நோயிலிருந்து வெளிவர

உண்மையில் ஆரோக்கியம்

இயற்கை, இறைவன், பிரபஞ்சம், உயிர் சக்தி போன்ற சொற்களை மறந்த நாட்கள் உண்டா என்றால்.. இல்லை என்றே கூறலாம். இந்த சொற்கள் வெவ்வேறாக இருந்தாலும் அதன் உண்மை நிலை ஒன்றுதான்.

இயற்கைக்கும் பிரபஞ்சத்திற்கும் மட்டுமல்ல இந்த உண்மை நிலை.. மனிதர்களும் அதில் ஒரு அம்சம்தான்.

“அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது” என்பது நாமறிந்த ஒன்று. அண்டம், பிரபஞ்சம், இயற்கை, இறைவன் எல்லாமே ஒன்று தான். மனிதனும் இதில் ஒன்று தான்.

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவற்றைக் கொண்டது தான் இந்த அண்டமும், பிரபஞ்சமும். அவற்றையே தான் மனிதனின் உடலும் கொண்டுள்ளது. ஆதலால் தான் நமது முன்னோர் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்றனர். 

ஐம்பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்பது ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலமாகும். இவற்றின் தன்மைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. இந்த பிரபஞ்சமும், நமது உடலும் வளமானதாக இருக்க இவற்றின் சீரான நிலை மிகவும் அவசியம்.

இதனை “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”என்கிறது தொல்காப்பியம்.

அனைத்தையும் தனக்குள் வைத்திருக்கும் ஆகாயம் அவற்றை தன்வயப்படுத்தி புதுப்பித்தலையும், செழுமையையும் அளிக்கிறது.

அன்றாடம் மாசுபடும் காற்று, நீர், நிலத்தினை புதுப்பித்து அதன் சுழற்சியினை தூய்மைப்படுத்தி அவற்றைக் காக்கிறது. மாயங்கள் நடப்பதைப்போல் உலகில் உள்ள அனைத்து நச்சுக்களையும் தூய்மைப்படுத்தும் மூலகம் ஆகாயம் என்னும் வெற்றிடம்.

காற்றின் தன்மையோ மறைந்திருந்து தன்னுடைய அவசியத்தை வெளிப்படுத்துவது. காற்றினை யாராலும் பார்க்க முடியாது.. காற்று இல்லாது யாராலும் உயிர் வாழவும் முடியாது.

வெப்பத்தைக் கொடுக்கும் நெருப்பின் தன்மையோ அனைத்தையும் தன்மயமாக்குவது. மேல் நோக்கி செல்லும் தன்மையினை உடைய நெருப்பு உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானதாகும்.

“நீரின்றி அமையாது உலகு” என்பதினை யாரும் மறக்க முடியாது. கீழ்நோக்கி செல்லக்கூடிய நீரானது குளிர்ச்சியினையும், சுத்திகரிப்பினையும் அளிக்கக்கூடியது. 

நிலமானது பொறுமைக்கு பெயர்போனது. என்னதான் அதனை துன்புறுத்தினாலும் முடிந்தவரை தன்னை வருத்திக்கொண்டு காக்கக்கூடியது. பார்க்க ஜடமாக தோன்றினாலும், உலக உயிர்களை உண்மையில் காக்கிறது. உள்ளிருந்து உலகிற்கு தேவையான பலவகை காரணிகளையும் உருவாக்கிறது.

பஞ்சபூதங்கள் சமநிலையில் இயல்பாக இருக்க அதன் சக்தி தெரிவதில்லை. சமநிலைப்பாட்டில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட விளைவுகள் விபரீதமானதாகும்.

ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு மழை அதன் பருவகாலத்தில் பரவலாக பொழிய உலகு வளமாகும். அவ்வாறு இல்லாமல் அதே அளவு மழை ஓரிரு நாளில் மொத்தமாக கொட்ட பாதிப்புகள் ஏராளம். 

சமமான வெப்பம் நிலவ எந்த பாதிப்புமில்லை, அது இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது. அதே வெப்பம் சற்று உயர்ந்தால் அது பல அழிவுகளுக்கு வழிவகை செய்வதாகும்.

இந்த பஞ்சபூதங்கள் அண்டத்தில் மட்டுமல்ல நமது உடலிலும் உள்ளது. அண்டத்தில் ஏற்படும் சமநிலைப்பாட்டால் சூறாவளி, புயல், வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, சுனாமி, பனிமலை கரைதல் போன்றவை நிகழ்கிறது. அதுவே நமது உடலில் ஏற்பட நோய்களும், உபாதைகளும், உடல் தொந்தரவுகளும் ஏற்படுகிறது.

உடலில் வெப்பம் அதிகமாக மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, உடல் உஷ்ணம், மலச்சிக்கல் போன்றவையும், அதே வெப்பம் உடலில் குறைய சோம்பல், உடல் வலி போன்றவை ஏற்படுகிறது. உடலில் போதிய உழைப்பு இல்லாததால் பல பல நோய்களும் உருவாகிறது. 

உடலில் காற்றின் அளவில் சமநிலைபாடு குறைந்தோ அல்லது அதிகரித்தோ காணப்பட்டால் மூச்சு சம்மந்தமான தொந்தரவுகளும், பெருங்குடல் தொடர்பான தொந்தரவுகளும் ஏற்படும்.

நிலத்திற்கு சமமான நமது வயிற்றில் ஏதேனும் தொந்தரவுகள் ஏற்பட அது பொறுமையாக பல பின்விளைவுகளை ஏற்படுத்தி அதன்பின் அதனை வெளிப்படுத்தும். தவறான உணவுகளால் வயிறு மட்டும் பாதிப்படைவதில்லை மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது.

