துளசி – நம் மூலிகை அறிவோம்

ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக பார்க்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகை செடி துளசி. காலம் காலமாக வீட்டில் துளசி வைத்து வளர்ப்பது நம் தமிழகத்தின் பழக்கம். பொதுவாக தமிழ்நாட்டைப் பொருத்தவரை வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகையான துளசிச்செடி புழக்கத்தில் உள்ளன.

துளசிச்செடி ஒரு அருமையான மூலிகை. எந்த வியாதியையும் போக்கும் சமய சஞ்சீவி. குடும்பத்தில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் துளசி குணப்படுத்தும். துளசி செடி இருக்கும் இடத்தில் எந்த விதமான விஷ ஜந்துக்களும் அணுகாது. துளசி செடி வீட்டிலிருந்தால் ஒரு அரிய சஞ்சீவி நம் வீட்டில் இருப்பது போன்றதாகும். நினைத்த நேரத்தில் எந்த வியாதியையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வளவு பயனுள்ள துளசிச் செடியை ஒவ்வொருவரும் வீட்டு முற்றத்தில் தோட்டத்தில் அல்லது தொட்டியில் வைத்து வளர்த்து வரலாம். ஆண்டவன் மனிதனுக்கு வரும் பிணிகளைப் போக்கவே பலவிதமான பச்சிலைச் செடிகளையும் படைத்திருக்கிறார். அவற்றுள் துளசிச் செடியும் மிக முக்கியமான ஒன்று.

வைணவ கோயில்களில் துளசி தீர்த்தம் என்று பக்தர்களுக்கும் விநியோகிப்பதை பலர் அறிந்திருப்போம். இந்த துளசி தீர்த்தத்தை தயாரிக்கும் பாத்திரமும் அதை அதை அள்ளி விநியோகிக்கும் சிறு சிறு கரண்டியும் கூட செம்பினால் தயாரிக்கப்பட்டிருப்பத்தைக் இருப்பதை கண்டிருப்போம். துளசி தண்ணீர் இந்த செம்பு பாத்திரம் கரண்டியுடன் புழங்குவதால் அந்த துளசித் தண்ணீருடன் செம்பு சத்தம் ஓரளவு கலந்து கொள்ளுகிறது. எனவே செம்புச்சத்து கலந்து துளசி நீரை பலவிதமான வியாதிகளைப் போக்கும் அரிய சஞ்சீவியாக மாறிவிடுகிறது.

நெஞ்சு கபம்

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உண்டாகும் நோய்களைத் துளசி இலையினால் குணப்படுத்திவிடலாம். குழந்தைகளுக்கு நெஞ்சில் கபம் கட்டியிருந்தாலும், ஜலதோஷம், காய்ச்சல் மூக்கடைப்பு, மாந்தம், இசிவு இருந்தாலும் துளசி குணப்படுத்திவிடும்.

வாந்தி நிற்க

குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்தால் துளசியிலையைக் கையில் வைத்து கசக்கி சாறு எடுத்து 5 துளி தேன் சேர்த்து நாக்கில் தடவி விட்டால் வாந்தி நின்றுவிடும். மேலும் வாந்தி எடுத்தால் அரைமணிக்கு ஒரு முறையாக மூன்று முறை தடவினால் வாந்தி நின்றுவிடும்.

காதுவலி குணமாக

குழந்தைகளுக்கு காது வலி இருந்தால் துளசி இலையைக் கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் ஒரு துளி காதில் விட்டு பஞ்சை வைத்து அடைத்துவிடவேண்டும். தினசரி காலையில் காதைச் சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் விட வேண்டும். மூன்றே வேளையில் காதுவலி குணமாகும்.

சளி வெளியேறி குணமாக

குழந்தைகளுக்கு பலவிதமான சளி பிடித்துக் கஷ்டப்பட்டால் துளசி இலையை கசக்கிச் சாறு எடுத்து எட்டு துளிகள் நாக்கில் விட்டு அத்துடன் கொஞ்சம் வெந்நீர் கலந்து அடிக்கடி உள்ளுக்குக் கொடுத்தால் சளி வெளியே வந்துவிடும். நல்ல குணம் தெரியும்.

தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு

குழந்தை சரிவர தாய்ப்பால் குடிக்கவில்லையானால் துளசி இலையை சிறிதளவு அம்மியில் வைத்து அதே அளவு அதிமதுரத்தை அத்துடன் சேர்த்து மை போல் அரைத்து முலைக்காம்பில் தடவி விட்டு குழந்தைக்குப் பால் கொடுத்தால், பிறகு குழந்தை பாலை விரும்பி குடிக்கும்.

நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்

குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க குழந்தைக்குக் கொடுக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சவும். பாலை காய்ச்சும் பொழுது அத்துடன் 5 துளசி இலையை பாலில் போட்டுக் காய்ச்சியப் பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோயே வராது. நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குணமாகும்

துளசி இலை, பொடுதலை இலை, நொச்சி இலை, உத்தாமணி இலை, நுணா இலை ஒவ்வொரு கைபிடி சேர்த்து, உரலில் போட்டு நன்றாக இடித்து சாறு பிழிந்து அந்தச் சாற்றை சுத்தமான துணியில் வடிகட்டி குழந்தையின் வயதைப் பொறுத்து, அதாவது மூன்று மாத குழந்தைக்கு அரை சங்களவு என்றால் அதிலிருந்து அளவைக் கூட்டிக் கொண்டு காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் மாந்தநோய் குணமாகும்.

பெண்கள் கர்ப்பம் தரிக்க

கர்ப்பம் தரிக்க சில பெண்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் கர்ப்பம் தரிப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் கருப்பையில் இருக்கும் பூச்சிகளேயாகும். இந்த பூச்சிகளை அழித்து விட்டால் கர்ப்பம் தரிக்கும்.

கர்ப்பம் தரிக்காத பெண்கள் முதலில் இந்த மருந்தினை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த மருந்து கர்ப்பப்பையில் உள்ள பூச்சிகளைக் கொன்று விடும். பிறகு கர்ப்பம் தரிக்கும். இந்த மருந்தை சாப்பிட்ட பின்னும் கர்ப்பம் தரிக்கவில்லையானால் கர்ப்பப்பையில் பூச்சிகள் இல்லை. கர்ப்பம் தரிக்காமல் போவதற்கு பூச்சிகள் காரணமில்லை என்பதை தெரிந்து கொண்டு வேறு முறைகளை கையாளலாம்.

மிளகு, வெள்ளைப் பூண்டு, திப்பிலி, வெள்ளைக் குண்டுமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 காசு எடை இவைகளை அம்மியில் வைத்து துளசியை எடுத்து நைத்து சாறு எடுத்து அந்தச் சாற்றைக் கொண்டு இந்த மருந்துகளை மைபோல் அரைத்து எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டுக்கு விலக்கான மூன்றாம் நாள் காலையில் மட்டும் உள்ளுக்கு கொடுத்துவிட வேண்டும். இந்த விதமாக மூன்று மாதங்கள் கொடுத்து வந்தால் கர்ப்பப்பையிலுள்ள பூச்சிகள் அழியும். கர்ப்பம் தரிக்கும்.

கருத்த உடல் சிவப்பாக

சிலருக்கு உடல் கருப்பு நிறமாக இருப்பது உண்டு. இவர்கள் தங்கள் உடலை சிவக்க வைக்க பல வகையான சோப்புகளையும், கிரீம்களையும் உபயோகிப்பார்கள். இவை உடலில் கழிவுகளையும், தோல் நோய்களையுமே ஏற்படுத்தும். உடலை சிவக்க வைக்க துளசி ஒரு நல்ல சஞ்சீவி ஆகும். இதைத் தவறாது உபயோகித்து வந்தால் 40 நாட்களில் உடல் சிவப்பு நிறமாக மாறும்.

துளசியிலை, அதன் வேர் சமபாகம் எடுத்து துளசி இலையின் அளவு முருங்கை மரத்தின் இளவேரையும் எடுத்து இவைகளை அம்மியில் மை போல அரைத்து குளிக்கும்போது சீயக்காய் அல்லது ஏதேனும் ஒரு குளியல் பொடியைக் கொண்டு தேய்த்துக் கழுவிய பின் கடைசியாக இந்த அரைத்த மருந்தை உடல் முழுவதும் பூசி பத்து நிமிடம் வைத்திருந்து பிறகு மறுபடியும் குளித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாள் செய்து வந்தால் தேகம் பொன் போல மாறும். கருப்பு நிறம் மாறி உடலுக்கு அழகிய புதுநிறம் கொடுக்கும்.

வாய்வு நீக்க

வாய்வு வீக்கங்களுக்கு உடலில் எங்காவது வாய்வு சம்பந்தமான வீக்கம் ஏற்பட்டிருந்தால் துளசி இலையைக் கசக்கி சாறு எடுத்து அதில் கால் அவுன்ஸ் எடுத்து 15 மிளகைத் தூள் செய்து அதில் போட்டுக் கலக்கி காலை, மாலை மூன்று நாள் சாப்பிட வாய்வு நீக்கம் வாடிவிடும்.

விரை வீக்கம் நீங்க

விரை வீக்கத்திற்கு வாய்வு சம்பந்தமான விரைவில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் சங்களவு துளசிச் சாற்றை எடுத்து ஒரு கச்சிக்காயின் பருப்பு சிறிதளவு சுக்கு, பெருங்காயம் இவைகளில் சாற்றளவு விட்டு அம்மியில் வைத்து மை போல் அரைத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து வீக்கத்தின் மேல் தடவி விடவேண்டும். தினசரி காலையில் சுத்தம் செய்து புதிதாக பற்றுப் போட வேண்டும். மூன்றே நாளில் வீக்கம் குணமாகும்.

வாய்வு தொந்தரவுகள் நீங்க

வாய்வு தொந்தரவுகள் நீங்க துளசியிலையை சாறு எடுத்து அதில் கால் அவுன்ஸ் சாறும், அதேபோல இஞ்சியைத் தட்டி அதில் அதே அளவு சாறும் சேர்த்து காலை, மாலை, இரவு என மூன்று வேளை சாப்பிட்டால் சகல வாய்வு தொந்தரவுகளும் குணமாகும். தேவையானால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

துளசியிலையை 5 காசு எடை எடுத்து அம்மியில் வைத்து அதே அளவு மிளகையும் வைத்து மைபோல் அரைத்து அத்துடன் தேக்கரண்டியளவு நெய் விட்டுக் கலக்கி காலை, மாலை மூன்று நாள் சாப்பிட சகல வாய்வும் குணமாகும்.

சகல வாய்வு குணமாக

நீர்த்துவார எரிச்சலுக்கு துளசியிலையை மைபோல் அரைத்து கொட்டை பாக்களவு எடுத்து அரை ஆழாக்குப் பசு மோரில் கலந்து மூன்று வேளை குடித்தால் போதும் நீர்த்துவார எரிச்சல் குணமாகும்.

மாலைக்கண் குணமாக

பொழுது சாய்ந்த உடன் கண்பார்வை மங்கி விடுவதற்கே மாலை கண் வியாதி என்று பெயர். இதற்கு கருந்துளசியின் இலையை சுத்தம் செய்து கைகளை நன்றாகக் கழுவி விட்டு இலையைக் கையில் வைத்து நன்றாக கசக்கினால் சாறு வரும் அந்த சாற்றில் ஒரு கண்ணுக்கு இரண்டு துளி வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை தவறாது ஒன்பது நாள் விட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும். இரவில் பார்வை தெளிவடையும்.

மூக்கு சம்பந்தமான நோய்கள் குணமாக

துளசி இலையைத் தேவையான அளவு நிழலில் உலர வைத்து, பிறகு வெயிலில் போட்டு நன்றாக உலர்ந்ந்தவுடன் எடுத்து பட்டுப்போல் தூள் பண்ணி அதை மூக்குப்பொடி உபயோகிப்பது போல் மூக்கில் போட்டுக் கொண்டால் மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும்.

இருமல் இளைப்பிற்கு

துளசி இலையை சுத்தம் செய்து எடை போட்டு அந்த அளவிற்கு வேப்பம் கொழுந்தையும் அதே எடையளவு மிளகையும் எடுத்து அம்மியில் வைத்து சிறிது இஞ்சிச் சாறு விட்டு மைபோல அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி ஒரு சுத்தமான தட்டில் போட்டு நிழலில் காயவைத்து ஒரு வாயகன்ற சீசாவில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் 6 மணி முதல் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் 4 மணி நேரத்திற்கு ஒரு மாத்திரையை வாயில் போட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். மூன்றே நாளில் குணமாகும்.

காக்காய் வலிப்புக்கு

துளசி, இலையைத் தட்டிச் சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாற்றில் அரை தேக்கரண்டி அளவு உப்பைப் போட்டு கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு குணமாகிவிடும். மருந்து சாப்பிடும் பொழுது காக்காய் வலிப்பு வந்தால் வெள்ளை வெங்காயத்தைத் தட்டி சாறு எடுத்து காதில் விட்டால் காக்காய் வலிப்பு உடனே குணமாகும்.

வண்டு கடி

வண்டு கடிக்கு துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு மைபோல அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்றுப் போட்டால் எந்த வண்டு கடித்திருந்தாலும் விஷம் மாறும் குணமேற்படும்.

காது சம்பந்தமான சகல வியாதிகளு நீங்க

காது சம்பந்தமான சகல வியாதிகளுக்கு துளசி இலையை கசக்கிச் சாறு எடுத்து, இரண்டு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து, ஒரு காசு எடையளவு உப்பும் போட்டு கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் சாப்பிட சகல காது வலிகளும் குணமாகும். காது சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.