Welcome to HealthnOrganicsTamil !!!

கை, கால் வீக்கம்

எந்த ஆர்ப்பட்டமும் செய்யாமல் எதார்த்தமாக பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறமை மிக்க பெண்கள் அன்றாடம் பல தொந்தரவுகளையும் தனக்குள்ளேயே கடந்து கொண்டிருகின்றனர். 

சின்ன சின்ன தொந்தரவுகளுக்கு கூட பெரிய ஆர்ப்பாட்டத்தை அரங்கேற்றும் நபர்களுக்கு மத்தியிலும் பெண்கள் தங்கள் தன்மையை விட்டுக்கொடுக்காமல் அமைதி காக்கின்றனர்.

வீட்டு வேலை, குழந்தைகள், அலுவலகம், அடிப்படை தேவைகள், சேமிப்பு, சமுகம் என பலவற்றை பார்த்து பார்த்து கவனமாக நேரிமுறைப்படுத்தும் பெண்கள் பலர் தங்களது உடல் நிலையில் பெரிய அக்கறை காட்டுவதில்லை.

அக்கறை என்றதும் இன்றைய ஜிம்மும், நவீன உடல் அழகு கலாச்சாரத்தையும் கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை கவனித்து அதற்கு தேவையான எளிய மாற்றத்தை மேற்கொள்வது பற்றிதான் கூறுகிறேன்.

பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினமும் சராசரியான வளர்ச்சியையே ஒவ்வொரு நாளும் பெறுகின்றன. மனித இனமும் அவ்வாறே, குறிப்பாக பெண்களும் அவ்வாறே. உடல் வளர்ச்சி என்பது பெண்களுக்கும் சீராகவே அமைந்துள்ளது. 

ஆனால் பலருக்கு காலை விடியலின் பொழுது கை, கால், முகம் என்று பல பாகங்களும் சாதாரண நிலையை விட சற்று பெருத்தார்ப் போல் வீக்கம் பெறுகின்றது. பின் நேரம் செல்ல செல்ல சாதாரண நிலைக்கு திரும்புவதும் இயல்பாகிறது. 

சராசரியாக 40 வயதை கடந்தவர்களுக்கு பெரும்பாலும் இந்த தொந்தரவு ஏற்படுகிறது. உணவு, வேலை, பழக்க வழக்கம் என்று பல வழக்கமான நிகழ்வுகள் நம்மை நகர்த்திக் கொண்டிருக்க நம் உடலின் இந்த செயல்பாடு ஏன்? என்ற கேள்வியுடன் நாளைத் தொடங்கி பின் அதற்கு நேரம் செலவிட முடியாது அந்த நாளும் முடிகிறது. பின் அடுத்தநாளும் இந்த கேள்வியுடன் ஆரம்பமாகிறது.. 

நாட்கள் செல்ல செல்ல உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை பொருட்படுத்தாததினால் பதிப்பும் தீவிரம் அடைகிறது. கை விரல் முட்டிகளில் தொடங்கிய வீக்கம் மெல்ல மெல்ல உள்ளங்கை, கால்கள், முகம், முட்டிகள் என்று தொடர்வது மட்டுமல்லாது நமது வேலைகளையும் சரிவர செய்ய இயலாத நிலைக்கும் தள்ளுகிறது.

விக்கம் திவிரம் அடைய திவிரம் அடைய,  நம் அன்றாட செயல்பாடுகளை காலை சில மணி நேரம் முடக்கவும் அது செய்கிறது. 

எளிதாக இந்த தொந்தரவுகளில் இருந்து மீழ சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அட்டகாசமான வாழ்க்கையை மறுபடி வாழ தொடங்கலாம்.   

கை கால் வீக்கம் உருவாக காரணங்கள் 

நமது உடல் பல கோடி உயிரணுக்களால் ஆனது. நாம் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கு உடல் உறுப்புகள் சரிவர இயங்க வேண்டும். உடல் உறுப்புகள் சரியான முறையில் இயங்கவே உடலில் உள்ள உயிரணுக்கள் செயல்படுகின்றன. பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்ததே உறுப்புகள்.

