கருப்பு கவுனி அரிசியும் நாமும் / Black Rice

வருடங்களும் நாட்களும் பலவற்றை வாழ்வில் கற்றுக்கொடுத்த வண்ணம் மிக வேகமாகவும், அவசரமாகவும் நகர்கிறது. இந்த வேகத்தில் தெளிவாக புரிந்தும் புரியாமலும் சுழன்று கொண்டே நாமும் ஓடுகிறோம். அந்த ஓட்டத்தின் பாதையில் பல விநோதங்களையும், விபரீதங்களையும் நாம் கடந்தாலும் அவற்றை கிண்டலாகவும் கேலியாகவும் பார்க்கும் அவலமும் நம்மிடம் உள்ளது. இன்று நவீனமாகவும் நாகரீகமாகவும் இருக்கும் பல நாளை எதார்த்தமாகவும், நடைமுறையாகவும் மாறுகிறது. பின் அதுவே பல மனவருத்தங்களுக்கும் அதன் பின் அதுவே கைமீறிய செயலாகவும் கேளிக்கைப் பொருளாகவும் மாறுகிறது. 

விவசாயம் இன்றைய நிலை

வெறும் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் நமது முன்னோர் செய்த விவசாயம் இன்று அநாகரிகமாக மாறியது. வேலைக்கு செல்வதும், வெளி நாடு, வெளி மாநிலம் செல்வதும் சிறப்பானதாகப் பார்க்கப் பட்டது, சொந்த நிலங்களை விற்று கடைகளில் அரிசி, பருப்பு, காய்கள் வாங்கி உண்பது நாகரீகமானது. பின் உணவின் நிலை பூச்சி கொல்லிகள், நச்சு கலந்த உணவுகள் எதார்த்தமாகவும் பல மனவேதனைகளையும் அளிக்கத் தொடங்கியது. நமது இயலாமையோ கேளிக்கையாக அவற்றைப் பார்க்க வைக்கிறது. உண்மையில் பாதிப்புகளையும் மனவருத்தங்களையும் வெளிக்காட்ட முடியமால் அவற்றை குறைக்கூறியும் இன்று அவை சாத்தியமில்லை என்றும் நம்மை நாமே சமாதானப்படுத்துகிறோம்.

யாராவதும் இயற்கையாக விளையும் உணவு தானியங்களும், அரிசிகளும், காய்கறிகளும் நல்லது என்றால் உடனே ஒரு பாய்ச்சல் தான், இயலாமையின் வெளிப்பாடு..

தொடரும் கேள்விகள்

எங்கு கிடைக்கும், இவ்வளவு விலை அதிகமானால் யார் வாங்குவது, இயற்கை விவசாயிகள் எங்கு இருக்கின்றனர் என்கின்ற பரபரப்பு கேள்விகள்.. உண்மையோ நமது சொந்த நிலங்கள் உபயோகமில்லாமல் கிடக்கிறது அல்லது சொந்த நிலங்களை விற்றாகி விட்டதே என்ற ஆதங்கம்தான்.

இன்று உணவை தயாரிக்கவே (சமைக்கவே) நேரமில்லை என்றால் உணவு உற்பத்தியைப் பற்றி விவசாயத்தைப் பற்றியெல்லாம் பேசுவது பழையக்கதை தான்.

இடைவெளி

இன்றைய நவநாகரீக உலகில் பல நல்ல கருத்துக்கள் வெளி வந்துகொண்டிருக்கும் வேளையில் இன்னும் இருபது ஆண்டுகளில் நாம் அனுபவிக்கும் மற்றொரு அவலம் பெற்ற பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இருக்கும் இடைவெளியைப் பற்றி தான்.. இன்றே அந்த பிரச்சனை இருக்கிறது என்கிறீர்களா.. பிள்ளைகள் படித்து முடித்து வெளிநாடுகளில் பெற்றோர் பெருமையாக வருடம் ஒருமுறை விசிட், மற்ற நாட்கள் வெறிச்சோடிய தனிமை.

