வெங்காயம் – நம் காய்கறி அறிவோம்

அன்றாட உணவுகளில் காய்கறி பருப்பு என எது இருக்கிறதோ இல்லையோ ஆனால் வெங்காயம் கட்டாயம் நம் தமிழக உணவுகளில் இடம் பிடிக்கக் கூடிய ஒரு பொருள். வெங்காயம் உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கக் கூடிய உகந்த ஒரு பொருளாகவும் உள்ளது. ரத்த நாளங்களில் ஏற்படும் படிமங்களை கரைக்கக் கூடிய ஆற்றல் நிறைந்த ஒரு அற்புதமான உணவுப் பொருள் வெங்காயம். அது மட்டும் அல்லாமல் பலவிதமான மருத்துவ குணங்களையும் சத்துக்களையும் தன்மைகளையும் உள்ளடக்கியது ஒரு உணவுப் பொருளும்.

இன்று வெங்காயம் இல்லாத சமையலே நாம் பார்க்க முடியாது. ஆனால் அந்த காலத்தில் இந்த வெங்காயத்தை சமையலில் பயன்படுத்தியதை விட அன்றாடம் பச்சையாக காலையில் பழைய சாதத்துடனும் அல்லது கூழுடன் சேர்த்து நம் முன்னோர்கள் உண்டனர். இதனால் அவர்களின் உடலில் அதிகமான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பார்க்கமுடியும். இன்று 90 வயது இருக்கக்கூடிய பெரியவர்களுக்கு இருக்கும் ஆற்றல் 40 வயதில் இருப்பவர்களுக்கு கூட இருப்பதில்லை. இதற்கு மிக முக்கியமான காரணமாக அந்த காலத்தில் நம் முன்னோர்கள் உண்ட பழைய சாதமும் அதற்கு துணையாக எடுத்துக்கொண்ட வெங்காயமும் தான்.

வெங்காயம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய ஒரு அற்புதமான பொருள். பல உலக நாடுகளில் நோய் எதிர்ப்பாற்றலுக்கும், தொற்று நோய்களுக்கும் இன்றும் சிறந்த மருந்தாக வெங்காயம் பயன்படுகிறது. பல ஆராய்ச்சி முடிவுகளும் இதனை வெளிப்படுத்தியுள்ளது. வெங்காயம் இரத்த உறையும் தன்மையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் நீரிழிவு, புற்று நோய், கட்டிகளை கரைக்க, கபத்தை வெளியேற்ற, சளியைப் போக்க, இனப்பெருக்க உணர்ச்சியை அதிகரிக்க, இதயத்தை பலப்படுத்த என பலவகைகளில் நமக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.

அதனால் பச்சையாக அல்லது ஏதேனும் ஒரு வகையில் சமைத்து வெங்காயத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது. வாரத்திற்கு ஒரு கப் அளவு பச்சையாக உண்பதோ அல்லது நான்கு கப் சமைத்தோ எடுத்துக் கொள்ளலாம். சளி, நோய் தொற்று உள்ளவர்கள் வெங்காயத்தை நெய்யில் வறுத்து அல்லது வதக்கியும் உண்ணலாம். விரைவில் தொற்றிலிருந்து, தொந்தரவிலிருந்து வெளிவரலாம், சிறந்த, எளிய வீட்டு மருத்துவம் இது.

வெங்காயத்தில் அதன் காரம் மற்றும் சல்பர் சத்துக்களுடன் நார் சத்துக்கள், வைட்டமின் மற்றும் தாது சத்துக்களும் உள்ளது. முடிந்த வரை இரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாமல் விளையும் வெங்காயத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. வீட்டிலேயே மிக எளிமையாக வெங்காயம் வளர்க்கவும் முடியும். மேலும் சின்ன வெங்காயத்தின் பயன்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தின் சில மருத்துவகுணங்கள்

  • இருதயத்தை காக்கும்
  • இரத்தத்திற்கு சிறந்தது
  • பக்கவாதத்தை தடுக்கும்
  • நல்ல கொழுப்பை அதிகரிக்கும்
  • இரத்தம் உறைதலைத் தாமதமாக்கும்
  • நீரிழிவைக் கட்டுபடுத்தும்
  • பாக்டீரியாக்களை அழிக்கும்
  • முச்சுக்குழாய் தடையை நீக்கும்
  • இரத்தத்தை நீர்த்துப் போகவைக்கும்
  • கண் பார்வைக்கு சிறந்தது
  • நுரையீரலை பலப்படுத்தும்
  • முளையை பாதுகாக்கும்
  • வீக்கங்களை நீக்கும்
  • ஜீரண ஆற்றலை அதிகரிக்கும்
  • காய்ச்சலை விரைவில் போக்கும்
  • நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
  • சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும்
(1 vote)