ஒவ்வொரு உயிரணுவும் ஒவ்வொரு உயிர் உப்பைக் கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது. இந்த உப்புக்களையே தாது உப்புக்கள் என்று அழைக்கிறோம். இந்த உயிர் உப்பான தாது உப்புக்களே உடலை சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

உடலில் இயக்கத்திற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது இந்த தாது உப்புக்களே. இந்த தாது உப்புக்கள் இல்லாது மற்ற சத்துப் பொருட்கள் உணவாக உடலில் சேர்ந்தாலும் எந்த பயனும் இருக்காது.

உடல் இயக்கத்திற்கு தாது உப்புக்கள் பல உணவின் மூலம் பெறப்படுகிறது. சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குளோரின், சல்பர் மற்றும் கால்சியம் போன்றவை பன்னிரு தாது உப்புக்களில் முக்கியமானவை.

நாம் உண்ணும் உணவில் இருந்தும் உடலில் செயல்பாடுகளில் இருந்தும் பெறப்படும் இந்த தாது உப்புக்கள் பல நேரங்களில் குறைந்தும் அதிகரித்தும் காணப்படும். 

மேலும் உடலில் உள்ள சுரப்பிகள் உடலுக்கு தேவையான மற்ற தாது உப்புக்களை அன்றாட பழக்க வழக்கங்களினாலும் உணவின் துணைக்கொண்டு சுரக்கின்றன.  

நமது உடலில் இரத்த ஓட்டம் இருப்பதைப் போல் மற்றுமொரு ஓட்டமும் உள்ளது. அதுவே நிணநீர் ஓட்டம். நிணநீர் வெள்ளை அணுக்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்றிருக்கும். உடலில் (இரத்தத்தில்) தேவைக்கு அதிகமாக இருக்கும் தாது உப்புக்களை இரத்தம் வெளியேற்ற அவற்றை இந்த நிணநீர் ஓட்டம் பெற்றுக்கொள்ளும் (சாக்கடைக் கழிவுகளைப் போல்).

கழிவு நீர்ப் பொருட்களை வெளியேற்றுவதில் இந்த நிணநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமான தாது உப்புக் கழிவுகளுடன் நிணநீர் உடல் முழுவதும் சுற்றி வரும் போது அதில் உள்ள தேவையற்ற (கழிவு) தாதுக்களை உடலின் மென்மையான சதையின் உயிரணுக்கள் உறிஞ்சிக்கொள்ளும். அவ்வாறு உட்சென்ற கழிவுகளால் உயிரணுக்களின் அளவு பெரிதாகும். உயிரணுக்களின் அளவு பெரிதாக மொத்த உறுப்பும் பெரிதாகி வீங்கியது போல் காணப்படும்.

உணவு முறையும் வீக்கத்தின் காரணமும்

உடல், மன ரீதியாக பல செயல்பாடுகள் வீக்கத்திற்கு காரணமானாலும், நம் அன்றாட வாழ்க்கை முறை இவ்வாறான வீக்கத்திற்கு பெரிய அளவில் காரணங்களாக அமைகிறது. உடலின் தாது உப்புக்களின் பற்றாக்குறை அல்லது கூடுதலே (உடலுக்கு தேவைப்படாத வகையில்) இந்த உடல் வீக்கத்திற்கு காரணம் என்று பார்த்தோம். 

இவை அனைத்திற்கும் பெரிய அளவில் காரணங்கள் என்று பார்த்தால் அவை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் இன்றைய நவ நாகரீக சக்கை உணவுகள் தான். அதாவது அதிகப்படியான உணவுகள் மற்றும் துரித உணவுகளால். 

அதிகப்படியான உணவுகள் என்பது உண்ட உணவு செரிமானம் ஆகாமல் அடுத்த வேலை உணவு உண்பதாகும். அதைப்போல் உயிர் சத்துக்கள் இல்லாது சக்கை உணவுகளை அதிகம் உண்பதும் இதற்கு முக்கியமான காரணமாகும். 

நாம் அன்றாடம் உண்ணும் இரசாயனங்களால் விளைவிக்கப்படும் காய்கள், கீரைகள், கனிகள், தானியங்களாலும் இந்த தாது உப்பு சமநிலையின்மை தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது. காய் கனிகள் இயற்கையின் வரப்பிரசாதங்கள், ஆனால் இன்று இரசாயனங்கள், பூச்சிக் கொல்லி விசங்கள் கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் இரசாயனங்களின் ஊடுருவல் அதிகமாகக் காணப்படுகிறது. 