இன்டர்நெட்டும், செல்போனும் உணர்வில்லாமல் உணர்ச்சிகளை தொட்டவண்ணம் காலம் கடக்கிறது. இது இன்றைய நிலை ஆனால் நாளைய நிலைமையோ படு பயங்கரமானதாக நம் கண்முன் ஓடலாம்.. 

நேரமின்மை

வேலைக்கு அவசரமாக ஓடும் தாய்மார்கள் துடிக்கத் துடிக்க எந்த சொந்தமும் (தாத்தா பாட்டி) இல்லாத டே-கேர் (day care) மையங்களில் திரும்பிக்கூட பார்க்காமல் தங்களின் குழந்தைகளை அழ விட்டு செல்லும் நிலை எல்லா ஊர்களிலும் இன்று அரங்கேறுகிறது. இன்று இது நாகரீகம். குழந்தைகளை வேலைக்கு சென்றாலும் இல்லாவிட்டாலும் முழுநேரமும் நாமே வைத்துக்கொள்ள முடியுமா என்ன? என்ற எதார்த்தமான நிலை இன்றைய பெற்றோருக்கு.

இந்த நிலை குழந்தைகளை மனதால் இறுகச் செய்கிறது. ஆரம்பத்தில் பெற்றோரை தேடும் குழந்தைகள் சிறிது காலம் சென்ற உடன் தேடுதல் குறைகிறது அவர்களின் கவனம் மாறுகிறது. இதனையும் பெருமையாக நினைக்கும் நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை விட்டு தூரம் செல்கின்றனர் என்ற நிஜத்தை மறைக்கின்றனர்.

பின் பெரியவர்களானதும் அந்த இறுக்கம் கை மீறிய நிலையில் சற்றும் பெற்றோரைப் பற்றி யோசிக்காத நிலைக்கு தள்ளுகிறது. பணத்தாலும் கேளிக்கைகளாலும் நிறைந்த அவர்களின் வாழ்வில் அம்மா, அப்பா, பாசம், பந்தம் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவர்களுக்கு கிண்டலாக மாறும் நிலை வெகு தூரமில்லை.. நிச்சயம் அனைவரின் கண்முன் அனைத்தும் இந்தச் சனம் படமாக வந்திருக்கும்.

பணம் இருக்கும்… ஆனால்

இது மட்டுமே இன்று பல பல குடும்பங்கள் வெளிநாடுகளில் வாழ சொந்தமும் பந்தமும் இல்லாமலே போகிறது. அதுவும் குழந்தைகளுக்கு யாரையும் தெரியாத நிலை வேறு.. இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு இன்று எவ்வாறு நல்ல உணவு கிடைப்பதில்லை ஆனால் நாமெல்லாம் எவ்வளவு பணம் செலவழித்தாலும் ஆரோக்கியத்தை மீட்க முடியவில்லையோ அவ்வாறு பணம் நிறைவாக இருக்க உறவுகளும், தங்களை பெயர்சொல்லி அக்கறையாக கூப்பிட கூட ஆள் இல்லாத நிலை உருவாகிக்கொண்டே இருக்கிறது..

இப்படி முன்னும் பின்னும் வெறும் இருபது முப்பது வருட கால மாற்றங்கள் நாம் ஒவ்வொருவரையும் பெரிய அளவில் மாற்றமடைய செய்திருக்கும் பொழுது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மாற்றமில்லாது பாரம்பரியத்தையும் அதன் பெருமையையும் நிலை நாட்டும் செயல்கள் உண்மையிலேயே பெரியது தான்.

