தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு. வாழை இலையை பாரம்பரியமாக உணவுண்ண நாம் பயன்படுத்தி வருகிறோம். நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் தன்மை உண்டு. வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும் (Germ killer). உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். நன்கு பசியைத் தூண்டியப்பின் வாழையிலையில் உண்ண உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இது மட்டு மல்ல நம் தமிழர்கள் நாம் உண்ணும் உணவை எவ்வாறு இலையில் பரிமாறி உண்ண வேண்டும் என்பதற்கும் ஒரு முறையையும் கையாண்டுள்ளனர். அறுசுவைகள் கொண்ட உணவாக இருந்தாலும் அறுசுவையில் உடலுக்கு வளம் கொடுக்கும் விதத்தில் வரிசைப்படுத்தியும், அளவு படுத்தியும் வைத்துள்ளனர்.
உணவை பரிமாறும் முறை
வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும். மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும். இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாற வேண்டும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும். ஆகா வாழை இலையில் உணவு அனைத்தும் பரிமாறினாலும் முறையாக உண்ண ஒரு மகத்தான மருத்துவ முறையையும் கூறியுள்ளனர்.
இதுமட்டுமா பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே நம் முன்னோர் வகுத்த அறிவியல் இது. வாழையிலையில் கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு – உணவுடன் எளிதில் கலக்காது, மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில், நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய், குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம், அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.
வாழை இலை உணவு எவ்வாறு உண்பது?
அதாவது முதலில் பருப்பு மற்றும் நெய் (செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள்), பிறகு குழம்பு (ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும்), பிறகு ரசம் (இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும்), பிறகு மோர் (வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும்).
இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொண்டு இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும். சுவை மட்டுமல்ல சமச்சீர் உணவு என்று இன்றைய அறிவியல் கூறும் சிறந்த ஊட்டச்சத்தும் இதில் அடங்கி உள்ளது.
மேலும் தமிழர் உணவையும் அதன் கார அமில தன்மையையும் அறிய இங்கு தொடரவும்.