கோடையை குளிரூட்டும் இயற்கை பழங்கள்

காலை விடியல் முதல் இரவு உறக்கம் வரை அனைத்திலும் தரம், தூய்மை, சுகாதாரத்தை விரும்புகிறோம். சின்ன சின்ன செயல்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை அனைத்திலும் இதற்கான தேடலைக் கொண்டிருக்கிறோம்.

தரமான பற்பசை, அழகு சாதனப் பொருட்கள், தூய்மையான சோப்பு, சுகதரமான உணவு என தொடங்கி தரமான கார், கல்வி, வாழ்கை சூழல் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அனுபவிக்கும் நாம் நல்ல தரமும், தூய்மையும், சுகாதாரமும் மட்டுமே ஆரோக்கியத்தை அளித்து விடுமா என்று என்றாவது சிந்தித்ததுண்டா… 

தரம், தூய்மை, சுகாதாரம் என்ற பெயரில் இன்று நமது உணவுகளில் உடலுக்கு சம்மந்தம் இல்லாத பல உலோகக் கூறுகள், பதப்படுத்திகள், இரசாயனங்கள், இரசாயன பூச்சிக் கொல்லிகள், செயற்கை நிறமூட்டிகள், இரசாயன சுவையூட்டிகள் எனப் பல நஞ்சுகள் அன்றாடம் கலக்கின்றது.

உணவில் இவை கலக்க, உணவு எவ்வாறு ஆரோக்கியமானதாகும்?

இன்றைய உணவுகளே நவீனமாக்கப்பட்ட நிலையில் எதோ கொஞ்சம் சத்துக்கள் அவற்றின் மூலம் கிடைகிறது, அதுவும் இவ்வாறான நச்சுக்கள் மூலம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் அளிப்பதற்கு பதில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. வலியையும், வேதனையையும் கொண்ட உடல் பல கழிவுகளின் இருப்பிடமாக உருமாறுகிறது. 

கழிவுகள் உடலில் அதிகரிக்க அதிகரிக்க உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். அதாவது, குப்பைகள் உடலில் சேர சேர உடல் உஷ்ணமாகும். உஷ்ணம் அதிகமாக அதிகமாக உடலில் கழிவுகள் வெளியேற முடியாமல் தேங்குகிறது. உடலின் உஷ்ணம் கழிவுகளை வெளியேற விடாமல் நீர்த்தன்மையின்றி (நீர்ச்சத்துக்களை உறுஞ்சி விடும்) தேங்கச் செய்கிறது.

இராசயனங்கள் மற்றும் செயற்கை உணவுகளால் கழிவுகள் வெளியேற முடியாமல் தேங்குகிறது. தேங்குவது மட்டுமல்லாது உடல் துர்நாற்றதை அதிகரித்து உடலில் பல வேதிவினை மாற்றங்கள் ஏற்பட உடலில் உள்ள கழிவுகளை மேலும் இறுகச் செய்கிறது. இதனால் மலச்சிக்கல், நீர்கடுப்பு, சிறுநீர்கல், இரத்த அழுத்தம், வறண்ட சருமம், கட்டிகள், வேர்க்கூறு போன்றவை ஏற்படும். 

கழிவுகள் உடலில் தேங்க உஷ்ணமும், உஷ்ணம் அதிகரிக்க கழிவுகள் தேக்கமும் மாறி மாறி சுழற்சியில் நடைபெறும். உஷ்ணம் அதிகரிக்க, மலச்சிக்கல் உருவாக அனைத்து நோய்களுக்கும் அதுவே பிறப்பிடம்.

மலம், அதாவது கழிவு உடலில் தேங்க அங்கிருந்து நோய்க்கான காரணம் தோன்றும். இதனை மிக அருமையாக நம் முன்னோர் ‘மலச்சிக்கலே அனைத்து நோய்களுக்கும் தாய்’ என்று கூறிச் சென்றுள்ளனர். இந்த தொந்தரவுகள் அனைத்தும் தலை தூக்கும் காலம் நம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. 

சாதாரணமாகவே இன்றைய நவீன உணவுகளால் உடல் உஷ்ணமடைகிறது என்னும் நேரத்தில் சூழ்நிலையும் உஷ்ணமாக இருக்க சொல்லவா வேண்டும் அதன் கொடுமையையும் உடல் படும் பாட்டையும்… வருவதோ கோடை காலம். அதுவும் உலக வெப்பமயமாக்கல், புற ஊதா கதிர்களின் கொடுமையான தாக்கம் போன்றவற்றிக்கு இடையில் தை மாதமே தொடங்கியது வெப்பத்தின் தாக்கம். இதனால் உடலில் ‘பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்’ எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை இயற்கையாகவே உருவாகும். அதோடு இராசயனங்கள் கலந்த உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றினால் உருவாகும் புதுப்புது தொந்தரவுகளை நினைக்கும் போதே அடுத்து வரும் மூன்று மாதத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற பயம் தொடங்குகிறது.

குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கே இந்த தாக்குதல் அதிகமாக இருக்கும். மேலும் இந்த மலச்சிக்களில் இருந்தும் பலர் தப்பிப்பது பெரிய சவாலான காரியமாகவும் இருக்கும்.

கோடை காலம் என்றதுமே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, சுற்றுலா செல்லும் நேரம் என்று மனதில் வசந்தம் வீச நிஜத்தில் வெயில்  கொளுத்த உடலை சீராக வைத்துக்கொள்வது அவசியம். எப்பேர்ப்பட்ட வெயிலிலும் புத்துணர்வும் உற்சாகமும் குறையாமல், உடல் கழிவு தேங்காமல் ஆரோக்கியமாக மனநிறைவுடன் இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் பலர் இருக்கிறோம்.

நீராகாரம்

இந்த கோடையை இனிதாக்கும் சிறந்த வழிகள் மண்பானையில் வெற்றிவேர் தண்ணீரும், நல்லெண்ணெய் குளியலும், பகல் தூக்கம் இன்றி சீரான இரவுத் தூக்கமும், பாரம்பரிய அரிசியில் காலை நீராகாரமும், பழ உணவுகளும், பழச்சாறுகளுமாகும்.

பழச்சாறு

பழச்சாறுகள் என்றதும் கடைகளில் இருந்து கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட சாறுகளை சொல்லவில்லை. 

கோடையின் தாக்கத்தை கற்றாழையும், நெல்லிக்காயும், தர்பூசணியும் தவிர்க்கும். (பதப்படுத்தப்பட்ட கற்றாழை சாறும், பள பள வென்று நிறமேற்றப்பட்ட தர்பூசணியும் எந்த புத்துணர்வையும் கொடுக்காது மாறாக அதிலுள்ள இராசயனங்கள் உடலில் கழிவுகளாக மாற்றும்). உடல் சூரிய வெப்பத்தைக் காட்டிலும் உஷ்ணமடையும். அதோடு ஒரு நிமிட உற்சாகத்திற்காக அருந்தும் குளிர்பானங்களையும், சர்பத், சோடா, ஐஸ்கிரீம் போன்றவற்றை நிச்சியம் தவிர்க்க வேண்டும். இவை கோடையில் உடலின் வெப்பத்தை கூட்டுவதுடன் உடலில் மலச்சிக்கலையும் உருவாக்கும்.

நெல்லிக்காயும் நெல்லிச்சாறும் உடலுக்கு நல்லது என்று தெரிந்து வைத்திருக்கும்  நாம் அவற்றை உட்கொள்ள இயற்கை நெல்லிக்கையை விட்டுவிட்டு பதப்படுத்தும் இராசயனங்கள் கொண்ட அடைக்கப் பட்ட நெல்லிசாறை பருகிவிடத்தொடங்குகிறோம். உண்மையான பழச்சாறுக்கும் பதப்படுத்தப்பட்ட பழச்சறுக்கும் உள்ள உயிர் சத்துக்கள், குணங்கள், தன்மைகள், மருத்துவ நிலைகள் முற்றிலும் வெவ்வேறானது.

இவ்வாறான பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளுக்கும் குளிர் பானங்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே உடல் நலத்தைக் கெடுக்கும். அதுவும் குளிராக அருந்த உடல் சமநிலை மாறும். அதனை புரிந்துகொள்ளாமலும், தெரிந்துகொள்ளாமலும் ஒரு வருடமாக பதப்படுத்தப் பட்ட நெல்லிக்காய் சாறையும், கற்றாழை சாறையும் பலர் நல்லது என்று கூற பருகுகிறோம், அதனால் எந்த மாற்றமும் உடலில் ஏற்பட வில்லை என்று கடைசியில் புலம்புகிறோம். புலம்புவது மட்டுமல்ல அந்த பழத்தையும் இன்று குறைசொல்ல தொடங்கிவிட்டோம்.

நவீனம் வளர வளர எல்லாவற்றிலும் அவசரம் கூடவே பார்க்க அனைத்து பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். பருகுவது  உண்மையான பழச்சாறு தானா?

இயல்பு இயற்கை தன்மை, சுவையுடன் இருகிறதா? என்று பார்க்கத் தவறுகிறோம். செயற்கை சுவையூட்டியும், நிறமூட்டியும் இன்று வரவழைக்கும் நோய்கள் எண்ணிலடங்காதது குறிப்பாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதாக தாக்குகிறது. வளரும் தலைமுறையினர் சிந்தனை திறனையும், சீரான செயல்பாடுகளையும் இழக்க முதல் காரணம் இவைகளே.  

