மண்பானை மகத்துவம்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலையெல்லாம் போய் எல்லாமே வேலை, அவசரம் என்ற நிலை சில வருடங்களுக்கு முன் இருக்க இன்று அதுவும் காணாமல் போக எல்லாமே பணம், பணம் என்ற நிலை உருவாகியுள்ளது. 

சுதந்திரம் கிடைத்து 70 வருடங்களானாலும், எண்ணற்ற மாற்றங்கள் வந்தாலும்  ரூபாய் நோட்டுகளில் உள்ள முட்டைக்கண்ணாடியும், அதற்கு சொந்தக்காரரான காந்தியும் இன்னும் மாறவில்லை. ரூபாயில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள காந்தியின் கோட்பாடுகளும், கொள்கையும் இந்தியாவில் நிரந்தரமாக இடம்பிடிக்காதது இந்தியாவின் வளர்ச்சியை காலப்போக்கில் சீர்குலைக்கும் என்பது உண்மை.    

“இந்தியாவிற்கு பெருமளவில் உற்பத்தி தேவையில்லை, பெரும்பாலானவர்களின் மூலம் உற்பத்தி தேவை”

காந்தியின் சுயராஜ்யம் இதற்கு ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு. “இந்தியாவிற்கு பெருமளவில் உற்பத்தி தேவையில்லை, பெரும்பாலானவர்களின் மூலம் உற்பத்தி தேவை” என்ற காந்தியின் கொள்கை முற்றிலுமாக தமிழகத்திலும் பெருமளவில் இந்தியாவிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனம்.

காந்தியின் இந்த சுயராஜ்ய கொள்கைகள் மூலம் நம் நாட்டிற்கு பெருமளவில் எந்த வளர்ச்சியும் இல்லை என்ற சிலரின் தவறான எண்ணங்கள் நாட்டின் உற்பத்தி திறனையும், தொழில் வளத்தையும் அந்நியநாட்டிற்கு விற்றுவருகிறது. 

ஒவ்வொரு கிராமமும் தனது உற்பத்தியையும், பயன்பாட்டினையும் ஒரு சேர கொண்டிருக்க வேண்டும் இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு தூண்டுகோல்.

ஒவ்வொரு கிராமமும் தனது உற்பத்தியையும், பயன்பாட்டினையும் ஒரு சேர கொண்டிருக்க வேண்டும் இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு தூண்டுகோல்.

இன்றோ கிராமங்கள் கைவினைப்பொருட்களையும், வேளாண்பொருட்களையும் உற்பத்தி செய்து அதனை நகர சந்தையில் விற்பனை செய்கிறது. அது மட்டுமல்லாது இந்த பொருட்களுக்கு நகரத்தினரே விலைநிர்ணயமும் செய்கின்றனர். இதனால் கிராமத்தினரும் எந்த வித லாபமும் இல்லாது நகரத்தினருக்கு மட்டுமே பெருலாபம் கிடைக்கிறது. கிராமங்கள் எந்த வளர்ச்சியும் இல்லாத நிலை உள்ளது.

உண்மையில் கிராமங்கள் வளர்ந்தால் மட்டுமே நம் நாட்டின் வளர்ச்சி சாத்தியப்படும். சுதந்திரத்தின் காலத்தில் இருந்த வளர்ச்சி கூட இன்று இல்லாத நிலை உள்ளது.

சுதந்திர காலத்தில் ஒவ்வொரு கிராமமும் அதன் சூழல், வளம், தேவை இவற்றைப்பொறுத்து அதன் உற்பத்தியையும் விற்பனையும் செய்தது. பணப்புழக்கமும் அந்த கிராமத்திலேயே இருந்தது. கிராமங்கள் வளமாக இருந்தது. ஒவ்வொரு கிராமமும் பரவலாக தங்களில் வளத்தினை கொண்டிருந்தது.

இன்றோ அனைத்தும் மையப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு தனிப்பொருளும் மையமான ஒரு இடத்தில தயாராக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைகிறது. இதனால் ஒரு இடத்தில் இருக்கும் வளம் அழிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் குறைந்த லாபத்தைப்பெற அதனை விற்பனைசெய்யும் தனிநபர் / தனி நிறுவனமும் பெருலாபத்தை அடைகின்றனர்.

