வேப்ப விதைக் கரைசல்

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது வேப்ப விதைக்கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதலை போக்கும் சிறந்த பூச்சி விரட்டியாக பாதுகாப்பை அளிக்கும் கரைசல் இந்த வேப்ப விதைக் கரைசல்.

வேப்ப விதைக் கரைசல் தயாரிக்க வேப்பம் விதைப் பொடி தேவை. இதில் பயன்படுத்த நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய வேப்ப விதைகளின் வயது மூன்று முதல் பத்து மாதங்களுக்குள் இருக்க வேண்டும். (எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம்).

ஒரு லிட்டர் கரைசல் தயாரிக்க 50 கிராம் வேப்பம் விதைப் பொடி தேவை. நன்றாக உலர்ந்த வேப்ப விதையிலிருந்து ஓட்டை நீக்கி விதைப் பருப்பை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

விதைப் பருப்பை நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு துணியில் கட்டி ஒரு இரவு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் இந்த துணியைத் தண்ணீரை நன்றாகக் கசக்கிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.

கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாக சாறு பிழிந்து எடுக்க வேண்டும். பின் இதனை வடிகட்டி செடிகளுக்கு தெளிக்கலாம்.

மாலை நேரம் இந்த வேப்ப விதைக் கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்

இதைத்துளைப்பான், கம்பிளிப்புழு, காய்த்துளைப்பான், தத்துப்பூச்சி, அஸ்வினி பூச்சி, இலைச் சுருட்டுப் புழு (அ) இலை மடிக்கும் புழு, நுனிக்குருத்துப்புழு.

இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.

இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.

பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு

நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்ப விதையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. வேப்பிலையில் 10 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பம்பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்ப விதையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன.

சந்தைகளில் கிடைக்கும் வேப்பெண்ணை இரும்பு செக்கில் அரைக்கப்படுவதினால், வெப்பத்தினால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகள் இருக்கவேண்டிய வேப்பெண்ணெயில் 8 வகையான ஆல்கலாய்டுகள் மட்டுமே உள்ளன.

இதனால் வேப்பெண்ணையை பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை (விதைகளை) சேகரித்து அதை இடித்து பயன்படுத்துவது தான் சிறந்தது, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகளும் முழுமையாகக் கிடைக்கிறது.

வேப்ப விதைக் கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, வேப்ப விதைக் கரைசல் பயிர்களின் மேல் படிகிறது. பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு இரண்டிற்கும் இந்த வேப்ப விதைக் கரைசல் நல்ல தீர்வாக உள்ளது.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(1 vote)