சமூகமே பாதுகாத்த கருப்பு கவுனி அரிசி

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மாறாததா என்று வியப்பாக இருக்கிறதா.. ஆம் பாரம்பரிய அரிசிகளை பற்றி பார்த்து வரும் நாம், விவசாயமே இந்த முப்பது வருடத்தில் பெருமாற்றத்தை பெற்றிருக்கும் பொழுதும், பல வகை நாட்டு விதைகளும், ரகங்களும் காணாமல் போன பொழுதும் இன்று வரை ஒரு சமூகத்தால் பாதுகாக்கப் பட்டு வரும் அரிசியைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் இருவர் காக்கவில்லை இந்த அரிசியை ஒரு சமூகமே கூடி பல ஆயிரம் வருடங்களாக காக்கிறது. பெருமையாக பாரம்பரியத்தைக் காத்த பெருமை இந்த சமூகத்தையே சேரும் என்று கூட சொல்லலாம்.

அப்படி என்ன தான் அரிசி இது? என்கிறீர்களா. சிகப்பு மாப்பிள்ளை சம்பா, வெளிர் பழுப்பு சீரக சம்பா, பழுப்பு மூங்கிலரிசி என்ற நிறங்களில் அரிசிரகங்களை பார்த்தோமே அந்த வரிசையில் கருப்பு கவுனி தான் நமது பெருமைக்கும், புகழுக்கும் பாத்திரமான பாரம்பரிய அரிசி.

ராஜாக்களின் அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி

அதன் பெயரிலேயே நிறத்தையும் சேர்த்து வைத்திருப்பது அதன் சிறப்பு தான். அரசர்களும், ராஜாக்களும் மட்டுமே பயன்படுத்தியதால் இந்த அரிசிக்கு ராஜாக்கள் அரிசி என்ற பெயரும் உண்டு.

வெள்ளை வெளேரென்று மல்லிகைப்பூப்போல் அரிசியை மட்டுமே உண்ணும் நமக்கு சிகப்பு அரிசியே புதிதாக இருக்க, கருப்பு அரிசி அதுவும் ராஜாக்கள் பயன்படுத்திய அரிசியா, அதனை சமைத்தால் எவ்வாறு இருக்கும், எப்படி சாப்பிடுவது ஏன் இதனை ராஜாக்கள் பயன்படுத்தினர் அப்படி என்னதான் பிரமாதம் இந்த அரிசியில் என்கிறீர்களா?

கருப்பு கவுனி அரிசியின் வரலாறு

முதலில் இந்த அரிசியின் பூர்விகத்தையும், வரலாறையும் பார்ப்போம். ஒரு சமூகம் பாதுகாத்த அரிசி இது என்று பார்த்தோம். அதாவது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலும், கடல் கடந்து பல நாடுகளிலும் நகரங்களை உருவாக்கிய நகரத்தார் சமூகம் தான் இந்த அரிசியையும் பயன்படுத்தி பாதுகாத்த சமூகம்.

செட்டிநாடு என்று இன்றும் பெருமையான ஆடம்பர வீடுகளை… பல நாட்டு பொருட்களையும் இங்கு கொண்டு வந்து சாதாரணமாக தங்குவதற்கு வீடுகளை கட்டுவதற்கே அரண்மனைகள் கட்டுவதைப்போல் கட்டியதும், இன்றும் அவற்றை பாதுகாத்தும் வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

கருப்பு கவுனி அரிசியின் பூர்வீகமும் நகரத்தாரின் வணிகமும்

இந்த செட்டிநாட்டு சமூகமான நகரத்தார் சமூகம் தங்கள் சென்று வணிகம் செய்த பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் விளையவைத்து உண்ட அரிசி தான் இந்த கவுனி அரிசி.

அங்கிருந்து இந்தியாவிற்கு அதுவும் தங்கள் வசித்த செட்டிநாட்டிற்கு கொண்டு வந்து இன்று வரை விளையவைத்தும் உண்டும் வரும் அரிசி தான் இந்த கவுனி அரிசி.

