குழந்தைகளுக்கான சில ஆரோக்கிய உணவு யோசனை

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தாய் யோசித்து, அதனை குழந்தைக்கு செய்து கொடுப்பதே ஒரு பெரிய வேலைதான் என்றாலும் அதனை குழந்தை மறுக்காமல் உண்டாலே போதும் என்பது தான் தாயின் மனநிறைவே உள்ளது. சரி குழந்தைக்கு ஒவ்வொரு வேளையும் ஏதேனும் உணவை செய்து கொடுக்க முடியுமா என்றால் முடியாதுதான். அதிலும் வேலைக்கு செல்லும் தாயாக இருந்தால் இது சாத்தியமா?

அதற்காக குழந்தைக்கு வெளி உணவுகளையும், பாக்கெட்டுகளில் கிடைக்கும் உணவுகளையும், பிஸ்கட், சிப்ஸ் போன்ற கடை உணவுகளையும் வாங்கித்தருவது நல்லதா? அது வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதாவது அஸ்திவாரத்தை அசைக்கும் செயலாகும்.

அதனால் எளிதாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சில உணவுகளை கொடுத்துப் பழக்குவதும், அன்றாடம் இந்த உணவுகளை இடை உணவாக கொடுப்பதும் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும். மேலும் அன்றாடம் குழந்தைகளுக்கு வித விதமாக ஒவ்வொரு வேளையும் உணவுகளை செய்யாமல் அன்றாடம் நாம் வீடுகளில் என்ன உணவை தயாரிக்கிறோமோ அதனையே கொடுக்கவும் வேண்டும்.

தமிழர்களின் பிரதானமான உணவு அரிசி, அதனால் கட்டாயம் ஒரு வேளை உணவில் அரிசி சோறு கட்டாயம் இடம் பிடிக்க வேண்டும். அரிசிகளில் பல பாரம்பரிய அரிசி விதங்கள் தமிழகத்தில் உள்ளது, அதில் ஏதேனும் ஒன்றில் மாற்றி மாற்றி சாதம் செய்து தரலாம். மற்றொரு வேளை இட்லி, தோசை போன்ற உணவுகளை அளிக்கவேண்டும். மூன்றாவது வேளை குழந்தைகளுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சத்தான உணவை செய்து தரலாம். இது தவிர குழந்தைகளுக்கு என்னென்ன கொடுக்கலாம் என பார்க்கலாம்.

வளரும் குழந்தைகளுக்கான சில சத்தான உணவு யோசனை

  • பொட்டுக்கடலை கொடுக்கலாம். பொட்டுக்கடலையை அப்படியே இரண்டு ஸ்பூன் அளவு ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து கொடுக்கலாம். நேரம் இருந்தால் பொட்டுக் கடலையை வெல்லப்பாகில் உருண்டைகளாக செய்துவைத்துக் கொண்டு கொடுக்கலாம்.

  • குழந்தைகள் தேங்காயை விரும்பி உண்பார்கள். தேங்காயை பத்திகளாக வகுந்து எடுத்துக் கொடுக்கலாம். நன்கு சுவைத்து மென்று உண்பார்கள். இதுவே ஒரு வேளை சிறந்த இடை உணவாக இருக்கும்.
  • அரிசியை மண்சட்டியில் நன்கு வறுத்து வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறந்த உணவுகளில் இதும் இருக்கும்.
  • அரிசிமாவு, சிறிது உளுந்து மாவு சேர்த்து முறுக்கு, தட்டை என சில சத்தான நொறுக்குத் தீனி உணவுகளை அளிக்கலாம்.
  • பாசிப்பருப்பு, கருப்பு உளுந்து ஆகியவற்றை குழந்தைகளுக்கு முளைக்கட்டி அப்படியே எதுவும் சேர்க்காமல், வேகவைக்காமல் கொடுக்கலாம், அப்படியே அதன் சுவையை பொதுவாக ஏழு வயது வரை இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
    அதிலேயே சிறிது சின்ன வெங்காயம், தக்காளி, மிளகுதூள், சீரகத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு பிழிந்து கொடுக்கலாம். அல்லது வெறும் சிறிதளவு உப்பு, மிளகு சீரகத் தூள் சேர்த்துக் கொடுக்கலாம். ஒருநாள் சிறிது தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். நிலக்கடலையையும் இவ்வாறு தரலாம்.
  • ஒருநாள் பாசிப்பருப்பை வறுத்துக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாசிப்பருப்பை சற்று அதிகமாக மூன்று நன்கு நாட்களுக்கு சேர்த்து வறுத்து வைத்துக்கொண்டு கொடுக்கலாம். அதற்கு மேல் வறுத்து வைத்துக் கொள்ள வேண்டாம். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுத்தால் அடுத்த நாள் குழந்தைகள் அதனை உண்ண மறுப்பார்கள்.

  • அவல் உணவுகளும் குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளே. அவலை சிறிது நேரம் ஊறவைத்து சிறிது வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள். தமிழகத்தின் பாரம்பரிய அரிசிகளான மாப்பிள்ளை சம்பா அவல், சிறுதானிய அவல் போன்றவற்றை கொடுக்க சிறந்த ஊட்டச்சத்தையும் பெறுவார்கள்.
  • மேலும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு பழம், காய்களையும் அப்படியே கொடுக்கலாம். வெண்டைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்களை அவ்வாறே பச்சையாக சாப்பிடவும் குழந்தைகளைப் பழக்குவது சிறந்தது.
  • குழந்தைகளுக்கு கட்டாயம் ஒவ்வொருநாளும் தேங்காய், கடலை, பாதாம், முந்திரி, அத்திப்பழம், பேரிச்சை போன்ற உணவுகளை கொடுப்பது சிறந்தது.

இவ்வாறெல்லாம் குழந்தைகளுக்கு எளிதான உணவுகளை கொடுத்துப் பழக்குவது நல்ல உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் அளிக்கும். சிறுவயதில் வரும் உடல் பருமன், நீரிழிவு, மலச்சிக்கல் நீங்கும். சோம்பல் அகலும். மேலும் நினைவாற்றல் அதிகரிக்கும், இரத்த விருத்தியாகும், புத்துணர்வு பெறுவார்கள்.

(1 vote)