Cassia auriculata; ஆவாரை
பெரும் செடி வகையைச் சேர்ந்தது இந்த ஆவாரை. இது சரளை நிறைந்த செம்மண் பூமியில் தான் அதிகம் வளரக்கூடியது. இது ஒரு சில இடங்களில் பரவலாகவும் ஒரு சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வளரும் தன்மையும் கொண்டது. ஆவாரை செடி பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொட்டுகள் விட்டு பெரிய இதழுடன் மஞ்சள் நிறமாகும் அழகான பூக்களை புஷ்பிக்கும் செடி.
மழைக்காலங்களில் செழிப்பாகவும் கோடைகாலத்தில் ஆவாரை இலைகள் பார்க்க அகத்திக்கீரை வடிவத்தில் மிகச் சிறிய அளவிலும் இருக்கும். கிராம மக்கள் ஆவாரை இலையை தலைக்கு தேய்த்து ஸ்நானம் செய்வார்கள். இது தலையில் உள்ள அழுக்கை சீயக்காய்போலத் போக்கிவிடும். ஆவாரஞ் செடியின் பட்டை, தோல் பதனிட அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. மேலும் ஆவாரஞ் செடியைப்பற்றி தெரிந்துக்கொள்ள இந்த ஆவாரம் பூ பக்கத்திற்கு இணையவும். ஆவாரையின் பயன்களை இனி பார்ப்போம்.
உடலை வளர்க்க
ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து நாற்பது நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல பலம் ஏறும். தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
சூடு தணிய
உடல் உற்ற நிலைக்கு அதிகமாக சூடாக இருந்து கொண்டேயிருந்தால் அதை சமநிலைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ஆவாரம்பூ சிறந்த பயன் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆவாரம் பூவின் இதழ்களை சேகரித்து சுத்தம் செய்து வெயிலில் காயவைத்துக் கொண்டு காலை மாலை தேநீர் தயாரிப்பது போல் தயாரித்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.
உடல் அரிப்பு நீங்க
உடலில் சதா அரிப்பு ஏற்பட்டு கஷ்டத்தைக் கொடுத்து வந்தால், ஆவாரம் பூவைக் கொண்டு வந்து பெரிய இதழ்களை எடுத்து அதே அளவு பச்சை பருப்பையும் சேர்த்து மை போல் அரைத்து உடல் முழுவதும் பூசி கால் மணி நேரம் ஊறிய பிறகு அரப்புத் தூளைக் கொண்டு தேய்த்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். 7 நாள் குளித்தாலே போதும் அரிப்பு நீங்கி விடும்.
மூல நோய் குணமாக
அருகம்புல்லை வேருடன் தேவையான அளவுகொண்டு வந்து நீர் விட்டு கழுவி பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவேண்டும். அதே அளவு ஆவாரம் பூவின் இதழ்களையும் சேகரித்து காயவைத்துக் கொள்ளவேண்டும். இரண்டும் நன்றாக சருகுபோல் காய்ந்தபின் உரலில் போட்டு இடித்து தூள் செய்து மாசல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். தினசரி 2 சிட்டிகை அளவு இந்த தூளை எடுத்து அத்துடன் தேக்கரண்டி அளவு நெய் சேர்த்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.