கிராமங்கள் வளர ஒவ்வொரு தனிமனிதனும் பங்காளிக்கவேண்டும். கிராமங்களில் உள்ள தொழில்நுட்பங்களும் கலைநயமுள்ள வேலைப்பாடுகளும் அன்று முதல் இன்று வரை மண்ணிற்கும், புவிக்கும், இந்த சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதவண்ணம் இருந்து வருகிறது. 

ஒவ்வொரு தனிமனிதனின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வண்ணம் அவை அமைந்துள்ளது என்பது அனைத்தையும் விட சிறப்பானது. அந்த வகையில் ஒன்று தான் நமது சமையலுக்கு பயன்படுத்திய அடிப்படை பாத்திரங்கள்.

சுதந்திர காலத்தில் காந்தியின் கனவுகள் நிஜத்தில் இருந்த நேரத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த நிலத்தில் கிடைத்த மண்ணினை பயன்படுத்தி தயாரித்த மண்பாத்திரங்களை பயன்படுத்தினர். அதுமட்டுமல்லாது அந்த மண்பாத்திரத்தினை உபயோகித்தவர்களும் அந்த ஊர்க்காரர்களாக இருந்தனர்.

பின் ஒருவருடமோ அதற்கு மேலோ பயன்படுத்திய அந்த மண்சட்டிகள் மீண்டும் அந்த மண்ணிலேயே உடைய பணமும், மண்வளமும், சுற்றுச்சூழலும் அந்த கிராமத்திலேயே காக்கப்பட்டது.

மேலும் அந்தந்த நிலத்தில் வாழ்பவர்களுக்கு தேவைப்பட்ட அந்ததந்த நிலைத்து மண் சக்தியும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த மண்சட்டிகளில் உணவு தயாரித்து உண்டவர்கள் உடல் ஆரோக்கியமும் மேன்மைப்பட்டது.

இன்றைய நிலை காந்திய கனவிற்கு முற்றிலும் எதிரானது. அழிந்து போன தொழில்களில் குயத்தொழிலும் ஒன்று. இன்று மண்சட்டி, மண்பானைகள் தயாரிப்பவர்கள் பெருமளவில் நலிந்து போக வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து மண்சட்டிகள் வரத்தொடங்கியுள்ளது.

இதனால் நமது ஊரில் உள்ள குயவர்கள் நலிந்தது மட்டுமல்லாது நமது பணம் வெளிஊர்களுக்கு வளத்தை அளிக்கிறது. வணிகமயமாக்களால் வெளியூர் மண்சட்டிகள் பல இரசாயன வண்ணங்கள் பூசப்பட்டும், இரசாயன கலவையால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் உடலுக்கும் பல தீங்குகள் ஏற்படுத்துகிறது.

இவற்றை முடிந்தவரை நிராகரித்து நமது நாடும், நமது ஊர் குயவர்களும் மேம்பட வழிசெய்வோம்.

நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் நிலையும், கிராமவாசிகளின் நிலையும் உயர்ந்தால் மட்டுமே நாடு வல்லரசாகும். 

உடல் ஆரோக்கியத்திற்கு மண்பானை சிறந்தது என்று பலரும் கேள்விப்பட்டிருப்போம். அந்த காலத்தில் அனைத்து வீடுகளிலும் மண்சட்டிகளைத் தான் பிரதானமாக  பயன்படுத்தினர். இதனால் பல நோய்களும், வியாதிகளும் அவர்களை அண்டவே இல்லை. குறிப்பாக ஆண், பெண் இருவருக்கும் இன்றிருக்கும் மலட்டுத் தன்மை இந்த மண்பானையால் குறைவாக இருந்தது.

மண்பானை, மண்சட்டிகள் போன்றவற்றினை பயன்படுத்துவதால் உணவில் உள்ள உயிர்சத்துக்கள் பேணிப்பாதுகாக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள உயிரணுக்கள் காக்கப்படுவதுடன், உயிரணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது.

புற்றுநோய், சர்க்கரைவியாதியில் தொடங்கி சாதாரண உடல் வளம் வரை அனைத்திற்கும் ஏற்றதாக இந்த மண்பாத்திரங்கள் உள்ளது. நாம் வாழும் நிலத்தில் உள்ள மண்ணினைப் பயன்படுத்தி தயாரிக்கும் இந்த மண் பத்திரங்களால் உடலுக்கு பலவகையில் நன்மைகள் உண்டாகிறது.

