arugam-pul-cynodon-dactylon

அருகம் புல்

Cynodon dactylon; Arugampul; அருகம்புல்

விநாயகர் வழிபாட்டு பூஜைக்கு அருகம்புல்லை வைத்து வழிபடுவதுண்டு. அதுவே அருகம்புல்லின் மருத்துவ பெருமைகளை தெரிந்தவர்கள் மிகக்குறைவானவர்களே என்று சொல்லலாம்.

arugam-pul-cynodon-dactylon

ஊட்டசத்துக்கிற்காக கடைகளில் செயற்கையாக ஊட்டச்சத்துள்ள பானங்களை வாங்கி பருகும் நமக்கு அருகம்புல்லே சிறந்த ஊட்டச்சத்துள்ள பானம் என தெரிவதில்லை. அதிலும் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் உடல் எளிமையாக உட்கிரகிக்கும் வகையில் இருப்பதே இடன் தனி சிறப்பு.

எங்கும் காணலாம்

குறுகலான நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை இந்த அருகம்புல்.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும்.

நன்மைகள்

உடல் வெப்பத்தை அகற்றும், தாகம் தணிக்கக்கூடியது, சிறுநீரை பெருக்கக்கூடியது, குடல் புண்களை ஆற்றும் அனைத்து புண்களையும் ஆற்றவல்லது, இரத்தை தூய்மையாக்கும், கண் பார்வை தெளிவுபெறும், தோல் நோய்களை குணப்படுத்த கூடியது, உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை போக்கி உடலை தேற்றக்கூடிய சிறந்த மூலிகை இந்த அருகம்புல்.

arugam-pul-cynodon-dactylon

அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும், குளிர்ச்சித் தன்மையும் உடையது.

நடைபயிற்சி பலன்கள்

அருகம்புல் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன் கண்பார்வை தெளிவுபெறும். கணினியில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக அருகம்புல் நடைபயிற்சி செயலாற்றும். நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடியது.

மருத்துவகுணங்களும் பயன்களும்

  • அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
  • அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
  • கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.
  • வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும்.
  • அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்து புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்த்து காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.
  • கைகால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும்.
  • நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் அலசி மைய அரைத்து பசும்பாலுடன் சேர்த்து சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவு படுக்கும்முன் பருகிவந்தால் பலவீனமான உடல் தேறி பலம்பெறும். வளரும் குழந்தைகளுக்கு இதனை அளிப்பதால் ஊட்டச் சத்துக்கள் சீராக மிக எளிமையாக பெறலாம்.
  • அருகம்புல்லை நன்கு நீரிலிட்டு காய்ச்சி மிதமான சூட்டில் பருகிவந்தால் இருதய நோய்க்கு நல்லது.

அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாள் ஒன்றிற்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

அறுகுத் தைலம்

ஒரு கிலோ அருகம்புல் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத்த எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.

கண்நோய்க்கு

அருகம்புல் சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

மருந்து வீறு தணிய

அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்).

மூலம்

அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும். வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அரிப்பு

அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.

அருகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

சருமத்திற்கு

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.

உஷ்ணத்தை குறைக்க

அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம். அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய்.

ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

வலைதளத்தில் அருகம்புல் பொடி வாங்க விரும்புவோர் இங்கு இணையலாம்.