இவை அனைத்தும் சேர உடல் தன்னுடைய இயல்பு  நிலையையே இழக்கத் தொடங்குகிறது. நாம் உண்ணும் உணவில் சத்துக் குறைபாடு இருக்க அதனை உடலும் இவ்வாறு வெளிப்படுத்துகிறது. அவ்வளவு தான். 

அந்த வெளிப்பாடு பல விதங்களில் பல நோய்களாக தோன்றுகிறது. கை, கால் வீக்கம் தொடங்கி arthritis வரை நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த சமநிலையின்மை காரணமாக பலர் அன்றாடம் வாழ்க்கையை சிரமத்துடனும், அடுத்தவரின் உதவியுடனும் நடக்க கூட முடியாமல் நகர்த்துகின்றனர். 

உடலால் கிரகிக்க முடியாத அதிகப்படியான தாது உப்புக்கள் கொண்டவர்களுக்கு காலையில் வீக்கம் பின் நேரம் செல்ல செல்ல சீராகும். அதே போல் தாது உப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு நேரம் செல்ல செல்ல அதாவது மாலை / இரவு வீக்கம் தோன்றும்.

இந்த சமநிலையின்மை என்பது பல நேரங்களில் கூடுதலாகிறது என்று பார்த்தோம். நீங்கள் கேட்பது புரிகிறது. குறைந்தால் தானே தொந்தரவு வர வேண்டும். ஆனால் இங்கு அதிகமானாலும் தொந்தரவு வருகிறதே என்று? ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’.

ஒரு உதாரணத்தை முதலில் பார்க்கலாம். அதாவது நாம் அனைவருக்கும் தெரிந்த உதாரணத்தையே இங்கு நான் நினைவு படுத்த உள்ளேன். கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து ஒரு தாதுப் பொருள் தான். அந்த கல்சியம் சத்தானது உடலால் சீராக கிரகிக்க வேண்டுமானால் வைட்டமின் டி சத்து அவசியம். வைட்டமின் டி சத்தையும் கால்சியத்தையும் சீராக கொடுக்க உடல் ஆரோக்கியமாகும். அவ்வாறு இல்லாமல் வெறும் சுண்ணாம்பு சத்து மட்டும் உடலில் இருக்க அவற்றை கிரகிக்கக் கூடிய துணை சத்துக்கள் இல்லாமல் போனால் அந்த தாது உப்பு அதிகமாகவும் தேவையில்லாமலும் உடலில் உள்ளது என்று அர்த்தம். 

சுண்ணாம்பு சத்திற்கு  வைட்டமின் டி தேவை, அதைப்போல் மற்ற தாது உப்புக்களுக்கு வெவ்வேறு துணை சத்துக்கள் தேவை. இவை அனைத்தையும் சீரான முழு ஊட்டச்சத்துள்ள உணவுகளாலேயே அளிக்க முடியும். ‘உணவே மருந்து மருந்தே உணவாகும்’. 

முழு ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு என்பது நம் மரபணுவிற்கும் நம் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். நம் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் இதற்கு பேருதவியாக இருக்கும். பட்டை தீட்டாத பாரம்பரிய அரிசிகள், பலபல சத்துகளை தனக்குள் கொண்டிருக்கும் சிறுதானியங்கள், முளைகட்டிய பயறுகள், நம் மண்ணிற்கும், நம் சுற்றுசூழலுக்கும் ஏற்ற எண்ணெய் வித்துக்கள், பருவ காலத்திற்கு ஏற்ப கிடைக்கும் காய்கள், பழங்கள், கீரைகள் என நமது முன்னோர்கள் நம் பாரம்பரிய உணவுகளை குறைவில்லாமல் சமச்சீராக உட்கொண்டாலே போதும் இந்த தொந்தரவுகள் விரைவில் மறையும்.

5/5 - (1 vote)
சிந்தனை துளிகள் :

மனம் இருந்தால் மாரியம்மா, இல்லாவிட்டால் காளியம்மா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!