மலச்சிக்கல்

அழகான காட்சி, அன்பான அரவணைப்பு, சாந்தமான சொரூபம் என்று அன்றாடம் நம்முடன் கண்டும் காணாமலும் பிண்ணிப் பிணைந்திருக்கிறது இயற்கை. நாமோ இயற்கையை பொருட்படுத்தாமல், துச்சமாக எல்லாம் நம் கைக்குள் என்பது போன்ற நினைப்புகளுடன் இருந்தோம். அந்த  நினைப்பை கன நேரத்தில் தவுடுபுடியாக்கியது சமீபத்திய மழை, வெள்ளம், தொற்றுநோய்…

இயற்கைக்கும் நமக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கலை மறந்தோம், இயற்கையுடனான ஒப்புதலை மறந்தோம்; இயற்கையோ அவ்வப்போது தன்னை நினைவு படுத்தும் விதமாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி மொத்தமாக பிடுங்கிக் கொள்கிறது தன்பங்கை.

இயற்கையுடனான நம் ஒப்பந்தம் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டே இருக்கிறது. நாம் ஒவ்வொரு நாளும் இயற்கையுடன் பலவகைகளில் கடன் பட்டுக்கொண்டே இருக்கிறோம். கடன் என்பது திருப்பிக்கொடுக்க வேண்டியது.

இயற்கைக்கும் நமக்குமான அன்றாட கடன்களில் மிக முக்கியமானது காலைக்கடன். காலையில் முதல் வேலையாக இந்த கடனை திருப்பிக்கொடுக்க வாழ்கை சுமுகமாகும். இல்லையானால் தொந்தரவு தான், அதுவும் சமீபத்தில் நடந்தது போல் அனைத்து நம் கை மீறிய நிலையில்.

என்ன தான் சொல்ல வருகிறேன் என்று புரிந்தும் புரியாமலும் இருகிறதா? நம் முன்னோர் இயற்கை, உடல், உலகம் என்று அனைத்திலும் வல்லவர்களாக இருந்தவர்கள். ஒவ்வொன்றையும் தனிச்சிறப்புடன் சொல் வளத்துடன் குறிப்பிட்டு இருந்தனர். அதில் ஒன்று தான் காலையில் எழுந்தவுடன் முதலில் செய்யவேண்டிய மலம் கழித்தல் (காலைக்கடன்).

காலைக்கடன்

பொதுவாக பணம் கடன் பட்டவர் பணத்தை திருப்பிகொடுக்க வில்லை என்றால் நிம்மதி இழந்து ஒரு வித மன கவலையுடன் இருப்பதும்; பணம் கொடுத்தவரோ மேலும் மேலும் பல தொந்தரவுகளையும் கொடுப்பதை கண்டிருக்கிறோம். அதைப்போலத்தான் காலைக்கடனும். 

பூமித்தாயின் மண்ணிலிருந்து கிடைக்கும் உணவை உண்டு சக்தியையும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் பெறும் நாம் மீண்டும் மீதமுள்ள சக்கையை (கழிவை) இந்த மண்ணிற்கே உரமாக கொடுக்க வேண்டும். அதுவும் முதல் வேலையாக காலை விடியலில் எழுந்தவுடன்.

கடனைப் பெற்றுவிட்டோம் ஒவ்வொரு நாளும் உணவின் மூலம். அதுவும் காலை விடியலில் (பலருக்கு விடியல் எவ்வாறு இருக்கும் என்றே யோசித்தால் தான் நினைவிற்கு வரும்) மாறாக நான் எழும் பொழுதுதான் என்று சட்டம் பேசினாலும் தொந்தரவு நமக்குத் தான்.  கடன் பெற்ற நாம் அதனை தகுந்த முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அது நம் கடமை. இல்லையானால் மலச்சிக்கல் என்ற நோய்களின் தாய் நம் அழையா விருந்தாளியாவாள்.

மலச்சிக்கல்

ஒவ்வொரு நாளும் காலையில் கடனை திரும்பக் கொடுக்கவிட்டால் சிக்கல் தான் என்பதை அழகாக தன் பெயரிலேயே மலச்சிக்கல் என்று கொண்டிருகிறது. மலத்தை வெயியேற்ற மட்டுமல்ல உடலின் பல பாகங்களும் சிக்கலுக்குள்ளாகப் போகிறது என்றும் உணர்த்துகிறது. 

நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில், நல்ல உணவும் நீரும் அவசியம். வயிற்றுக்குள் செல்லும் உணவு, நன்றாகச் செரிக்கப்பட்டு, சத்துக்கள் கிரகிக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இயற்கை கொடுத்த உணவின் கழிவுகள் வெளியேறவில்லை எனில், உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். நாம் உண்ணும் உணவில் பெரும்பகுதி பெருங்குடல் பகுதியில்தான் செரிமானம் ஆகிறது.

மலச்சிக்கல் என்றால் என்ன

இரண்டு மீட்டர் நீளம் கொண்ட பெருங்குடலில், கடைசியில் 15 செ.மீ அளவில் இருப்பது மலக்குடல். இங்குதான், பெருங்குடலில் செரிக்கப்பட்டு வெளியேற்றப் படும் தேவையற்ற பொருட்கள் மலமாக இருக்கும். இந்த மலம் ஆசனவாய் வழியாக வெளியேறும்.

உடலில் ஏதேனும் பிரச்சனை காரணமாக மலம் மிகவும் இறுகிப்போனாலோ, மலம் கழிக்க மிகவும் சிரமப்பட்டாலோ, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மலம் வருகிறது என்றாலோ, அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.

பலர் இந்த ஆரம்ப கட்ட தொந்தரவை பெரிதாக எடுத்துகொள்ளாமல் இருக்க காலப்போக்கில் பல நோய்களை வரவழைக்கிறது. அதாவது கழிவுகள் உடலில் தேங்க அவை புளித்துப்போய் மேலும் கெட்டு நாற்றத்தையும் உடலின் உஷ்ணத்தையும் மேலும் அதிகரிக்கிறது. உஷ்ணமும் நாற்றமும் மேலும் மேலும் அதிகரிக்க நோய்கள் பெருகுகிறது. 

மலச்சிக்கல் காரணங்கள்

குறைந்த நார்ச்சத்து உணவு, அதிக நொறுக்குத்தீனி, மேற்கத்திய உணவு வகைகள், மாவு சத்து அதிகம் கொண்ட உணவுகள், ரசாயனம் கலந்த காய், கனி, தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றாலும், குறைவான உயிர்சத்துள்ள தண்ணீர் குடிப்பவர்கள், சீரான ஜீரணமின்மை,

உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள், மனச் சோர்வுடன் இருப்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். குறிப்பாக அரிசி முதல் இன்றைய பல உணவுகள் நார் சத்துக்களை அகற்றிய Polish செய்யப்பட்ட உணவுகளாகவே இருக்கிறது. நல்ல உயிர் சத்துள்ள நாம் வாழும் சூழலில் விளையும் உணவுகள் இவற்றிற்கு சிறந்த மாமருந்தாகும். 

உணவு மட்டுமல்லாது மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டாலும், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். இன்றைய அவசர உலகில் ஏன், என்ன, எதற்கு ஒவ்வொன்றையும் வேகமாக செய்கிறோம் என்றே தெரியாமல் எதையோ செய்து கொண்டு இருக்கிறோம். எதையோ செய்வது மட்டுமல்லாது எதற்கும் நேரம் இல்லாமலும் இருக்கிறோம். இதனால் நம் உணர்வுகளும் புரியாத நிலையில் உள்ளது, உணர்வுகளுக்கு எவ்வாறு கவனம் தருவது என்றும் தெரியாமல் இருக்கிறது.     

மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதை பலர் தவிர்க்கின்றனர், பெரிதாக அலட்டிக்கொள்ளாமலும் இருகின்றனர்.

இதனால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது… தெரிவித்தாலும் அதனால் செயல்படவும் உடலால் முடியாத நிலை உருவாகும். இதன் காரணமாகவும்  மலச்சிக்கல் ஏற்படும்.

நம் உணவு பழக்கங்கள் மட்டுமல்லாது வாழ்வியல் முறைகளும் இந்த மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. பழக்க வழக்கங்களையும் உணவையும் சீராக்காமல் எந்த ஒரு மருத்துவமும் நிரந்தர மலச்சிக்கலை தீர்க்காது. தொடர்ந்து இந்த தொந்தரவு தொடர உடலில் பல நோய்கள் உருவாகும்.

