வில்வம் – நம் மூலிகை அறிவோம்

Vilvam; Bilvamu; Holy Fruit Tree, Aegle marmelos

தமிழகத்தில் பல கோயில்களில் சாதாரணமாக பார்க்கக்கூடிய ஒரு மரம் வகையைச் சேர்ந்தது இந்த வில்வ மரம். இந்த மரப்பட்டைகளில் நல்ல கடினமான முட்கள் இருக்கும். மூன்று சிறு இலைகளைக் கொண்ட கை வடிவ கூட்டிலைகளை மாற்றடுக்கில் கொண்டிருக்கும். வில்வ இலைகளின் திசுவில் எண்ணெய் குழிகள் காணப்படுவதால் இலைகளின் மேல் பகுதியில் பல புள்ளிகள் காணப்படும்.

புனிதமான இந்த வில்வ மரத்தின் பூக்கள் பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாக நறுமணத்துடன் காணப்படக்கூடியது. இதனுடைய பழங்கள் நீண்டு உருண்டு இருக்கக்கூடியது. பழம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடியது. வில்வத்தில் பல வகைகளும் உள்ளது.

வில்வம் – சமூலமே மருத்துவகுணம் கொண்டது

முழு வில்வமரமும் மருத்துவ குணம் கொண்டது. சிவனுக்கு உகந்த ஒரு அற்புதமான மரம் இந்த வில்வ மரம். இலை, பூ, பிஞ்சு, காய், பழம் என அனைத்து பாகமுமே மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படக்கூடியது.

வில்வத்தின் வேறு பெயர்கள்

கூவிளை, கூவிளம், நின்மலி, மாதுரம், சிவத்துருமம், குசாபி என பல பெயர்கள் இந்த வில்வம் மரத்திற்கு நல்லது. சிவபெருமானுக்கு உகந்த மரம் எனப் பல பெயர்களும் இதற்கு உண்டு.

பல மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் காமத்தையும், வியர்வையையும் பெருக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த மரம் எல்லாவிதமான மேகநோய்கள், வயிற்றுவலி, தாது குறைபாடு, பசி மந்தம், வாய் குழறி பேசுதல், மயக்கம், நீர் வேட்டை, காய்ச்சல், உடல் வலி, வீக்கம், கண் சிவப்பு, வாந்தி என பல நோய்களுக்கு சிறந்த ஒரு மருந்து. வாத, பித்த கப நோய்க்கும் சிறந்தது இந்த வில்வம்.

உடல் பலத்தை அதிகரிக்கும்

வில்வத்தின் இலை, காய், கனி, இலை, வேர் ஆகியவற்றை தேனில் ஊறவைத்து பதப்படுத்தி பயன்படுத்தலாம். அதேப்போல் ஊறுகாயாகவும், குடிநீராகவும் கூட செய்து பயன்படுத்தலாம். சிறந்த பலனளிக்கும். இவ்வாறு தொடர்ந்து வில்வத்தை பயன்படுத்துவதால் உடலுக்கு நல்ல ஒரு பலத்தையும், அழகையும் அளிக்கும்.

காய்ச்சலும் தீர

அனைத்து விதமான காய்ச்சலுக்கும் – வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சிறிதளவு சேர்த்து பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி தினமும் இரண்டு வேளை பருகி வர அனைத்து விதமான காய்ச்சலும் தீரும்.

பசியின்மை, சுவையின்மை தீர

பசியின்மை, சுவையின்மை தீர – வில்வ வேரை உலர்த்தி பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனுடன் கலந்து உட்கொள்ள பசியின்மை, சுவையின்மை, இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் போன்றவை தீரும்.

பித்தநோய்களுக்கு

பழுத்த வில்வம் பழத்தை இனிப்பு சேர்த்து பதமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு ஒவ்வொருநாளும் பருகி வர மூலம், சீதபேதி, பித்தநோய்கள், நெஞ்செரிவு போன்றவை நீங்கும்.

கண்களுக்கு வில்வம்

வில்வம் மரத்தின் இளந்தளிர்களை தணலில் வாட்டி மெல்லிய துணியில் வைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க கண் சிவப்பு மாறும்.

மஞ்சள் காமாலைக்கு

மஞ்சள் காமாலைக்கு – வில்வ இலையை உலர்த்தி பொடி செய்து அத்துடன் கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து பருகி வர மஞ்சட்காமாலை விரைவில் தீரும்.

வில்வ இலை சூரணம்

இலைகளை உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு அந்த வில்வ இலை சூரணத்தை வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து காலை, மாலை உட்கொள்ள மலச்சிக்கல், வயிற்றுவலி, பசியின்மை, உடல் எரிச்சல், வெள்ளை, வெட்டை, வயிற்றுப்புண், பித்தம், முடி உதிர்வு ஆகியவை தீரும்.

பசி மந்தம் தீர

வில்வ பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துகொண்டோ அல்லது பூவை நீரிலிட்டு காய்ச்சி குடிநீரிலிட்டு பருகி வர பித்தம், பசி மந்தம் தீரும்.

மூலநோய் குணமாக

வில்வக் காயுடன் சோம்பு, இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீரிட்டுப் பருகி வர மூலநோய் குணமாகும்.