சிறுநீர, பித்தப்பை கற்கள்

மிகினும் குறையினும், நோய் செய்யும்-நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று

– வள்ளுவம்

குறைபாடுகள் என்பது என்றும் நம் கண்முன் பூதாகரத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வள்ளுவம் மட்டுமல்லாது நம் வாழ்வின் அடிப்படை முன்மொழிகளும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.

உடலில் இரத்தமில்லை, இரும்பு சத்தில்லை, சுண்ணாம்பு சத்தில்லை, என்று பல இல்லைகளை தேடித் தேடி வரிசைப்படுத்தும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். இயற்கையின் வெளிப்படையான ரகசியத்தை. சமீபத்திய பல நிகழ்வுகளும் அவ்வப்போது நம் நினைவிற்கு அவற்றை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. 

ஆம், இயற்கையின் சமநிலை தான் அது. மிதமான சமமான படைப்புகள் என்றும் குறைவில்லாத செம்மையான சூழலை உருவாக்குகிறது. இந்த சமநிலை தவறும் சமயம் ஒன்று குறைந்து மற்றொன்று அதிகரிப்பதுடன் எதிர்பாராத பேர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு பல வருடங்களாக மழை இல்லை மழை இல்லை என்றிருந்த சூழலின் எல்லாவற்றையும் சேர்த்து தாங்க முடியாதபடி மழை பொழிவை ஏற்படுத்தியது. பயனில்லாமல் பேரிடராகவே அது விளங்கியது.

சமீபத்திய நிகழ்வை சொல்லவே வேண்டாம் பெருந்தொற்று என்ற ஒன்றை யாரும் இனி வரக்கூடிய காலத்தில் மறக்கவே முடியாது. உலகையே மனிதன் ஆள்கிறான் என்ற பெருமிதத்தில் பறந்தவர்களுக்கு ஊரடங்கு பொதுமுடக்கம் என்பதெல்லாம் தற்பொழுது பழக்கமாகியது.

அண்டமும் பிண்டமும் ஒன்றென்று அறிந்தவர்களுக்கு எளிதில் இந்த ரகசியமும் உடலில் ஏற்படும் அதன் விளைவுகளையும் புரிந்து கொள்ளமுடியும்.
பல இல்லைகளை வரிசைப்படுத்தும் நாம் சில அதிகங்களை மறந்து விடக்கூடாது.

சத்துக்கள் குறைந்து போகுமானால் அந்த உடலில் கழிவுகள் அதிகரிக்கும். உஷ்ணம் உண்டாகும். கழிவுகளை வெளியேற்றுவதற்கான உயிர் சக்தியை காற்றின் மூலமாகவும் பெறமுடியாத நிலை உருவாகும். இந்த நிலை தொடருமானால் அங்கங்கே கட்டிகளும் புற்றுகளும் உருவாகும். உடலுக்கு தேவையான அளவைவிட சில உப்புக்கள் அதிகமாகவும் சில குறைந்தும் இருக்க, அவற்றை உடல் வெளியேற்றவும் முடியாமல் சிறுநீரகத்திலும் பித்தப்பைகளிலும் கட்டிகள் உருவாகிறது.

ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறைகள் காரணமாகவும், அதிக இயக்குநீர்  (hormone) சுரைப்புகளாலும், அதிக கோபம், அதிக பயம் போன்ற உணர்வுகளாலும் இந்த கட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் தங்குகிறது.

சர்வ சாதாரணமாக இன்று உடலில் தோன்றும் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் பல வகைகளில் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது.  

உடலின் எந்தெந்த பாகங்களில் கற்கள் காணப்படுகிறதோ, அந்த பாகத்தின் பெயரால் கற்கள் குறிப்பிடப்படுகிறது. பித்த நீர்ப்பை (Gall bladder) கற்கள், சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை கற்கள்.

கற்கள் சேரும் இடங்கள் – உடலில் இடுப்பெலும்பு கட்டு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் சிறுநீர்பாதை போன்றவைகளாகும்.

ஒரு சிறு மணல் அளவில் முதலில் உருவாகும் கற்கள் மேலும் மேலும் பெரிதாகி ஒரு கோலிகுண்டு அளவிலும் காணப்படும். அரிதாக அதைவிட பெரிய அளவிலும் காணப்படும். சராசரியாக 30 பெண்களில் ஒருவருக்கு இந்த கற்கள் உருவாகிறது. கற்கள் உருவாக குறைந்தது 10 வருட காலமாகும். 

80 சதவிகித கற்கள் யூரிக் அமிலம், சிஸ்டைன் (அமினோ அமிலத்தின் உள்ள ஒரு வகை அமிலம்) போன்றவற்றால் உருவாகிறது. கால்சியம் ஆக்ஸலேட் (Calcium oxalate) என்பது பெரும்பாலான கற்களின் உள்ள வேதிப்பொருள். இரண்டு சதவிகித கற்கள் கால்ஸியம் பாஸ்பேட்டால் (Calcium phosphate) ஆனவை.

சராசரியாக 10 முதல்15 சதவிகித கற்கள் மக்னீசியம் – அம்மோனியம் – பாஸ்பேட்டால் ஆனவை. அமிலங்களும் உப்புகளும் அதிகரிப்பது மட்டுமல்லாது சீரான சிறுநீர் வெளியேற்றமின்மையும் இவ்வாறு கற்கள் உடலில் தோன்ற ஒரு வகையில் மிக முக்கியமான காரணங்களாகும். 

இந்த கற்கள் வெறும் கற்களாக மட்டும் உடலில் இருந்து விட்டால் பரவாயில்லை, ஆனால் அதனால் ஏற்படும் வலியை நினைத்தாலே பலருக்கு உடலே ஒருவித ஆட்டம் கண்டாற்போல் பயமும் கூடவே ஏற்படும்.      

பானையில் வைத்து அவ்வப்போது தேவையான தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியமானது. ஒவ்வொரு நாளும் குறைவில்லாமல் உடலில் இருக்கும் கழிவுகளை அடித்து வெளியேற்ற நமக்கு சாதாரண பானை தண்ணீர் உதவும்.

ஒவ்வொரு நாளும் ஊட்டசத்துக்கள் ஒருங்கே அமைந்த பழங்கள், காய்கள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றை ஒருங்கே உட்கொள்வது சிறந்தது.

மூலிகை சாறுகள் (சிறுபீளை சாறு, நெருஞ்சி சாறு போன்ற சாறுகள்..), மூலிகை இலைகள், எலுமிச்சை சாறு, துளசி சாறு, மாதுளை சாறு போன்ற சாறுகள், அத்திப்பழம் சிறந்த பலனை அளிக்கும்.

வெள்ளை சர்க்கரை, அதிக உப்பு, காரம் போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

பாரம்பரிய அரிசி உணவுகள், சிறுதானியங்கள் எடுத்துகொள்வது நல்லது.

வாழை தண்டு, வெண்பூசணி, தர்பூசணி எடுத்துகொள்வது சிறந்தது.

அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியமானது. அசைவ உணவுகளில் இருக்கும் அதிகப்படியான இரசாயன நச்சுக்களிலிருந்து நம்மை பாதுகாக்க இது உதவும்.