செடிகளுக்கு நோயா?

வீட்டு தோட்டம், செடி வளர்ப்பது என்றெல்லாம் பொதுவாக பேசும் பொழுது வரக்கூடிய வார்த்தைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல். உணவுச்சங்கிலியில் மட்டுமல்ல உலகிலும் பூச்சியினங்களே பெரும்பங்கை வகிப்பவவை. அவையில்லாமல் நாமில்லை. அவற்றை அழிப்பத்தால் நாமே நமக்கு சூனியம் வைப்பதற்கு சமம் என்றும் பூச்சிகள் பகுதியில் பார்தோம். அதோடு சைவ அசைவ பூச்சிகளின் முக்கியத்துவங்களையும் பார்த்தோம். இனி செடிகளில் ஏற்படும் நோய்த்தாக்குதலையும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

செடிகளுக்கு நோயா? என்கிறீர்களா.. ஆம், மனிதர்களுக்கு எவ்வாறு நோய் ஏற்படுகிறதோ அதேபோல்தான் செடிகளுக்கும். ஒரு மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு கேடுவிளையும் பொழுது தன்னுடைய இயல்பான நிலையையும், தன்னுடைய இயல்பான அமைப்பையும் இழந்து அல்லது வித்தியாசமான மாற்றம் அடைவதையும், தன்னுடைய வயதிற்கும் நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி போன்றவற்றிற்கும் உள்ள  குறைபாடையும் நோய் என்று கூறலாம். பூச்சிகளைபோல் சாதாரணமாக பார்க்கமுடியாத நுண்ணுயிர்கள் பயிர்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை நோய் என்கிறோம்.

அவ்வாறு செடிகள் தங்களுடைய இயல்பான வளர்ச்சி, அமைப்பு போன்றவற்றிலிருந்து மாற்றம் பெறுவதும், செடியின் முதிர்ச்சிக்கு முன்பே அவை பாதிக்கப்பட்டு மடிய நேர்ந்தால் அதனை நோய் என்கிறோம்.

உதாரணத்திற்கு தக்காளி நாற்றுகளுக்கு வரும் கழுத்தழுகல், நாற்றுக்களை நட்டபின்வரும் வாடல் நோய், அதாவது இலைகள் மற்றும் நரம்புகள் வெளிர்த்துப்போவது மேலும் மண்ணின்  ஈரப்பதமும், காய்ச்சலும் முழுமையாக மாற்றமடையும் சமயத்திலும் வாடல்நோய் தாக்கப்படுகிறது. பட்டம்தவறிய செடிகளை இலைக்கருகல் நோய் தாக்கும். இதேபோல் மற்ற செடிகளில் தேமல் நோய், சாம்பல் நோய், பறவைக்கண் நோய், வேரழுகல், நாற்றழுகல், நாற்று கருகல் நோய்கள், வேர் வீக்கம், குண்டாந்தடி நோய், இலைச்சுருள், சிற்றிலை மற்றும் புல்தண்டு என பல நோய்கள் தாக்குகிறது.

சமீபத்தில் உலகையே உலுக்கும் பல பல வைரஸ் நோய்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. அதிலும் நாம் இருக்கும் இடங்களிலும் நம்மை சுற்றியும் பல வைரஸ் நோய்களைப்பார்க்க முடியும். சரி இந்த வைரஸ்கள் என்ன அவ்வளவு பெரிய வில்லன்களா என்கிறீர்களா.. உண்மையில் இல்லை.. உலகையே அச்சுறுத்தும் பல தொற்று நோய்கள் பெரும்பாலும் உருவாவது நுண்ணுயிர்களால். பாக்டீரியா, வைரஸ், மைக்கோபிளாஸ்மா, பாசிகள், நூற்புழுக்கள், ஒட்டுண்ணிகள் என பல தீமை செய்யும் நுண்ணுயிர்கள் உள்ளன. உடனே அவற்றைக்கண்டு அஞ்சவேண்டாம். இவ்வகை நுண்ணுயிர்கள் அனைத்து செடிகளையும் தாக்குவதில்லை. குறிப்பிட்ட சில மாற்றங்கள் நிகழும்பொழுதே இவ்வகை தீமை செய்யும் நுண்ணுயிர்கள் அழிவை ஏற்படுத்துகிறது.

