மாப்பிள்ளை சம்பா அரிசி சமைக்கும் முறை / How to Cook Mapillai Samba Rice

பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒரு அரிசி நம் மாப்பிள்ளை சம்பா அரிசி. இளவயதினருக்கு அதாவது திருமணத்திற்கு தயாராக இருக்கும்.. திருமணமான ஆண்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா.

மாப்பிள்ளை சம்பா அரிசியைப் பற்றி தெரிந்துகொள்ள – இங்கு இணையவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் நன்மைகள் – இங்கு இணையவும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற நம் பாரம்பரிய அரிசி. உடலில் ஏற்படும் சிறு உபாதைகள் முதல் புற்றுநோய்க்கும் சிறந்த உணவாக இருக்கக் கூடியது. செல் சிதைவை தடுக்கும்.

காரணம் தெரியாமல் வரும் பல நோய்களுக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி உணவை உட்கொள்வதால் நிவாரணம் கிடைக்கும்.

நமது உடலுக்கும் மரபணுவுக்கும் பரிச்சயமான பாரம்பரிய அரிசி வகைகளில் சிகப்பு நிறத்தை கொண்ட அரிசி இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி. சற்று மோட்டாவாக அழுத்தத்துடன் இருக்கும் அரிசி. பட்டை தீட்டப்படாத இந்த சிகப்பு மாப்பிள்ளை சம்பா அரிசியின் தவிட்டில் (சிகப்பு நிற பகுதியில்) பல பல சத்துக்கள் உள்ளது. உடலுக்கு தேவையான புரதம், அமினோ அமிலம், கொழுப்புச் சத்துக்கள், உடலுக்கும் குடலுக்கும் தேவையான நார்ச்சத்துக்கள், தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த அரிசியை சமைப்பதே ஒரு கலைதான்.. பக்குவமாக சத்துக்கள் குலையாமல் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை தயாரித்து உட்கொள்ள தொண்ணூறு வயதிலும் கோலின்றி நடக்கலாம். அவ்வளவு ஆரோக்கியத்தை அளிக்கும் சிறந்த நம் தமிழக பாரம்பரிய அரிசி.

இந்த அரிசியை குக்கரில் சமைக்கலாமா?

பொதுவாக எந்த உணவையும் அதிக அழுத்தம் (பிரஷர்) கொடுத்து சமைப்பது சிறந்ததல்ல. இந்த அதிகப்படியான அழுதத்தால் உணவிலிருக்கும் தேவையற்ற வாயுக்கள் வெளியேறாமல் உணவிலேயே தங்குவதுடன் உணவு சீராக வேகாமல் குலைந்து போகும். அதாவது சத்துக்கள் குலைந்து போகும். அதிலும் சற்று மோட்டவாக இருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியினை குக்கரில் அதிக அழுத்தம் கொடுத்து சமைத்தால் அதிலிருக்கும் சத்துக்கள் குலைந்து சீராக உடலுக்கு போகாது வீணாகும். அதனால் பாரம்பரிய அரிசிகளை குக்கரில் வைத்து அதிக விசில் கொடுத்து அழுத்தினால் சமைப்பதை தவிர்ப்பது சிறந்தது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைக்கும் முறை

மாப்பிள்ளை சம்பா அரிசியை முதலில் குறைந்தது இரண்டு முதல் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் சமைக்க வேண்டும் என்றால் முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளலாம். மதியத்திற்கு சாதமாக தயாரிக்க காலையில் ஊறவைக்கலாம்.

இரண்டு முறைகளில் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை சமைக்கலாம்.

ஒன்று..
ஒரு மண்சட்டியில் ஊறிய இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஒன்றிற்கு நான்கு முதல் ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து (ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து) அடுப்பில் வைக்கவும். (ஊறவைத்த நேரத்தை பொறுத்து தண்ணீரின் அளவு மாறும்).

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும். குறைந்தது முப்பது முதல் நாற்பது நிமிடம் சிறுதீயில் வேகவைக்கவும். தண்ணீரின் அளவை அவ்வப்பொழுது கவனித்துக் கொள்ள வேண்டும்.

முப்பது முதல் நாற்பது நிமிடத்தில் மாப்பிள்ளை சம்பா அரிசி நன்கு வெந்து மலர்ந்து சாதம் தயாராக இருக்கும். அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடிவைத்து சூடு சிறிது அடங்கியபின் நெய், குழம்பு, ரசம், மோர் சேர்த்து உட்கொள்ளலாம்.

சுவையில் அட்டகாசமாகவும், நல்ல மணமாகவும் இருக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா சோறு.

மற்றொரு முறை
ஒரு மண்சட்டியில் ஊறிய இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஒன்றிற்கு மூன்று அல்லது நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து (ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து) அடுப்பில் வைக்கவும். (ஊறவைத்த நேரத்தை பொறுத்து தண்ணீரின் அளவில் சிறு மற்றம் செய்யவும்).

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிறுதீயில் வைத்து இரண்டு மூன்று நிமிடங்களில் அடுப்பை அணைத்து மூடிவைக்கவேண்டும். முக்கால் மணி நேரம் கழித்து அடுப்பில் மீண்டும் வைக்கவேண்டும். நன்கு கொதிவந்த பின் அடுப்பை சிறு தீயில் வைத்து தண்ணீர் குறையும் வரை வேகவிடவேண்டும். அதாவது ஒரு ஏழு முதல் பதினைந்து நிமிடங்கள்.

பதினைந்து நிமிடத்தில் மாப்பிள்ளை சம்பா அரிசி நன்கு வெந்து மலர்ந்து சாதம் தயாராக இருக்கும். திட்டமான அளவு தண்ணீர் வைத்து வேகவிடுவது சிறந்தது. இவ்வாறு செய்வதால் மீதம் நீர் வடிக்க வேண்டிய தேவை இருக்காது. அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடிவைத்து சூடு சிறிது அடங்கியபின் நெய், குழம்பு, ரசம், மோர் சேர்த்து உட்கொள்ளலாம்.

எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கவேண்டும், சற்று சிறிதாக சாதம் இருக்கலாம் என்று நினைப்பவர்கள் தேவைப்பட்டால் அரிசியை ஒன்று இரண்டாக உடைத்து பயன்படுத்தலாம்.

https://www.youtube.com/watch?v=bzQSJZbigjI

(3 votes)