சின்ன வெங்காயம் வளர்க்க வாங்க

சமையல் என்றதும் எது இருக்கிறதோ இல்லையோ வெங்காயம் இல்லாத சமையல் குறைவுதான் எனலாம். அதிலும் சின்ன வெங்காயத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல பல புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் மாமருந்தாக சின்ன வெங்காயம் உள்ளது.

வைட்டமின் சத்துக்கள், நார் சத்து, கந்தகம், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் என பல சத்துக்கள் சின்ன வெங்காயத்தில் உள்ளது. இதய நோய், நீரழிவு, மூட்டுவலி, ஆஸ்துமா, கண் நோய், நோய் எதிர்ப்பு திறன் என பலவற்றிற்கு நல்லதாக உள்ளது.

இவ்வளவு நன்மைகளைத்தரும் சின்னவெங்காயம் இன்று அதிக விலையில் சந்தையில் விற்கப்படும் ஓன்றாகும். நல்ல பொருள் அதிகம் விற்றாலும் பரவாயில்லை, ஆனால் இவ்வளவு நன்மைகள் தரும் இந்த சின்ன வெங்காயம் மண்ணில் இடும் பல இரசாயனங்களையும், பூச்சி கொல்லிகளையும் நேரடியாக எடுத்துக்கொண்டு விளைகிறது.

உடலுக்கு பல தீங்கினை செய்யும் இந்த நச்சுக்களால் சந்தையில் கிடைக்கும் சின்ன வெங்காயத்தின் குணம் முற்றிலும் மாறுபடுகிறது. நன்மைகளுக்கு பதில் பல தொந்தரவுகளையே அதிகம் தருகிறது. அதனால் நாமே நமது வீட்டில் சின்ன வெங்காயத்தை நம்மால் முடிந்தவரை அறுவடை செய்யலாம். வெங்காயம் மட்டுமல்லாது சத்துக்கள் நிறைந்த வெங்காயத்தாளையும் இதனுடன் பெற்று பயன்பெறலாம்.

வீட்டிலேயே சின்ன வெங்காயம் வளர்க்க நல்ல வெயில் படும் இடம், ஆழமான அதேசமயம் அகலமான தொட்டி தேவை. தொட்டியின் அடியில் நீர்வெளியேற சிறு துளைகள் இடவேண்டும். விதையென்று எங்கும் அலையாமல் வீட்டிலிருக்கும் சின்னவெங்காயத்தில் நல்ல நேர்த்தியான வெங்காயத்தை தேர்வு செய்து எடுக்கவும். (பல நேரம் வீட்டில் இருக்கும் வெங்காயம் முளைத்திருப்பதைப் பார்த்திருப்போம்). ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்கள் சின்ன வெங்காயம் வளர்க்க ஏற்ற பருவங்களாகும்.

 

அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ட்ரேயில் முக்கால் பங்கு நிரப்பவும்.

அந்த மண்ணில் குறைந்தது மூன்று அங்குல இடைவெளி விட்டு தேர்ந்தெடுத்துவைத்திருக்கும் சின்னவெங்காயத்தை ஒவ்வொன்றாக தலைகீழாக (கொண்டைபோன்ற வேர்ப்பகுதி கீழேயும் முனைப்பகுதி மேல் நோக்கியும்) நடவேண்டும். பின் அதற்கு தேவையான நீரினை அளிக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நீர்தெளிக்க வேண்டும். வெயில் காலங்களில் ஈரத்தன்மை குறைய சற்று கூடுதலாக ஒருமுறை தெளிக்கவேண்டும்.

வெங்காயத்தாள் தேவைப்பட அவை நன்கு வளர்ந்து வந்தவுடன் வேருடன் அறுவடை செய்யலாம் அல்லது மேல் இருக்கும் தாள் நன்கு பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம். நீரில்லாமல் காய்ந்தாலும் மேல் இருக்கும் தாள் வாடிவிடும்.. அதை வைத்து வெங்காயம் தெரிவித்தது என்று தப்புக்கணக்கு போடக்கூடாது. 


வாரம் ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தகரைசல், அரப்பு மோர் கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை அளிக்க செழிப்பாக வளரும். எளிதாக, இயற்கையாக வளர்க்கப்படும் இந்த சின்னவெங்காயத்தில் இருக்கும் சத்திற்கும், கடையில் கிடைக்கும் சின்னவெங்காயத்திற்கும் சம்மந்தமே இல்லை. நாமே நமது வீட்டில் வளர்த்த இந்த சின்னவெங்காயத்தை பச்சையாகவும், மோருடனும், பாரம்பரிய அரிசியில் செய்த பழைய சாதத்துடனும் சேர்த்து உண்ண எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு திறன் கூடுவதோடு, பல உயிர்கொல்லி நோய்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

(1 vote)