மண்பாத்திரங்களில் சமைக்க உடல் ஆரோக்கியம் மட்டும் மேம்படுவதில்லை, உணவின் தரமும், சுவையும் மேம்படுவதுடன், நீண்ட நேரத்திற்கு உணவு கெடாமலும், சுவை குறையாமலும் காக்கப்படுகிறது. உணவு எளிதில் செரிமாணமாகிறது. அந்த உணவினால் நீண்ட ஆயுளும் சாத்தியமாகிறது. 

நவீனமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் விதவிதமான பாத்திரங்கள் சந்தைக்கு வந்த நிலையில் மண்பாத்திரங்களா? மண்சட்டி சமையல் சாத்தியமா? என்கிறீர்களா..

இன்று உள்ள நவீன பாத்திரங்களை பயன் படுத்துவதால் உணவினை தயாரிக்கும் சமையத்தில் நமது உப்பு, புளி போன்றவை அந்த பத்திரங்களால் வினைபுரிய உணவின் தரம் குறைகிறது. இதுவே பலநோய்களுக்கு அஸ்திவாரமாகிறது.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளால் சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது என்பது பல ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது.
மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராகவும், மெதுவாகவும் பரவுகிறது. இது உணவை சீரான முறையில் சமைக்க உதவுகிறது.

மண்பானையில் சமைக்கும் பொழுது அதில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று அதில் உள்ள உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.  இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகக் கூடிய தரமான உணவாக மாறுகிறது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது. உயிர் சத்துக்களால் தான் மண்சட்டியில் வைக்கும் மீன்குழம்பு சுவையானதாக உள்ளது.

சமையல் மட்டுமல்லாது மண்பானையில் நீரினை ஊற்றி அதனைப் பருகுவதால், உடல் குளிருவதுடன் அந்த நீரில் உள்ள கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை தான். இந்த நீருக்கு மண் சக்தி மட்டுமல்லாது பிராண சக்தியும் கிடைக்கிறது. இந்த நீரினை அருந்துவதால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்குகிறது.

சத்தும், சுவையும் அளிக்கக் கூடிய மண்பாத்திரத்தினை இன்றைய அடுப்புகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதற்கு எந்த பிரத்தியேக அமைப்பும் தேவையில்லை. இன்று அனைத்து இல்லத்திலும் இருக்கும் சாதாரண எரிவாயு (Gas) அடுப்புகளிலேயே மண்சட்டிகளை வைத்து சமைக்கலாம்.

சமையலுக்கு பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன் அந்த பாத்திரங்களை பழக்குவது மிகவும் அவசியம். புது மண்பானையினை சமையலுக்கு முன் ஒருவாரம் பழைய கஞ்சியினை அல்லது வடிகஞ்சியினை ஊற்றி வைத்து பின் ஓரிரண்டு நாட்கள் வெயிலில் வைக்க மண்பானை பழகிவிடும். இதனை காஸ் அடுப்பில் வைத்து பயன்படுத்தலாம். மிக எளிமையாக மற்றொரு முறையிலும் இந்த மண் பாத்திரங்களை பழக்கலாம். கீழிருக்கும் காணொளியில் அதனை பார்க்கலாம்.

மண்பானையினை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இரசாயனங்கள் இல்லாத தூள்களை பயன்படுத்தி கழுவுவதும், வாரம் ஒருமுறை சூரியஒளியில் வைப்பதும் மண்சட்டியின் தன்மையை பேணிப்பாதுகாக்கும். இன்று பல மருத்துவர்களும் குறிப்பாக குழந்தைப்பேறு மருத்துவர்கள் மண்பானை சமையலை அவர்களின் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.

காந்தியின் கானவும் நமது நாட்டின் ஆரோக்கியமும் மேம்பட நம்மை சுற்றி நமது கிராமங்களிலும் நமது அருகாமையிலும் உள்ள பொருட்களை பயன்படுத்துவோம் பயனடைவோம்.

https://www.youtube.com/watch?v=kggl-WAf7cU
(3 votes)