இன்று பழங்கள், அடிப்படை விதையிலிருந்து (விதையில்லாத பழங்கள்) மாற்றமடைவதும், அவற்றை இராசயனங்களால் பயிரிடுவதும் தொடர்கிறது. விளைந்த பழங்களை பதப்படுத்தவும், பழுக்க வைக்கவும், பார்க்க பளபளக்க பல நாட்கள் கெடாமல் இருக்க மெழுகு பூச்சி தடவுவதும், உடலுக்கு தீங்கை விளைவிக்கும் இரசாயன மருந்துகளையும், புகையையும் சேர்ப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் நங்கள் என்ன செய்வது, கிடைப்பதைத் தானே உண்ண முடியும், எல்லாரும் இதைத்தானே உண்ணுகின்றனர் என்று சலிப்போடு பழைய பஞ்சாங்கம் பாடாமல் இவற்றிற்கு புத்தி சாலித்தனமாக தீர்வை தேர்ந்தெடுக்கும் புதுமை பெண்ணாக மாறுவோம். குடும்பத்தின் மீது அக்கறையும் பலரின் பாராட்டைப் பெற சுறுசுறுப் நிறந்த சிநேகிதிகளுக்கு எளிய முறையில் உடலுக்கு தீமை விளைவிக்காத கோடைகால பழங்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மாம்பழம்

கோடை என்றதுமே முக்கனிகளில் ஒன்றான  மாம்பழம் நம் நினைவிற்கு வரும். பல வகைகள் கொண்ட மாம்பழத்தை பிடிக்காது என்று சொல்பவர்களே இல்லை. மாம்பழ சீசனில் தினம் ஒரு மாம்பழமேனும் உண்ணவில்லை என்றால் பலருக்கு நாளே போகாது. சுவையும் சத்தும் நிறைந்தது, குறிப்பாக வேறெந்த பழத்திலும் இல்லாத அளவு வைட்டமின் எ உயிர்சத்தினை அதிகம் கொண்டது.

சுண்ணாம்பு இரும்பு சத்தினையும் கொண்ட மாம்பழம் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது. இரசாயன கலப்பு இல்லாத மாம்பழத்தை சீசனில் தொடர்ந்து இரவு உணவிற்கு பின் உண்ண நரம்பு தளர்ச்சி சீராகும். மாம்பழத்தை வாங்குவதற்கு முன் அந்த மாம்பழம் எந்தவிதத்திலும் பளபளக்கும் மெழுகு பூச்சு இல்லமலும், கார்பைடு கல் வைத்து பழுக்கவைத்திருக்காமலும் இருக்க வேண்டும். சற்று சுரண்டி பார்க்க மெழுகு இருந்தால் அவற்றை தவிர்க்கவும்.

அதைப்போல் பழம் முழுவதுமாக ஒரே நிறத்தில் மஞ்சளாக இருந்தால் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்திருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதனை தவிர்க்கவும். ஆங்கங்கே பச்சையும் மஞ்சளுமாக இருக்க பளபளக்காது  சற்று நிறம் குறைவாக இருக்க சிறந்தது. கார்பைடு கல் புற்று நோயை வரவழைக்கும். மெழுகுகள் அஜீரணத்தை ஏற்படுத்தும். 

வாழை

கோடை மட்டுமல்ல எல்லா காலங்களிலும் கிடைக்கும் முக்கனிகளில் ஒன்றான வாழையை சந்தையில் வாங்குவதற்கு முன் அவை நாட்டு ரகங்களாக இருப்பது அவசியம். பூவன், ரஸ்தாளி, பேயன், மலை பழம், மொந்தன், கதலி, நேந்திரம். செவ்வாழை போன்ற ரகங்கள் உடலுக்கு நன்மை அளிப்பதுடன் வெப்பத்தினால் ஏற்படும் சோர்வைத் தடுத்து உடல் பலத்தை அளிக்கிறது.

இயற்கையாக பழுத்த பழங்கள் முற்றிலும் ஒரே  நிறத்தில் இருக்காது. சற்று மஞ்சளாகவும், பச்சையாகவும், கரும் புள்ளிகளுடனும் இருக்கும். இவ்வாறான பழங்களை தேர்ந்தெடுக்க அவை சுவையாகவும் இருக்கும். இராசயங்கள் கொண்டு விளைந்த, பழுத்த பழங்கள் மனமும் சுவையின்றி சக்கையாக இருக்கும். 

பலாப் பழம்

முக்கனிகளில் ஒன்றான கோடையின் இளவரசி நம் பலாப் பழம். நன்கு விரிந்த முள்களைக் கொண்ட பழத்தை தேர்ந்தெடுத்து உண்ணலாம். 