உடலுக்கு அத்தியாவசியமான உணவு சீராக இருக்க நமது மற்ற பழக்கவழக்கங்களையும் சீர்படுத்திக்கொள்ளவே நூற்றுக்கு நூறு சதவீதம் உடல் ஆரோக்கியமாகும்.

உடலில் தலை, கை, கால், வயிறு என பல உறுப்புகள் இருந்தாலும் அவை ஆரோக்கியமாக இருக்கும்வரை அவை தனியாக தெரிவதில்லை. அதுவே கையிலோ அல்லது காலிலோ ஏதேனும் சிறு தொந்தரவு ஏற்பட கையை அசைக்கவும், காலினை அசைக்கவும் பெரும்பாடு படவேண்டியதாக இருக்கும்.

உணவு இருபது சதவீதம் நமது உடலைக் காக்கிறது என்றால் மீதம் இருக்கும் எண்பது சதவீதம் நீர், காற்று, ஓய்வு மற்றும் சீரான வேலைகள் பெரும்பங்கு வகிக்கிறது. 

உணவு உடலுக்கு பலம், வளம், தெம்பினை அளிக்க, நீர் உயிரோட்டத்தை அளிக்கிறது. காற்றோ உயிரையே உடலுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு“.. அளவான உணவும் அதற்கேற்ற குடிநீரும் உடலை பாதுகாக்கிறது. “நீரின்றி அமையாது உலகு” உடலுக்கு தேவையான நீரோட்டம் இருக்க இரத்தஓட்டமும் கழிவுகளின் வெளியேற்றமும் சீராகும். பல நோய்கள் இதன் மூலம் காணாமல் ஓடிவிடும். 

தேவைக்கும் தாகத்திற்கும் ஏற்ற தூய்மையான மண்பானை குடிநீர் சிறந்தது.


காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!! ஏற்றாற்போல் நமது உடல் நல்ல உணவும், நீரும் இருக்க தூய்மையான காற்றினை நிரப்பியே இருக்கிறது. அன்றாடம் அலுவலகம், வீடு, வாகனம் என்றிருக்கும் நமக்கு தூய்மையான காற்று கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. அதனால் அனுதினமும் விடியற் காலை சூரிய உதய நேரத்தில் வெட்டவெளியில் ஏதேனும் மூச்சு பயிற்சியோ, சூரிய நமஸ்கரமோ அல்லது கோலமிடுதல், தோட்ட வேலை செய்வதால் உயிர் காற்று நமது உடலை அடைகிறது. இதனால் உடலில் இருக்கும் பல நோய்கள் விரைவில் மறைகிறது. 

உணவு, நீர், காற்றினைப் போலவே நமது உடலுக்கு அளவான உழைப்பும் அவசியமாகிறது. பலர் எந்த உழைப்பையும் உடலுக்கு அளிக்காமல் எந்நேரமும் சோம்பலாக உறங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது என்றிருப்பதும், இன்னும் பலர் உணவு, தண்ணீர் இல்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பது இன்று சர்வ சாதாரணமாக உள்ளது. இதனால் உடலில் உள்ள வெப்பம் அதிகமாகவும், குறைந்தும் பல நோய்களுக்கு காரணமாகிறது.

உணவு, நீர், காற்று, அளவான உழைப்பு மட்டுமல்ல சீரான ஓய்வும் உடலுக்கு அத்தியாவசியமானது. ஓய்வு என்றது அளவான தூக்கத்தையும் உடலுக்கு தேவையான ஓய்வினையும் குறிப்பது.

உணவிற்கு பின் தூக்கமில்லாமல் சற்று ஓய்வும், இரவு தூக்கமும் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இன்றைய நவநாகரீக வாழ்க்கையில் இரவு தூக்கம் குறைந்து பகல் தூக்கம் அதிகரித்துவிட்டது, மேலும் பல அலுவலகவேலைகள் இரவில் அரங்கேற அதனால் அதிகமாக உடல் பாதிப்படைகிறது. என்னதான் ஒவ்வொரு பஞ்சபூதங்களும் உடல் ஆரோக்கியத்திற்கு இருபது இருபது சதவீதம் அதன் பங்கினை அளித்தாலும், பாதிப்பு என்றஇடத்தில் இருந்து பார்த்தல் ஒன்றின் குறைபாட்டால் எண்பது சதவீத பாதிப்புகள் உருவாகிறது.

சீரான இரவு தூக்கமில்லையானால் உடல் வெப்பம் அதிகரித்து, உடலில் நீர்சத்து குறைந்து, வளர்சிதை மாற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டு உடல் சின்னாபின்னமாக மாறுகிறது. 

இவ்வாறான நமது நடவடிக்கைகள், பழக்கங்களால் பலவகையில் உடல் பாதிக்கப்படுகிறது. எந்தவகையிலும் இதற்கு நல்ல உணவு மட்டுமே தீர்வாக ஆகாது. நமது பழக்க வழக்கங்களையும் நாம் மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். அதனால் மட்டுமே உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

உணவு என்பதனை பொதுவாக நாம் வெறும் திட உணவாக மட்டுமே பார்க்கிறோம். அவ்வாறு இல்லாது உணவு என்பது திடஉணவு, நீர் அல்லது திரவ உணவு, காற்று உணவு, உடல் அசைவு அல்லது உழைப்பு உணவு மற்றும் ஓய்வு உணவு என்று வகைப்படுத்தி பகிர்ந்து எடுத்துக்கொண்டோமானால் என்றும் ஆரோக்கியமே. இந்த சமநிலையில் தான் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது.