Clerodendrum Phlomidis; Wind Killer; தழுதாழை
சித்த ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்று இந்த தழுதாழை. ஒரு வித நெருடலான மணம் கொண்ட இது உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க மிகச் சிறந்த மருந்து. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மூலிகை. இது ஒரு சிறு மரவகை மூலிகை. வட்டமாக முக்கோண வடிவில் தனி இலைகளைக் கொண்டிருக்கும். கசப்பு சுவை கொண்ட இந்த மூலிகையின் இலை மற்றும் வேர் பகுதிகள் பயன்படும் பகுதிகளாக உள்ளது. இதன் பூக்கள் இளம் வெள்ளை மஞ்சள் நிறத்திலிருக்கும். வாதமடக்கி, தந்தக்காரி, தக்கார் என பெயர்களும் இந்த மூலிகைக்கு உண்டு.
உடலுக்கு பலத்தை அளிக்கும் இந்த மூலிகை பக்கவாதம், வாதநோய்கள், கபக்காய்ச்சல், இரத்த சோகை, மூக்கடைப்பு, கழலை, குடைச்சல், தோல் நோய்களுக்கு சிறந்த பலனை தழுதாழை அளிக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு
கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுக்கவும் சிறந்த பலனை அளிக்கும் தழுதாழையை கரிசாலை, செம்பருத்தி, கருவேப்பிலை போன்ற மூளிகையுடன் கலந்து மைய அரைத்து வடைபோல் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் கலந்து வெயிலில் காய வைத்து அல்லது இரும்பு வாணலியில் எண்ணெயை சூடாக்கி இந்த வடையை சேர்த்து ஊறவைத்து கூந்தலில் தேய்த்து வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும், முடி உதிர்வு, இளநரை மறையும்.
தோல் நோய்களுக்கு
தழுதாழையிலையை உலர்த்திப் பொடி செய்து எடுப்பதும், இலைச் சாற்றை விளக் கெண்ணெயுடன் கலந்து எடுப்பதும் தோல் நோய்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
சளி, தும்மல் தீர
தழுதாழை இலையை நன்கு கைகளில் கசக்கி அல்லது இடித்து அதனை சாறு எடுத்து அந்த சாற்றை முக்கில் உறிஞ்சிவர தும்மல், சளி, மூக்கு நீர் வடிதல், மண்டைக் குடைச்சல் தீரும்.

வாத வீக்கம் குறைய
தழுதாழையிலையை நல்லெண்ணையில் வதக்கிக் கட்ட யானைக்கால் வீக்கம், நெறிகட்டுதல், விரைவாதம், வாதவீக்கம் அகலும். தழுதாழையிலையை நீரில் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் ஊற்ற அனைத்து வாத வலிகளும் நீங்கும்.
தழுதாழை வேர் எண்ணெய்
தழுதாழை வேரை நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சித் தடவ பக்கவாதம், குடைச்சல், தோல் நோய்கள், வாத நோய்கள் மறையும். இதற்கு ஐங்க்கூடு எண்ணெய் பயன்படுத்த விரைவில் நல்ல பலனை பெறலாம்.