செட்டிநாட்டில் கருப்பு கவுனி அரிசிக்கு என்றும் முதல் மரியாதை

இந்த அரிசிக்கு செட்டிநாட்டு நகரத்தார் இல்லங்களில் முதல் மரியாதையும் உண்டு. விசேஷங்கள், பண்டிகை, திருவிழா, திருமணம் மட்டுமல்ல புது மாப்பிள்ளைக்கும் முதல் மரியாதையுடன் கொடுக்கும் முதல் உணவு இந்த கவுனி அரிசியில் செய்த இனிப்பு தான்.

இந்தியாவில் கருப்பு கவுனி அதிகம் கிடைப்பதைப்போல் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் வெள்ளை கவுனியும் உள்ளது.  மற்ற எல்லா பாரம்பரிய அரிசிகளையும் விட இந்த அரிசிக்கு பல பல சிறப்புகள் உள்ளது.

ஓட்டும் தன்மையுள்ள அரிசி (Glutinous Rice / sticky rice) – கருப்பு கவுனி அரிசி

பொதுவாக அரிசிக்கு  ஒட்டும் தன்மை இருக்காது. ஆனால் இந்த கவுனி அரிசிக்கு அது உள்ளது. எந்த அரிசிக்கும் இல்லாத தன்மை இது. பல பல உடலுக்கு தேவையான தன்மையுடனானது இந்த ஓட்டும் தன்மை.

கருப்பு கவுனி அரிசியின் சுவை

மேலும் இந்த அரிசி சற்று இனிப்பு சுவையாகவும் இருக்கும். நல்ல மணத்தோடும், சுவையோடும் இருக்கும் இந்த அரிசியில் செய்த இனிப்பு பலகாரங்களும், அல்வாக்களும், பொங்கலும் தனி சுவைத்தான்.

சுவையும், மணமும் சரிதான் ராஜாக்களும், அரண்மை போன்ற வீடுகளிலும் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய அரிசியென்றால் சத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

கருப்பு கவுனி அரிசியின் சத்துக்கள்

தவிடு நீக்காத இந்த கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச் சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம். 

புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் ‘அந்தோசியனின்’

தனிச்சிறப்பு இந்த அரிசியில் என்ன வென்றால் இதில் இருக்கும் ‘அந்தோசியனின்’. இந்த நிறமிச்சத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக் கட்டிகளை அகற்றுவதுடன், சிறுநீரகம், கல்லீரல், இதயத்தை பாதுகாக்கக் கூடியது. முக்கியமாக கேன்சரை அண்டவே விடாது.

கருப்பு கவுனி அரிசி எவ்வளவு சாப்பிடலாம்

சத்துக்கள் அதிகம் கொண்ட அரிசி என பார்த்தோம்.. ஒரு அரிசியே பலபல ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளதால் அளவோடு சாப்பிடுவது அவசியமானது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மறந்து விடக்கூடாது.

https://www.youtube.com/watch?v=LsEPpHCoenQ

கருப்பு கவுனி அரிசியை சமைக்கும் முறை

இனிப்பு சுவை கொண்ட இந்த அரிசியில் இனிப்பு உணவுகள் தயாரித்து உண்பது சிறந்த பலனை தரும். ஆறு மணி நேரம் ஊறவைத்து ஒரு மண்சட்டியில் வேகவைத்து அதனுடன் நெய், வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும் – செட்டிநாடு இனிப்பு கவுனி அரிசி.

https://www.youtube.com/watch?v=fd6lqKKJ1JM
https://www.youtube.com/watch?v=IGfvuiKALnw&t=6s

ஆரோக்கியத்தையும், பாரம்பரியத்தையும் நாம் அனைவரும் ஒன்றாக கூடி மீட்டேடுப்போம். வரும், வளரும் சமுதாயத்திற்கு நமது முன்னோர் அளித்து சென்ற வளமான செல்வங்களை நமது செல்வங்களுக்கும் ஆரோக்கியமாகவும், உணவாகவும், வாழ்வியலாகவும், பரம்பரியமாகவும், உறவுகளாகவும் அளிப்போம். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் விளையும் இந்த ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசியை மாநிலம் எங்கும் விளைவிப்போம். 

(1 vote)