திராட்சை மருத்துவம் / Grapes Benefits

திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடையது தான்.

இருதய நோய்

திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இருதய நோய்கள் அகலும். இருதய செயல்பாடு சிறப்பாக அமையும்.

குடல்புண்

குடல்புண் உள்ளவர்கள் கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் உள்ளவர்கள் இதன் பழத்தை சாறாக எடுத்து அந்த பழச்சாற்றை மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.

இருமல்

20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டு பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்.

அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள்

அசைவ உணவு உண்ணாதவர்கள் அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.

நோய் தடுப்பு சக்தி

தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்பு சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், ஜீரண சக்தியும் தரக் கூடியதும் இந்த திராட்சை.

தலைவலி

காலையில் எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகிவர, நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி, இவை தரும் தீராத தொல்லைகளும் தீரும்.

பெண்களுக்கு

மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் இந்த திராட்சை ரசம் பருகி வர நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும், உடல் பலப்படும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவப் பண்டம் திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து அல்லது திராட்சை ரசம் கொடுத்தால் பலன் தெரியும்.

எந்த திராட்சை சிறந்தது

திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விட புளிப்பில்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகவும் உள்ளது. இன்று சந்தைகளில் கிடைக்கும் நவீன விதையில்லாத திராட்சையை தவிர்ப்பது சிறந்தது.

திராட்சை ரசம்

திராட்சை ரசம் தயாரிக்க இரவு பத்து பதினைந்து திராட்சைகளை சுத்தமாக கழுவி அவை மூழ்கும் வரை நீரை ஊற்றி ஊறவைக்க வேண்டும். காலையில் நன்கு ஊறிய இவற்றை கைகளால் பிழிந்து கசக்கி கரைக்க திராட்சை ரசம் தயார்.

திராட்சை பாதிப்புகள்

இன்று பெருமளவில் இரசாயனங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தி திராட்சைப் பழம் பயிரிடுவதால் காய்ச்சல், தொண்டைப்புண் போன்ற பாதிப்புகள் திராட்சையை உண்பதால் ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் திராட்சைப் பழத்தை வாங்கும்முன்… உண்ணும்முன் கவனம் தேவை.