செடிகளுக்கு தண்ணீர்

‘நீரின்றி அமையாது உலகு’…

உலகின் மூன்று பங்கு கடல் நீராக இருந்தாலும், அவை பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. கடல் நீர் தாவரங்கள், மண், சுற்றுச்சூழல் போன்றவற்றின் துணையுடன் நீர் ஆவியாகி மழையாக உருவெடுத்து ஆறுகள், குட்டைகள், குளங்கள் போன்றவற்றின் துணையில் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாக அமைகிறது. மழைக்கு காரணியாக இருக்கும் தாவரங்கள், மண், சுற்றுசூழல் போன்றவை மாசடையும் பொழுது மழையின் அளவு குறைகிறது. இதனால் சுழற்சி முறையில் மண் உயிரற்றதாக மாறுகிறது, சுற்றுசூழல் வெப்பத்தை அதிகரிக்கிறது, தாவரங்கள் வளர்ச்சி பாதிப்படைகிறது.

நீர் இல்லையானால் மனித உடலும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இன்று நமக்கு கிடைக்கும் நீர் வரவிருக்கும் காலத்தில் இருக்குமா? நமது சந்ததியினருக்கு கிடைக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

இயற்கை தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள், தேனீக்கள் போன்றவைகள் மூலம் ஒவ்வொருநாளும் தன்னைப்புதுப்பிக்கும் இயற்கை எதற்கும் மனிதனை நாடுவதில்லை.

நிலத்தடி நீர்வற்றிவிட்டது, புவி வெப்பமயமாக்கல், மழைபொய்த்தது, மலடான மண் போன்ற அனைத்தும் மனிதனின் செயல்களுக்கான எதிர்விளைவுகளே. மழைபொய்த்ததால் பயிர்கள் வாடியது, உணவு உற்பத்திக்கு ஆபத்து என பல பல செய்திகள் அன்றாடம் வந்தவண்ணம் இருக்க, உண்மையில் அவ்வளவு மழைநீரையும் நாம் பயன்படுத்துகிறோமா என்ன? எண்பது சதவீத நீர் வீணாக போவதுதான் நிதர்சனம். அதோடு பயிர்கள் என்ன மீதமிருக்கும் அனைத்து நீரையுமா எடுத்துக்கொள்கிறது? வெயில் காலம் தொடங்கினால் வெப்பம் அதிகம் என்று செடிகளுக்கு நிழல் வலை அமைப்பதும், ஒவ்வொருநாளும் செடிகள் வாடிவிடுமோ என்ற பயத்தில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றுவதும் பல இடங்களில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அவ்வளவு தண்ணீர் செடிகளுக்கு தேவையா?

அப்படியானால் தெருக்களிலும், காடுகளிலும் மானாவாரியாக விளையும் செடி, கொடி, மரங்களுக்கு யார் அன்றாடம் நீர் ஊற்றுவது, யார் அவற்றை விதைத்து பராமரிப்பது, யார் உரம் இடுவது? இயற்கை வெயில் காலத்திலும் தனது கொடையை இந்த மரம், செடிகளுக்கு யாருடைய உதவியும் இன்றி அளிக்கிறதே.. 

இயற்கையின் சுழற்சியில் நடக்கும் மிக பிரம்மாண்டமான செயல் தான் இது, எங்கிருந்தோ பறவைகள் மூலம் விதைகளை விதைத்து அன்றாட விடியலின் பனித்துளிகள் நீரினை ஊற்றி, காய்ந்த குப்பை இலைதழைகள் மக்கி மண்ணுக்குள் செல்ல அவற்றை நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் உண்பதோடு மற்ற விலங்குகளின் எச்சமும் சேர்ந்து மண்ணைவளமாக்கி மரம், செடிகளை எல்லாக்காலங்களிலும் செழிப்பாக யாருடைய பராமரிப்பும் இல்லாமல் வளர்கிறது.

இயற்கையின் சுழற்சியில் நடக்கும் மிக பிரம்மாண்டமான செயல் தான் இது, எங்கிருந்தோ பறவைகள் மூலம் விதைகளை விதைத்து அன்றாட விடியலின் பனித்துளிகள் நீரினை ஊற்றி, காய்ந்த குப்பை இலைதழைகள் மக்கி மண்ணுக்குள் செல்ல அவற்றை நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் உண்பதோடு மற்ற விலங்குகளின் எச்சமும் சேர்ந்து மண்ணைவளமாக்கி மரம், செடிகளை எல்லாக்காலங்களிலும் செழிப்பாக யாருடைய பராமரிப்பும் இல்லாமல் வளர்கிறது.

இப்படி அழகாக வளரும் தாவரங்களுக்கு நாம் மெனக்கெடுவது தான் எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது.. சரி இந்த தாவரங்களுக்கு யார் நீருற்றுவது? பனித்துளிகள்!! ? ஆம், எவ்வளவு வெயில்காலத்திலும் பனித்துளிகளை நாம் பார்க்கத்தானே செய்கிறோம், அவை தான் தாவரங்களுக்கு நீருற்றுவது..