குழந்தைகள் முதல் அனைத்து வயதினரையும் தாக்கும் தொந்தரவு/நோய் இந்த மலச்சிக்கல்.

மலம் என்பது உடலின் கழிவு

மலம் என்பது உடலின் கழிவு. உடலின் கழிவைப் பற்றி பேசவும் நினைக்கவுமே பலர் விருப்பப்படுவதில்லை. அதாவது உடலின் குப்பையை வெளியேற்றாமல் இருந்தால் உஷ்ணமும், நோய் கிருமிகளும் அதிகம் தோன்றும்.

அதோடு நீர்சத்தும் நார்சத்தும் இல்லாது உஷ்ணம் பெருங்குடலில் அதிகரிக்க பெருங்குடல் சுவர்களில் பசைபோல் கழிவுகள் இறுகி ஒட்டிக்கொள்கிறது. உஷ்ணமும் இறுக்கமும் தொடர நோய் உருவாவதுடன் காலப்போக்கில் இரத்தமும் சதையும் சேர்ந்து வெளிவரும் நிலையும் உருவாகிறது. மூலம், பௌத்திரம், உடல் பருமன், இருதய நோய்கள் என பல பல நோய்கள் மலசிக்கலினாலே தோன்றுகிறது.      

இந்த மலச்சிக்கலை (காலைக்கடனை)  தீர்க்க பல நோய்கள் தானாக நம்மை விட்டு வெளியேறும். இதனை தீர்க்க முதலில் விடியற்காலை 4 மணிக்கு இல்லையானாலும் குறைந்தது 6 மணிக்காவது எழவேண்டும். அதற்கு காராணம் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் அதனை ஒரு குறிப்பிட நேரத்தில் புதுப்பித்து தங்களின் கழிவுகளை வெளியேற்றும்.

அதாவது உடல் எவ்வாறு உணவு மூலம் சக்தியைப்பெற்றாலும் ஓய்வின் மூலம் புதுப்பித்துக் கொள்கிறது. அவற்றில் நம் பெருங்குடலின் இந்த செயல்பாடுகள் விடியற்காலை தான் நடக்கிறது. அந்த நேரத்தில் விழித்து உடலை தூய்மை படுத்த வேண்டும். இல்லையானால் கழிவுகள் சரிவர வெளியேறாமல் தங்கிவிடும். சுத்தமான உயிர்சத்துள்ள தண்ணீரையும் தேவைக்கேற்ப அலட்சியம் இல்லாது பருக வேண்டும்.

மலச்சிக்கலை தீர்க்கும் உணவுகள்

அதோடு ஒவ்வொரு வேளை உணவும் அனைத்து சத்துக்களையும் குறிப்பாக நார்சத்துக்களை சீராக கொண்ட உணவாக இருக்க வேண்டும். அவ்வாறான அற்புதமான உணவு தன் நம் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள்.

பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசிகள் மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், கருங்குறுவை, பூங்கார், குருவிக்கார் போன்றவைகளும், உடலை குளிர்விக்கும் நார்ச்சத்துக்கள் நிறைந்த கம்பு, பச்சை கீரைகள், அங்கங்கே நம்மை சுற்றி கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், கொட்டைபருப்புகள், செக்கு எண்ணெய்கள், நாட்டு சர்க்கரை/ கருப்பட்டி போன்ற நம் பாரம்பரிய உணவுகள் அதாவது நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா உண்ட உணவுகளே இந்த மலச்சிகளில் இருந்து எளிமையாக வெளிவர சிறந்த உணவுகள்.

படப்படுத்தப்பட்டை உணவுகளை தவிர்ப்பதும், வெளி உணவுகளை தவிர்ப்பதும் அவசியமானது. பாரம்பரிய பொருட்களை கொண்டு, பாரம்பரிய முறையில் தயாரித்த உணவுகளை உண்டு வர மலச்சிக்கலும் காணாமல் போகும், இயற்கையிடம் அன்றாடம் படும் கடனையும் எளிதாக இயற்கையான  முறையில் தீர்க்கலாம்.  

(1 vote)