சிற்றரத்தை – நம் மூலிகை அறிவோம்

Alpinia officinarum; சிற்றரத்தை

அதிகமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் ஒரு மிக முக்கியமான மூலிகை இந்த சிற்றரத்தை. தமிழகத்தில் இந்த சிற்றரத்தையை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவ்வாறு ஏற்றுமதியான சிற்றரத்தை மீண்டும் ஆங்கில மருந்து வடிவிலும் அல்லது வேறு சில துணை உணவு அல்லது மருந்து வடிவத்திலும் நம் நாட்டிற்கே திரும்ப வருகிறது. இதனை நாமே மீண்டும் வேறு ரூபத்தில் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தக் கூடிய நிலையும் இன்று அதிகமாக உள்ளது.

நம்முடைய பொருளை (சிற்றரத்தை) நாம் ஏற்றுமதி செய்து மீண்டும் இறக்குமதி செய்யக்கூடிய சூழ்நிலை இன்று அதிகமாக உள்ளது. இந்த சிற்றரத்தை பல வகை உடல் நோய்களையும் பிணிகளையும் போகக் கூடிய ஒரு அற்புதமான மூலிகையாக உள்ளது.

சித்தரத்தை உடலில் இருக்கக்கூடிய கோழைகளை அகற்றக்கூடிய தன்மை கொண்டது. அதேபோல் வெப்பத் தன்மை இதனுடைய இயல்பு தன்மையாக உள்ளது.

வரட்டு இருமலுக்கு

நெஞ்சு சளி, வரட்டு இருமலுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்து இந்த சித்தரத்தை. இருமல் உள்ளவர்கள் இந்த சித்தரத்தையை கஷாயமாக செய்து எளிமையாக பருகுவதால் வரட்டு இருமல் நீங்கும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்காமல் வைத்துக் கொண்டாலே போதும், மெல்ல மெல்ல இறங்கும் அதன் கார சுவை நாம் உமிழ்நீருடன் கலந்து உட்கொள்ள விரைவாகவே வறட்டு இருமல் நீங்கும்.

சிற்றரத்தை உரை மருந்து

வாந்தி, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு மருந்து இந்த சிற்றரத்தை. உடலில் ஏற்படும் சீதள நோய்க்கு மிக சிறந்த ஒரு தீர்வை இந்த சிற்றரத்தை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கணை இழப்பு, கப நோய்கள் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த சிற்றரத்தை நல்ல ஒரு பலன் கொடுக்கக் கூடியது. சிற்றரத்தையை விளக்கெண்ணெ தொட்டு கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த மற்றும் பல தொந்தரவுகளில் இருந்து உடனடியாக குணம் தெரியும்.

பெரியவர்களுக்கு

பெரியவர்களுக்கு வரக்கூடிய வாய்வு கோளாறு, தலைவலி, சீதளக் காய்ச்சல், இருமல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியா மாதிரியான பிரச்சனைகளுக்கும் சிற்றரத்தை நல்ல ஒரு பலன் கொடுக்கக் கூடியதாக உள்ளது. ஒரு சிறு சுண்டைக்காய் அளவு சித்தரத்தையை எடுத்துக்கொண்டு அதனை நன்கு தூளாக்கி ஒரு கப் அளவு நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் நன்கு கொதித்தபின் அதனை அப்படியே ஆற விட வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பின் இந்த நீரை வடிகட்டி அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து சிறிதளவு 3 வேளை பருகினாலே போதும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகள் பிணிகள் நீங்கும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு ஏற்படும் பலவிதமான பிணிகளுக்கும் இந்த சிற்றரத்தை சிறந்த ஒரு மருந்தாக இருக்கக்கூடியது. அதிலும் குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இது உள்ளது.

வாத பித்த நோய்கள், சாதாரணமாக வரக்கூடிய காய்ச்சல், சீதள காய்ச்சல் ஆகியவற்றிருக்கு சிறந்த ஒரு மருந்தாக இந்த சிற்றரத்தை உள்ளது. சிற்றரத்தையை சிறிதளவு எடுத்துக்கொண்டு தூளாக்கி அதே அளவு கற்கண்டையும் தூளாக்கி சேர்த்து கலந்துக் கொண்டு இந்த பொடியில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து குழந்தைகளின் வாய்விட்டு பசும்பால் கொடுக்க விரைவாக குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிணிகளும் நீங்கும்.

சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை சமமாக சிறிதளவு எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து நீரில் கலத்து பொங்க நன்கு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து சிறிதளவு பருக பல விதமான நோய்கள் தீரும். சீதளம், தும்மல், வறட்டு இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், தலைவலி, குத்திருமல், மார்பு நோய் என பல விதமான காய்ச்சல், கபக்கட்டு, கோழை ஆகியவையும் விரைவாக நீங்கும். மேலும் பசியைத் தூண்டி, ஜீரணமண்டலத்தை பலப்படுத்தும்.

(1 vote)