விஷ்ணு கிராந்தி – நம் மூலிகை அறிவோம்

Evolvulus alsinoides; விஷ்ணு கிராந்தி; விஷ்ணு காந்தி, அபராசி, விஷ்ணு கரந்தை

கிராமப்புறங்களில் சாதாரணமாக பார்க்கக்கூடிய ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது விஷ்ணுகிரந்தி. நீள்வட்டமாக ஈட்டி வடிவில் தனி இலைகள் மாற்றிலை அடுக்கத்தில் கொண்டது இந்த தாவரம். இதனுடைய மலர்கள் நீல நிறத்தில் தனி மலர்களாக சக்கர வடிவத்தில் இலைக் கோணங்களில் பூத்திருக்கும். அரிதாக வெள்ளை நிறப் பூக்களையும், சிவப்பு நிற பூக்களை கொண்ட விஷ்ணுகிராந்தியையும் பார்க்கமுடியும்.

விஷ்ணுகிராந்தியின் சமூலமே மருத்துவ குணம் வாய்ந்தது. கைப்பு மற்றும் சிறிது கார்ப்புச் சுவையையும் கொண்ட தாவரம். வியர்வையை பெருக்கக் கூடியதாகவும், வெப்பத்தை அகற்றக் கூடியதாகவும் இருக்கக் கூடிய தாவரம். உடலில் ஏற்படும் கோழையையும் அகற்றக்கூடியது.

விஷ்ணு கிராந்தி, விஷ்ணு காந்தி, அபராசி, விஷ்ணு கரந்தை, விட்டுணுக் கிரந்தி என பல பெயர்கள் இதற்கு உண்டு. விஷ்ணுவின் சக்கரத்தினை ஒத்த இதன் பூக்கள் இருப்பதால் இதற்கு இந்த பெயர்கள் வந்திருக்கலாம்.

விஷ்ணுகிராந்தியின் மருத்துவ குணங்கள்

எலும்புருக்கி காய்ச்சல், காய்ச்சல், ஆண்மை குறைவு, இருமல், நரம்புத் தளர்ச்சி, ஞாபக மறதி, வெட்டைச்சூடு, இரைப்பை போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்து இந்த விஷ்ணுகிராந்தி.

விஷ்ணுகிராந்தி குடிநீர்

விஷ்ணுகிராந்தி மூலிகையின் சமூகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக தயாரித்து குடித்து வர காய்ச்சல், கோழை, எலும்புருக்கி காய்ச்சல், ஆண்மை குறைவு, இருமல், கண்டமாலை, நரம்புத்தளர்ச்சி, ஞாபக மறதி போன்றவை நீங்கும்.

எலும்புருக்கி காய்ச்சல் நீங்க

விஷ்ணுகிராந்தி மூலிகை சமூலத்தை கண்டங்கத்திரி, ஆடாதொடை, தூதுவளை போன்ற மூலிகைகளுடன் சேர்த்து சம அளவு எடுத்து இடித்து தண்ணீரில் கொதிக்கவைத்து கால் பங்காக சுண்டக்காய்ச்சி காலை, மாலை என இரண்டு வேளை 50 மில்லி அளவு பருகிவர எலும்புருக்கி காய்ச்சல் விரைவில் நீங்கும்.

ஆண்மை குறைவு நீங்க

விஷ்ணுகிரந்தி இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி அந்த தூளில் ஒரு சிட்டிகை வீதம் லேசான சுடுநீரில் கலந்து பருகிவர ஆண்மை குறைவு விரைவில் நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

விஷ்ணுகிரந்தி சமூலத்தை சீரகத்துடன் சேர்த்து அரைத்து பாலுடன் கலந்து பருகி வர காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

அஜீரணம் நீங்க

விஷ்ணுகிரந்தி சமூலத்தை துளசி இலையுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து குடிநீராக பருகுவதால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை நீங்கும்.

உடல் பலம் பெற

விஷ்ணுகிரந்தி, கீழாநெல்லி, ஓரிதழ்தாமரை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு அன்றாடம் பாலுடன் சேர்த்து பருகி வர வெட்டைச்சூடு, விந்து ஒழுகுதல், ஞாபக மறதி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை நீங்கும். உடல் பலம் பெறும்.