முருங்கைக் கீரை வளர்ப்பு

முருங்கைக் கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம் வாங்க…

முருங்கைக் கீரை.. வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகும் ஒருபொருள். நம்மூரில் பத்து ரூபாய் பெறாத இந்த கீரையை கோடிக் கணக்கில் பணம் கொடுத்து வெளிநாட்டில் வாங்குகின்றனர். காரணம் இதிலிருக்கும் சத்துக்கள். அங்கெல்லாம் இந்த அற்புத கீரை கிடைக்கவில்லை என்பதற்காக இதனை காயவைத்து பொடியாக்கி அனுப்புகின்றனர்.

இரத்தசோகை, குழந்தைப்பேறின்மை தொடங்கி பல பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும் முருங்கை துணைஉணவாகவும் உள்ளது. முருங்கை கீரை, முருங்கை காய் மற்றும் பூ மருத்துவகுணம் கொண்ட உணவுகளாகும். அன்றாடம் சிறிது முருங்கைக் கீரையை உணவில் சேர்க்க என்றும் இளமையுடன் ஆரோக்கியமாக வாழலாம். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கீரை இந்த முருங்கை. எளிதாக வீட்டில் முருங்கையை வளர்க்கலாம்.

முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளது. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கக்கூடிய நமது நாட்டு ரகம். செடிமுருங்கை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடியது. நாட்டு முருங்கையின் ஆயுளோ அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரையானது. நாட்டுமுருங்கையை எளிதாக நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலம் வளர்க்கலாம்.

நன்கு வளர்ந்திருக்கும் முருங்கை மரத்திலிருந்து அதன் கிளையை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நிலத்திலோ அல்லது தொட்டியிலோ நட்டு வளர்க்கலாம். தொட்டியில் நட்டு வளர்ப்பதற்கு முதலில் வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், இனிப்பு ட்ரேகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும். பின் மண் கலவையை தயார் செய்துக் கொள்ளவேண்டும்.

வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும்.

பின் முருங்கைமர குச்சியை தொட்டியில் நட்டு மீதமிருக்கும் மண்ணைக் கொண்டு நிரப்பவேண்டும். தேவையான அளவு நீர் தெளிப்பதுடன் அன்றாடம் லேசாக நீர் தெளிக்க பத்துநாட்களில் செழிப்பாக ஓரிரு இலைகள் வெளிவரும். வாரம் ஒருமுறை ஒரு கையளவு மண்புழு உரத்தை இந்த முருங்கை செடியுடன் கலக்க செழிப்பாக வளரும். மேலும் மீன் அமிலம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம் தெளிக்க இலைகள் செழிப்பாக வளரும். சத்து குறைபாடு, நோய், பூச்சி தாக்குதலின்றி வளரவும் இவை உதவும். வளர வளர தேவைக்கேற்றவாறு இலைகளை பறித்துக்கொள்ளலாம்.

இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை கிளைகளை வெட்டிவிட வேண்டும். இதனால் புதிதாக துளிர் விடத் தொடங்குவதுடன் உயரமாகவும் அதாவது நீளமாக வளராது.

முருங்கை கீரைகளில் துளைகள் தென்பட்டால் கண்ணுக்குத் தெரியாத புழுத் தாக்குதல் தாக்கியுள்ளது என்பதை தெரிந்துக்கொண்டு இலைகள் முழுக்க நனையும் படி மூலிகைப் பூச்சி விரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இதனில் கம்பிளி புழு தக்குதல் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு வேப்ப விதைக் கரைசல், மஞ்சள் கரைசல், பப்பாளி இலைக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் முருங்கையில் வரும் பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்த சில வழிகள் – முருங்கை பூச்சி மற்றும் நோய்.

வீட்டில் தொட்டியில் இதனை வளர்ப்பதால் பெரியளவில் காய்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம். மூன்று அடிகள் வளர்த்து முருங்கை கீரைகளாக எடுத்து பயன்படுத்தி பயன்பெறலாம்.