வெந்தய மருத்துவம்

எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் வெந்தயத்தின் மருத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம். அஞ்சறைப்பெட்டியில் அவசியம் இருக்கும் இந்த வெந்தயத்திற்கு பல மருத்துவகுணங்களும், நோய் தீர்க்கும் பண்புகளும் உள்ளது. அன்றாடம் சமையலில் இடம் பிடிக்கும் சாம்பார், குழம்பு தொடங்கி பல உணவுகளிலும் தமிழர்கள் பயன்படுத்தும் வெந்தயம் சுண்ணாம்பு சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது, உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கும் தன்மை பெற்றுள்ளது. மேலும் வெந்தயத்தின் பயன்களை தெரிந்துக்கொள்ள வெந்தயம் பயன்கள் பகுதியில் இணையவும். வெந்தயம் எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது என பார்க்கலாம்.

உஷ்ணக் கோளாறுகள்

இரவு சிறிது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, காலை நீராகாரத்துடன் சேர்த்து குடித்தால், எப்பேர்பட்ட உடல் வெப்பமும் தணியும். வெந்தயத்தைப் பொறித்து மென்று சாப்பிட வெப்ப சம்பந்தமான வயிற்று வலி. வயிற்றுப்புண் அகலும். பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கும் சிறந்த நிவாரணத்தை வெந்தயம் அளிக்கும்.

மலச்சிக்கல் / மூலம்

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேக்கரண்டியளவு சுத்தமான வெந்தயத்தை இரவு படுக்கும் முன் வாயில் போட்டு மென்று தின்று, தண்ணீர் பருக வேண்டும். இவ்வாறு செய்வதால் காலையில் சிரமமின்றி இளகலாக மலம் கழியும். மூல நோய்க்கும் சிறந்தது.

நீரிழிவு நோய்

சர்க்கரை நோய்க்கு தேக்கரண்டியளவு சுத்தமான வெந்தயத்தைக் காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு விழுங்கி, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட வேண்டும். 21 நாட்கள் இப்படிச் செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். வெந்தயத்தை முளைக்கவைத்தும் அன்றாடம் உண்ணலாம். வெந்தயத்தை துவையலாகவும் வெந்தய துவையல் செய்து உண்ணலாம்.

முடக்குவாதம்

முடக்கு வாதம், மூட்டுவலி உள்ளவர்கள் வெந்தயம், மிளகு, சீரகத்தை பொடித்து வைத்துக்கொண்டு காலை வேளையில் உட்கொள்ள நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

முடி உதிர்வு / முக பொலிவு

10 கிராம் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும். காலையில் அதனை மைய நுரைக்க நுரைக்க அரைத்துத் தலையில் தடவி கால் மணி நேரம் ஊறவிடவும். வாரம் மூன்று நாட்கள் இவ்விதம் செய்தால் கூந்தல் கருகருவென்றும், நீண்டும் வளரும். தேகமும் குளிர்ச்சியடையும். முகத்திற்கும், சருமத்திற்கும் அரைத்த இந்த வெந்தயத்தை போடுவதால் சருமம் பளபளக்கும். சரும நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். கோடைகாலத்தில் இவ்வாறு செய்ய உடல் புத்துணர்வுடனும் இருக்கும். மேலும் அதிக முடி உதிர்வு உள்ளவர்கள் வெந்தயத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வெந்தய தைலம் தயாரித்து வைத்துக் கொண்டு கூந்தலுக்குப் பயன்படுத்த முடி உதிர்வு குறையும், கூந்தல் கருகருவென வளரும்.

உடல் பருமன்

வெந்தய பொடியை அன்றாடம் உண்பதாலும், வெந்தயத்தை ஊறவைத்த நீரை அன்றாடம் பருகுவதாலும் உடல் பருமனில் இருந்து விரைவில் வெளிவரலாம்.

வாய்ப்புண்

பலருக்கும் உஷ்ணத்தால் வயிற்றில் புண் வர அதனால் வாய் முழுவதும் புண்கள் தோன்றும். அதற்கு வெந்தயத்தை வாயில் அவ்வப்பொழுது மெல்ல வேண்டும். வாயில் நன்கு ஊறிய பின் கடித்து விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாய்ப்புண்ணின் உக்கிரம் தணியும்.
வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

(2 votes)