ஊமத்தை – புழுவெட்டு குணமாக – நம் மூலிகை அறிவோம்

ஊமத்தை, உன்மத்தம் என்ற வேறு பெயர் கொண்ட ஒரு மூலிகை செடி. கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் சாதாரணமாக சாலையோரங்களில் காணப்படும் ஒரு வகை தாவரம் தான் இந்த ஊமத்தை. ஒரு மீட்டர் வரை வளரும் தாவரம். பசுமையான நீள்வட்ட வடிவிலான இலைகளையும், வாயகன்ற நீண்ட சூழலுள்ள புனல் போன்ற அமைப்பில் வெள்ளை நிற மலர்களையும் கொண்ட ஒரு மூலிகை தாவரம். இதன் காய்கள் மென்மையான முள்ளைப் போன்ற அமைப்பைக் கொண்டது. இதன் கனிகள் காப்சூல் வகையைச் சேர்ந்தது.

ஊமத்தையின் இலை, பூ, காய், விதை ஆகியன மருத்துவப் பயன்பாட்டுக்கு உகந்தது. இது கைப்பு சுவையையும் வெப்பத்தை அதிகரிக்க கூடிய தன்மையும் கொண்டது.

இது வாந்தியை உண்டாக்கக் கூடியது. வேதனையை குறைத்து மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு வகை தாவரம். நாய்கடிப்புண், காட்டிகள், வீக்கங்கள், நச்சுகள், குழிப்புண் போன்றவற்றைத் தீர்க்கும்.

நாய்க்கடி குணமாக

ஊமத்தை இலை சாறு இரண்டு முதல் நான்கு துளி வெல்லம் கலந்து தினமும் இருவேளை வீதம் 3 நாட்கள் கொடுக்க நாய் கடித்தவுடன் ஏறிய விஷம் முற்றிலும் அகன்றுவிடும். மூன்று நாளும் கடும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். மதிய உணவு தயிர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட வேண்டும். உப்பு சேர்க்கக் கூடாது.

நாய்க்கடி புண் ஆற

ஊமத்தை இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடித்ததால் ஏற்பட்ட புண்ணின் மேல் கட்டிவர புண் ஆறும்.

இரைப்பு நீங்க

ஊமத்தை இலை, பூ, விதை இவற்றை புட்டு அவிப்பது போன்று அவித்து உலர்த்தி பொடியாக்கி சிறிதளவு உள்ளுக்குக் கொடுக்க இரைப்பு நீங்கும் அல்லது இலையை சுருட்டுப் போல் சுருட்டி புகைப்பதாலும் மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சளித்தொல்லை நீங்கும்.

வீக்கம், கீல்வாயு நீங்க

ஊமத்தை இலையை வதக்கி ஒற்றடமிட கட்டிகள், எலும்பு வீக்கம், கீல்வாயு போன்றவை குணமாகும்.

காது வலி தீர

ஊமத்தை இலைச்சாறு 2 சொட்டு காதில் விட காது வலி தீரும்.

வெள்ளை நோய் நீங்க

ஊமத்தை இலைச்சாறு 5 முதல் 10 துளிகள் தயிருடன் கலந்து கொடுக்க வெள்ளை நோய் நீங்கும்.

புரை, சதை வளரும் புண் தீரும்

ஊமத்தை இலை சாறை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மயில்துத்தம் சிறிது சேர்த்து பூச புரைகள், ரணங்கள், சதை வளரும் புண் ஆறும்.

மாதவிடாய் வலிகள் மறைய

ஊமத்தை இலை அல்லது விதையை நன்கு அரைத்து பற்றுப்போட மாதவிடாய் காலத்தில் தோன்றும் வலிகள் மறையும்.

மூட்டுவீக்கம் வாத வலி தீர

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட மூட்டுவீக்கம், வாய்வினால் தோன்றும் கட்டிகள், வாதவலி, அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல் போன்றவை குணமாகும்.

புழுவெட்டு நீங்க

புழுவெட்டு காரணமாக தலையில் சொட்டை விழுவதற்கு ஒரு சிறந்த மருந்து இந்த ஊமத்தை. சொட்டை விழுந்த இடங்களில் முடி உதிர்ந்து முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு இந்த உம்மத்தை பெருமளவில் பயன்படும். புழுவெட்டை அகற்றி அந்த இடங்களில் முடி முளைக்கச் செய்வதில் இந்த மூலிகை பேராற்றல் வாய்ந்தது. பிஞ்சு ஊமத்தங்காயை சேகரித்து உமிழ்நீருடன் சேர்த்து நன்கு மைய அரைக்க வேண்டும். அந்த விழுதை தலையில் சொட்டை விழுந்த பகுதியில் தொடர்ந்து பூசி வந்தால் சொட்டை அகன்று மீண்டும் முடி வளர தொடங்கிவிடும்.

வீக்கம் நீங்க

ஊமத்தை இலைகளைக் கொண்டு வந்து கசக்கி சாறெடுத்து எல்லா வகை வீக்கத்தின் மேலும் கனமாகப் பூசி வர எந்த வகையான வீக்கமானாலும் அது வாடிவிடும்.

குறிப்பு: ஊமத்தை விஷத்தன்மை உள்ளது கவனமாக கையாள வேண்டும்.

(1 vote)