை தயாரிக்க சில பொருட்கள் முக்கியமாக தேவை.

  • அவற்றில் செம்மண்/ சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் மண், மண்புழு உரம், மக்கு எரு போன்றவை அவசியமாக தேவைப்படுவது.
  • அடுத்ததாக கரித்துகள், சாம்பல் அல்லது மணல் போன்றவற்றில் எதாவது ஒன்றையும் ஒருபங்காக எடுத்துக்கொள்ளலாம்.
  • அதே போல் இலை தழை, மக்கும் குப்பை, தேங்காய்நார் கழிவு துகள்கள், தூள் செய்யப்பட்ட கரும்பு சக்கை போன்றவற்றில் கிடைப்பதையும் சேர்த்து ஒருபங்காக எடுத்துக்கொள்ள

அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும். இந்த மண்ணை அடியில் துளையிட்ட தொட்டியில் முக்கால் பங்கு கொட்டி செடிகளை வளர்க்கலாம். வாரம் ஒருமுறை இந்த தொட்டிக்கு மண்புழு உரம், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள் அளிக்க செடிகள் நன்கு வளரும்.

இந்த மண்ணில் லேசாக தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்குமாறு வைத்துக்கொண்டு கைகளில் லேசாக பிடித்தோமானால் மண் கொழுக்கட்டை மாதிரி இருக்கும் அதுவே லேசாக அழுத்தினால் உடைந்து உதிர்ந்துவிடும். இதுவே மண் சரியான பக்குவத்தில் வளமாக உள்ளது என்று தெரிந்துகொள்ள எளிய முறை. மணல், களிமண்ணை இந்த இரண்டு முறைகளிலும் செய்ய முடியாது அதனாலேயே இவை செடிகள் வளர தகுதியற்றவையாகிறது. 

வளமான மண் என்பது மூன்று தன்மைகளை கொண்டது.

  1. மண்ணின் பொலபொலப்பு (மக்கும் கழிவுகளால் கிடைப்பது)
  2. மண்ணின் உயிர்தன்மை (மண்புழு, கரையான், நுண்ணுயிர்கள் போன்றவை வாழ்வது)
  3. இந்த இரண்டு உயிரியல் மாற்றத்தால் ஏற்பாடும் வேதியல் தன்மை (இவையே மண்வாசனையை அளிப்பது)

மண்ணை என்றும் வளமாக வைக்க மண்ணிலிருந்து எதை எடுக்கிறோமோ அதனை மீண்டும் மண்ணிற்கு கொடுக்க வேண்டும்.

மண்ணிலிருந்து கிடைக்கும் பயிறுகளை நாமும், அதன் வைக்கோலை ஆடுமாடுகளுக்கும் (ஆடு மாடுகள் இடும் சாணம் மீண்டும் மண்ணுக்கு உரம்), அடியை நிலத்திற்கும் இட என்றும் மண்வளமானதாக இருக்கும். இதனை கிராமங்களில் ‘நுனி வீட்டிற்கு, நடு மாட்டிற்கு, அடி காட்டிற்கு‘ என்று கூறுவார்கள். நாமும் நமது வீடுகளில் வைக்கும் தொட்டிகளில் உள்ள மண்ணினை அறுவடைக்கு பின் இவ்வாறு வீட்டுக்கழிவுகள், மக்கு எரு போன்றவற்றை கலந்து மண்ணை புதுப்பித்து மீண்டும் விதைக்கலாம்.