பூச்சிகள், நோய் மற்றும் நூற்புழுக்கள் போன்றவை செடிகளை தாக்குகிறது என்றாலும் பொதுவாக செடிகளின் மீது நோயின் தாக்குதல் எந்தளவிற்கு இருக்கும் என்பதை நோய்கிருமியின் வீரியத்தைப்பொறுத்தும், செடிகளின் நோய்யெதிர்ப்புத் திறனைக்கொண்டும், பருவநிலை அதாவது நோய்கள் பரவுவதற்கு ஏற்ற பருவகாலம் (அதேசமயம் செடிகளின் நோய்யெதிர்ப்பு திறன் குறைவாக இருக்க நோய் வேகமாக பரவும்) போன்றவற்றைக்கொண்டு தீர்மானிக்கலாம்.

பொதுவாக செடிகளை நோய் தாக்குவது என்பது பூச்சிகளின் தாக்குதலை விட பலமடங்கு சேதத்தை ஏற்படுத்தும். காரணம் சிலவாரங்களுக்கு வாழும் பூச்சிகளை விட குறைந்த காலம் (சிலநாட்களுக்கு) மட்டுமே வாழக்கூடியவை நோய்களைப்பரப்பும் நுண்கிருமிகள். பூஞ்சை அல்லது பாக்டீரியாகள் தங்களுடைய இனப்பெருக்கத்தை ஓரிரு நாட்களில் அதிகமாக பரவச்செய்துவிடுகிறது. இதனால் செடிகளை தாக்கியிருக்கும் நோயினை கண்டறிந்து அதற்கு நடவடிக்கை எடுப்பதற்குள் செடிகள் முழுவதுமாக நோய்க்கு உட்பட்டிருக்கும் அல்லது மடிந்தேவிடும். இவ்வாறு செடிகளை தாக்கும் நோய்களை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நூற்புழுக்கள் போன்ற நுண்ணுயிர்கள்  ஏற்படுத்துகின்றன.

பொதுவாக பூச்சிகள் எல்லா இடங்களிலும் வலம் வரக் கூடியவை. அதிலும் சில வகையான பூச்சிகள் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளையும் பரவச்செய்யும் பூச்சிகளாக இருக்கும். உதாரணத்திற்கு நரம்பு நோய், தேமல் நோய் போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களை தத்துப் பூச்சிகள் போன்ற பூச்சிகள் பரவச் செய்யும். அதனால் பூச்சிகளை கட்டுப்படுத்துவது நோய்களைக் கட்டுப்படுத்துவது அவசியமானது. இதற்கு முதல் தீர்வாக நோய் வந்த செடிகளை உடனடியாக அகற்றுவது தோட்டத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அடுத்ததாக நோய்களை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாக இருக்கக்கூடிய பூஞ்சைகளைப்பற்றி தெரிந்து கொள்வோம். Fungus என்று சொல்லக்கூடிய பூஞ்சாணங்கள் இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் மற்றொன்று தீமை செய்யும் பூஞ்சாணங்கள். நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் செடிகளுக்கும், செடி வளர்ச்சிக்கும்  ஆரோக்கியத்தை அளிப்பவை. அதுவே தீமை செய்யும் பூஞ்சாணங்கள் செடிகளை பலவிதங்களில் தாக்குகிறது. வாடல் நோய்,  தண்டு அழுகல் நோய், நாற்றழுகல் நோய், வேர் அழுகல் நோய் போன்ற பல வகையான நோய்களை செடிகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் செடிகளின் இலைகள் உதிர்ந்து, செடி வளர்ச்சிக்கு போதுமான ஒளிச்சேர்க்கை இல்லாததால் செடிகள் வாடுவதற்கும், விளைச்சல் குறைவதற்கும் காரணமாக உள்ளது.

சில செடிகளில் இலைகள் பழுப்பு நிறமாகவும் அதன்மேல் பலவகையான புள்ளிகளையும் பார்த்திருப்போம். இவற்றிற்கு காரணம் சில வகையான பாக்டீரியாக்கள். இந்த பாக்டீரியாவின் தாக்கத்தால் ஒளிச்சேர்க்கை குறைந்து செடிகள் வளர்ச்சி குறைவதும் செடிகளில் இருக்கும் காய்கனிகளின் வளர்ச்சி குறைவது பொதுவாக நடக்கக்கூடியவை. மேலும் இதனால் அந்த செடியிலிருந்து கிடைக்கும் காய்கள் சொரசொரப்பாகவும் புள்ளிகளுடனும் காணப்படும். இவ்வகை பாக்டீரியாக்கள் அதிகமாக பரவினால் செடிவளர்ச்சி பெரியளவு பாதிக்கப்படும். இலைப்புள்ளி நோய் மற்றும் கருகல் நோய்கள் போன்றவைகள் பாக்டீரியாக்களால் வரக்கூடிய நோய்கள்.

அடுத்ததாக செடிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நூற்புழுக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒட்டுமொத்த செடியின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கக்கூடிய வேர்களை அழுகச்செய்வது இந்த நூற்புழுக்கள். அதுமட்டுமில்லாமல் வேர்களில் சில வகையான பாதிப்புகளை ஏற்படுத்த செடியின் ஒட்டு மொத்த தன்மையுமே மாறி இருக்கும். செடிகளின் இலைகள் சுருண்டு, வளைந்து இயல்பான தோற்றத்தில் இருக்காதது இவ்வகையான நோய்களின் தாக்குதலின் காரணமாக அமைகிறது. இதிலும் செடிகளுக்கு நன்மைசெய்யும் நூற்புழுக்கள், தீமை செய்யும் நூற்புழுக்கள் என வகைகள் உள்ளது. பொதுவாக செடிகளை தாக்கக்கூடியவை தீமைசெய்யும் நூற்புழுக்கள். 

இவ்வாறு நோய்கள் தாக்குவதற்கு சிலவகையான சத்துப்பற்றாக்குறைகளும் காரணமாக அமைகிறது.

செடிகள் ஆரோக்கியமாக வளர, வளர்ந்த செடிகள் பருவத்தில் பூக்க, பூக்கும் செடிகள் பூக்களை உதிர்க்காமல் காய் பிடிப்பதற்கும் சரியான ஊட்டச்சத்துக்கள் அந்த மண்ணில் இருக்கவேண்டும். சீரான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண்ணிலிருந்து செடிகள் தங்களின் வேர்கள் மூலமாக அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் மிக முக்கியமானது செடிகள் எடுத்துக்கொள்ளும் வகையில் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் எளிமையாக இருக்கவேண்டும். இவ்வகை ஊட்டச்சத்துக்களை பேரூட்டம், நுண்ணூட்டம் என்று பிரிக்கலாம். இவையும் செடிவளர்ச்சிக்கும், பூச்சி நோய் தாக்குதலுக்கும் காரணமாகிறது. இயற்கையில் அனைத்துமே  ஒன்றுக்குள் ஒன்று பின்னிபிணைத்தது. மண், நுண்ணுயிர்கள், மண்புழு, பூச்சிகள், பறவைகள், மண்ணிற்கு உரம் தரும் விலங்குகள், கால்நடைகள் அவற்றை சார்ந்திருக்கும் மனிதன் என உணவுச்சங்கிலிக்கும் ஆதாரமாக உள்ளது.  அடுத்து இயற்கையான முறையில் எவ்வாறு நோயிலிருந்து செடிகளை காப்பது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.