சிறு நெருஞ்சில் – நம் மூலிகை அறிவோம்

Tribulus Terrestris; நெரிஞ்சில்; சிறுநெருஞ்சில்

நெருஞ்சில் மூலிகையை தமிழகத்தில் பரவலாகப் பார்க்க முடியும். நெரிஞ்சி முள் என மண்தரையில் ஆங்கங்கே உருண்டை வடிவில் இருந்து குத்தும் முள்ளுக்கு சொந்தகார செடிதான் நெருஞ்சில் செடி. நெருஞ்சியில் பல வகை உள்ளது. யானை நெருஞ்சில் என்ற பெரு நெருஞ்சில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், கரு நெருஞ்சில், கொடி நெருஞ்சில் என பல வகைகள் உள்ளது.

இந்த பதிவில் சிறு நெருஞ்சில் என்று சொல்லக் கூடிய நெருஞ்சி செடியைப் பற்றி அறிவோம். நெருஞ்சிபுதும், நெருஞ்சி, நெரிஞ்சில், திர்தண்டம், சுவதட்டம், திரிகண்டம், அகவசட்டிரம், கோகண்டம், காமரசி, சுவாதுகண்டம், கிட்டிரம், கோண்டம், சுதம் என பல பெயர்கள் நெரிஞ்சில் செடிக்கு உள்ளது. இந்த வகைகளில் மருத்துவ குணங்கள் பெரும்ப்பாலும் ஒன்றே. இவற்றில் சிறுநெருஞ்சில் என்ற யானை வணங்கியே அனைத்து இடங்களிலும் சாதாரணமாக பார்க்கக் கூடியது.

சின்ன சின்ன சிறகு வடிவக் கூட்டிலை எதிரிலை அடுக்கத்தில் இதன் இலைகள் அமைந்திருக்கும். இதன் இலைக் கோணத்தில் மஞ்சள் நிற தனி மலர் காணப்படும். இந்த மஞ்சள் நிற பூக்கள் சூரியன் உதித்தவுடன் ஒளிப் பட்டவுடன் சூரிய இருக்கும் திசையில் சூரியனைப் பார்த்தவாறு மலர்ந்திருக்கும். முள்வளரிகளைக் கொண்டு ஐந்து பக்கங்களுடன் பத்து சமமற்ற முட்களைக் இந்த நெருஞ்சில் கொண்டிருக்கும். விதைகள் எண்ணிக்கையில் அதிகமானவை. துவர்ப்பு சுவைக் கொண்ட இதன் சமூலமுமே சிறந்த மருத்துவ குணத்துடன் பயன்படும் பகுதிகளாக உள்ளது.

சிறுநீர்ப் பெருக்கும் தன்மையும், ஆண்மையை பெருக்கும் ஆற்றலும் கொண்டது இந்த சிறுநெருஞ்சில். உட்சூடு, சிறுநீர்க்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு, நீர் எரிச்சல், காமாலை, கண்நோய்கள், தாது நஷ்டம், ரத்தப் போக்கு போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த நெருஞ்சில்.

பல நோய்களுக்கு

இந்த நெருஞ்சி செடியை வேருடன் கொண்டு வந்து நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் இந்த நெருஞ்சில் மூழ்குமளவு நீருடன் சிறிது சீரகம் சேர்த்து இரவு ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் நெருஞ்சியை வடிகட்டி எடுத்துவிட்டு நீரை மட்டும் பருக வேண்டும். இது பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

நீர்க்கடுப்பு, வெள்ளை நீங்க

நெருஞ்சில் செடியில் காயையும், வேரையும் பச்சரிசியோடு வேகவைத்து கஞ்சியை வடித்து சர்க்கரை சேர்த்துக் இதமான சூட்டில் பருக நீர்க்கடுப்பு, வெள்ளை, நீர்க்கட்டு நீங்கும்.

சிறுநீருடன் ரத்தம் போவது நீங்க

நெருஞ்சில் செடி சமூலத்தை இடித்து சாறு எடுத்து ஒரு கப் அளவு மோர் அல்லது பாலுடன் பருக சிறுநீருடன் ரத்தம் போவது நீங்கும்.

கண் நோய்கள், நீர்ச்சுருக்கு தீர

நெருஞ்சில் சமூலத்துடன் அருகம்புல் 1 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீர் போட்டு கால் பங்காகக் காய்ச்சி 50 மி.லி வீதம் தினமும் 2, 3 வேளைகள் பருகி வர கண் நோய்கள், காமாலை, நீர்ச்சுருக்கு முதலியன தீரும்.

(17 votes)