செடி கொடி, மரங்கள் செழிப்பாக வளர செடிகளுக்கு தேவை ஈரப்பதமே தவிர அதிக தண்ணீர் இல்லை. அதிகமான தண்ணீரினை செடிகளுக்கு ஊற்றினால் அவற்றில் முக்கால் பங்கு வீணாகத்தான் போகிறது, அதோடு பல நேரங்களில் அவை தேக்கமடைந்து வேர்களை பாதித்து செடிகள் அழுகவும் காரணமாக அமைகிறது. 

இப்படி இயற்கையில் கிடைக்கும் பனித்துளிகளின் மூலம்  தாவரங்கள் எவ்வாறு தனக்கு தேவையான ஈரப்பதத்தைப் பெறுகிறது என்பதனை மூடாக்கு பகுதியில் பார்க்கலாம்.

அதாவது மூடாக்கு என்பதனையும், மூடாக்கினால் கிடைக்கும் நன்மைகள், எவ்வாறு நமது வீட்டில் நமது செடிகளுக்கு மூடாக்கினை இடுவது, அதன் மூலம் நாமும் பனித்துளிகளைக் கொண்டு நமது செடிகளின் நீர்த்தேவையை பூர்த்திசெய்வது, மூடாக்கின் பயன்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செடிகளுக்கு தேவையான நீரினை எவ்வாறெல்லாம் அளிக்கலாம்…

செடிகளுக்கு காலையும் மாலையும் தண்ணீரினை தெளித்தால் போதும். செடிகளுக்கு பூவாளி கொண்டு தண்ணீர் தெளித்தாலே போதும். எளிதாக வீட்டிலேயே தேவையற்ற தண்ணீர் பாட்டில்களை கொண்டும் செடிகளுக்கு நீரூற்றலாம். தேவையற்ற பாட்டில்களின் அடியில் ஊசியினைக் கொண்டு சிறு சிறு துளைகளைப் போடவேண்டும். பின் நீரினை அந்த பாட்டிலில் நிரப்பி, மூடிபோட்டு ஸ்பிரே செய்யவேண்டும்.

இன்னும் எளிதாக செடிகளுக்கு திரியைக்கொண்டும் நீரூற்றலாம். விளக்கிற்கு எப்படி திரிபோட்டு எண்ணெய்யை கடத்தி விளக்கேற்றி ஒளியினைப்பெறுகிறோமோ அதைபோல, செடிகளை வைக்கும் தொட்டியில் மண்ணை நிரப்பும் முன் அடியில் நீர் வெளியேறும் துளைகளின் வழியாக ஓர் பெரிய நூல் கயிறினை திரிபோல் செய்து தொட்டியின் உள்ளிருந்து வெளியில் இடவும். உள்ளும், வெளியும் இந்த கயறு சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பின் மண்ணை நிரப்பி விதையை விதைக்கவும். கீழிருக்கும் திரியின் மற்றுமொரு பாதியினை அடியில் ஒரு சின்ன தட்டில் நீரினை நிரப்பி அதனில் விடவும். இதன் மூலம் செடிகள் இருக்கும் மண்ணிற்கு தேவையான ஈரப்பதம் இந்த தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து தேவைக்கேற்றவாறு கிடைக்கும். இதனால் நீரின் அளவும் குறையும், அன்றாடம் நீரூற்ற தேவையும் இல்லை, கீழிருக்கும் தட்டில் நீரிருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும், குறைய குறைய விளக்கிற்கு எண்ணெய் ஊற்றுவது போல் இந்த தொட்டியின் அடியில் தண்ணீரை நிரப்பவேண்டும். அவ்வளவுதான்.


நிலத்தில் இருக்கும் செடிகளுக்கு நிலத்தடி நீர் குறைவாக இருக்கும் சமயம் எளிமையாக ஒரு பைப்பினை வைத்து எளிதாக நீரூற்றலாம். ஈரப்பதத்தையும் காக்கலாம். இதனை தொட்டியிலும் கூட செய்யலாம். பைப் மட்டுமல்லாமல் தேவையற்ற தண்ணீர் பாட்டில்களைக் கொண்டும் இதனை செய்யலாம். இதற்கு முதலில் பைப் அல்லது பாட்டிலை சுற்றி ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு நிறைய துளைகள் இடவேண்டும், பின் செடிகளுக்கு 1/4 அடி அருகில் முக்கால்பங்கு பைப்பினையோ அல்லது பாட்டிலினையோ நுழைக்க வேண்டும். பைப் அல்லது பாட்டிலில் தண்ணீரினை நிரப்ப தேவைக்கேற்றவாறு ஈரப்பதமும் காக்கப்படும். நிலத்தடி நீரும் காக்கப்படும்.

மற்றுமொரு முறையென்றால் அது நமது சொட்டுநீர் பாசன முறைதான். பல மாநிலங்களின் மத்தியில் விவசாய நிலங்கள் மட்டுமல்ல இன்று வீட்டு தோட்டத்திற்கும் இந்த முறை பேருதவியாக இருக்கிறது. சொட்டுநீர் பாசன குழாய்களை ஒவ்வொரு செடிகளிலும் இட, பொதுவான ஒரு குழாயினை திறக்க எளிதாக நீரும் தேவைக்கேற்றவாறு ஈரப்பத்தைக்காக்குமளவு செடிகளுக்கு வந்து சேரும். நீரும் வீணாகாது.