பிசினி அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பசை போல ஒட்டும் திறன் அதிகம் கொண்ட அரிசி இந்த பிசினி அரிசி. பிசுபிசுப்பாக பிசின் போல இருக்கும் அரிசி என்பதால் பிசினி என்று பெயர் காரணம் கொண்ட அரிசி. அதுமட்டுமில்லாமல் கஞ்சத்தனம் கொண்ட அரிசி என்பதாலும் இந்த அரிசிக்கு பிசினி என பெயர் வந்திருக்கலாம். குறைந்த அளவே கொண்ட இந்த அரிசியைக் கொண்டு உணவு சமைத்தாலும் இந்த அரிசி பல மடங்கு அதிகமாகக்கூடிய தன்மை கொண்டது. திருவள்ளூர் மாவட்டம், வட தமிழகப் பகுதிகளிலும் தென் ஆந்திரவிலும் விளையும் அரிசி.

பொதுவாக ஒரு கப் அரிசி இருவர் சாப்பிட போதுமானதாக இருக்குமென்றால் இந்த அரிசியை நான்கு நபர் கூட சாப்பிடலாம். அந்த அளவிற்கு கணிசத்தை அளிக்கும் அரிசி. கஞ்சத்தனமாக குறைவான அரிசியை பயன்படுத்தி உணவு சமைத்தாலும் அதிகமான நபர்களின் வயிற்றுப்பசியைப் போக்கும் அற்புதமான ரகம். அவ்வளவு பிசுப்பிசுப்புத்தன்மை, ஓட்டும் தன்மை, விரியும் தன்மை கொண்ட அரிசி. ஒட்டும் தன்மை கொண்ட இந்த பிசினி பாரம்பரிய அரிசி வெள்ளை நிற நெல் மோட்ட ரக சிவப்பு நிற அரிசி. நார்சத்துக்களும், தாது மற்றும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்த அரிசி. பொதுவாக புழுங்கல் அரிசியாக கிடைக்கக் கூடியது.

இரண்டரை அடி முதல் ஐந்தடி உயரம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த பிசினி 120 -135 நாள் வயதுடைய ரகம். எல்லா வகையான மண்ணிலும் சிறப்பாக வளரும் தன்மை கொண்ட ரகம். வறட்சி, வெள்ளம் என இயற்கை சீற்றங்களால் பாதிக்காது விளைச்சலை அளிக்கும் ரகம். பூச்சி நோய் தாக்குதல் இன்றி எளிமையாக விவசாயம் செய்யக்கூடிய ரகமாகவும் இருக்கும் சிறப்பு பெற்ற பாரம்பரிய ரகம். முழுக்க முழுக்க எந்த இரசாயனமும் இன்றி இயற்கை எரு உரம் இட்டாலே போதும், பிரமாதமாக வளரும் சிறந்த அரிசி.

கஞ்சி, களி, அவல் போன்றவற்றிற்கு சிறந்தது. நல்ல சுவை கொண்ட அரிசி. இதனில் உளுந்து சேர்த்து களி செய்து உண்பதால் உடல் உறுதியாகும். பத்திய கஞ்சி உட்பட அனைத்து வித கஞ்சியும் செய்து உண்ண உடல் பலப்படும். சிறிது அரிசி இட்டு அதனை உடைத்து கஞ்சி செய்து பருக உடலுக்கு தேவையான சத்துக்களைப் பெறலாம்.

பிசினி அரிசியின் பயன்கள்

  • பசியை போக்கும் உன்னதமான அரிசி.
  • பெண்களுக்கு ஏற்ற அரிசி.
  • உடல் வலி, முதுகு வலிக்கு சிறந்தது.
  • உடல் கொழுப்பை கரைக்கும் அரிசி.
  • மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
  • கருவுற்ற தாய்மார்களுக்கு உகந்த அரிசி.
  • எலும்புகளுக்கு வலுவூட்டும். இடுப்பெலும்பு உறுதியாக்கும்.
  • சுகப்பிரசவத்துக்கு உதவும்.
  • பாலுட்டும் தாய்மார்களுக்கு சிறந்த அரிசி.
  • இடுப்பு வலி நீங்கும்.

வலைத்தளத்தில் பிசினி அரிசி வாங்க – பிசினி அரிசி.

(7 votes)