தர்பூசணி

கோடை காலத்தில் பலரும் விரும்பும் நீர்சத்துள்ள ஒரு பழம் தர்பூசணி. உடலுக்கு குளிர்ச்சியையும், வெயிலுக்கு புத்துணர்வையும் உற்சாகத்தையும் அளிக்கும் மிகச் சிறந்த பழம். செக்கச் செவேல் என்று நிறம் இருக்காது சற்று மங்களாகவும் கொட்டைகள்  உடையதாகவும் உள்ள பழத்தை கவனமாக வாங்க வேண்டும். கொட்டையில்லாத, நிறமேற்றப்பட்ட பழம் உடலுக்கு கேடு விளைவிக்கும். 

கருப்பு திராட்சை

கோடைக்கு தேவையான அண்டி அக்சிடேன்டை கொடுக்கக் கூடிய சிறந்த பழம் கொட்டையுள்ள கருப்பு திராட்சை. இந்த பழத்தை வாங்குவதற்கு முன் கொட்டையுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும் பின் அதன் மேல் தோலில் வெள்ளையாக மாவு போல சிலப் பொருட்கள் படிந்திருக்காமல் பார்த்து வாங்க வேண்டும். அந்த மாவு படிமங்கள்  உடலுக்கும் மரபனுவிற்கும் தீங்கு விளைவிக்கும் இராசயங்கள். இவற்றை தவிர்க்கவும்.   

எலுமிச்சை

நாட்டு எலுமிச்சைக்கு ஈடு இணையற்ற கோடை பழம் எதுவுமே இல்லை. தினமும் ஒரு பழத்தை பிழிந்து நீருடன் சிறிது உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு பருக உடல் இளமையுடன் புத்துணர்வாக இருக்கும். 

சற்று நிறம் மாறி பழுத்த அண்ணாச்சி, நாட்டு கீரணி, முலாம்பழம், இளநீர், கமலா ஆரஞ்சு, மாதுளை, வெள்ளரி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் தாகத்தை மட்டுமல்ல தாது குறைபாட்டையும், வைட்டமின் சத்துக்களையும், நல்ல சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் அளிக்கும். 

கோடை என்றதும் பலா, மாவைப்போல இன்னும் சிறந்த சில நீர்ச்சத்துள்ள உணவுகள் உள்ளது. அனைவரும் விரும்பும் கரும்புச்சாறு, பதநீர், நுங்கும் போன்ற இயற்கையின் அமுதங்கள் தான் அவை.

கரும்புச் சாறு

கரும்புச் சாறு குடிக்க நினைப்பவர்கள் கரும்பு எந்த நோய்தாக்குதலும் இல்லாமல் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும். கரும்பு சாறுடன் ஐஸ் கட்டிகளும், தண்ணீரும் சேர்க்காமல் மட்டுமே குடிக்கவேண்டும்.
தமிழகத்தின் கற்பக விருக்சம் என்பது பனை மரம். இன்று வரை எந்த பூச்சிமருந்தும் (பூச்சி கொல்லிகள்), இரசாயனமும், நஞ்சும் கலக்காத ஒரே மரமும் இதுதான்.

பதநீர்

இதிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் உடல் வளத்தை மேம்படுத்தும். நோயிலிருந்து அனைவரையும் காக்கும். சற்று சுண்ணாம்புடன் எந்த இரசாயனமும் கலக்காத பதநீரைப் பருக பல்லாண்டு ஆரோக்கியமாக வாழலாம். அதன் பழங்களான நுங்கு கோடைக்கு அழகையும் ஆரோக்கியத்தையும்  சேர்க்கும்.

நுங்கு

இயற்கையின் நேரடி பழமான நுங்கினை இயற்கையாக உண்ண வேறு எதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லை. இளமை, பொலிவு, உற்சாகம், சுறுசுறுப்பு என அனைத்தையும்  கொடுக்கும் தலை சிறந்த பழம் நுங்கு. 

இவ்வாறான பழங்களை அதிகமாக இந்த கோடையில் உண்ண உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும், வெப்பத்தால் குறையும் தாது சத்தும் சீராகும். புத்துணர்வும் மேம்படும். எந்த பதப்படுத்திகளும், மேல் பூச்சும், மெழுகும், நச்சு புகையும் இன்றி கிடைக்கும் இயற்கை பழங்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் நம்மை பொலிவோடும் புத்துணர்வோடும் சூரியனோடு போட்டிப்போடுமளவு பிரகாசிப்போம். கோடையை இந்த பழங்கள் மூலம் குளிரூட்டுவோம். ஆரோக்கியத்தை காப்போம்.

(7 votes)