arrow-root flour tamil, Maranta Arundinacea, Curcuma Angustifolia, East Indian ArrowRoot

அரரூட் கிழங்கு – நம் மூலிகை அறிவோம்

Maranta Arundinacea; Curcuma Angustifolia; East Indian ArrowRoot; அரரூட் கிழங்கு

பலருக்கும் பரிச்சயமான ஒரு மூலிகை தான் அரரூட் கிழங்கு. பச்சிளம் குழந்தைகளுக்கும் ஏற்படும் தொடர் வயிற்றுப் போக்கு தொந்தரவிற்கு பொதுவாக கொடுக்கப்படும் கிழங்கு மாவு அரரூட் கிழங்கு மாவு. சாதாரணமாக அனைத்து கடைகளிலும் கிடைக்கக் கூடியது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பயன்படும் ஒரு கிழங்கு இது.

arrow-root flour tamil, Maranta Arundinacea, Curcuma Angustifolia, East Indian ArrowRoot

கூகைக் கிழங்கு, கூவைக் கிழங்கு, கூவாமாக் கிழங்கு என பல பெயர்கள் இதற்கு இருந்தாலும் அரரூட் மாவு என்றே பலரும் இதனை அழைப்பதுண்டு. அரரூட் கிழங்கு ஒரு சிறு செடி வகைச் சேர்ந்த இரண்டு வரிசைகளில் தனி இலைகள் கொண்ட தாவரமாகும். குட்டையாக தண்டு போல் இருக்கும் இலைக்காம்பின் அடிப் பகுதிகளால் மூடப்பட்டும் மட்ட நிலத்தண்டிலிருந்து பல வேர்கள் கிழங்குகளாக தோன்றும் அமைப்பைக் கொண்டது இந்த கூகைக் கிழங்கு.

இனிப்பு சுவைக் கொண்ட கிழங்கே பயன்படும் பகுதியாகும். இவற்றையேக் கொண்டு அரரூட் மாவு தயாரிக்கப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மையைக் கொண்ட அரரூட் மாவு உடலுக்கு ஊட்டமளித்து இருமல், சுரம், நீர் வேட்கை ஆகியவற்றிக்கும் சிறந்த பலனை அளிக்கும். அதிகமாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும்.

சீதபேதி, சிறுநீர் நோய்க்கு

ஒரு ஸ்பூன் அரரூட் கிழங்கு மாவுடன் இரண்டு கப் நீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைத்து அடிபிடிக்காமல் சிறிதுநேரம் கிளறிக்கொண்டேயிருந்து நன்கு வெந்து சரியான பதத்தில் இறக்கி சீதபேதியுடையவர்களுக்கும், சிறுநீர் சம்பந்தமான நோயுற்றவர்களுக்கும் கொடுக்க உடனே நல்ல பலன் கிடைக்கும்.

உடனடி பலம் கிடைக்க

எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும், மெல்லியதாகவும் இந்த அரரூட் கிழங்கு மாவு இருப்பதால் இம்மாவை கஞ்சியாக அதிக நீர் சேர்த்து தயாரித்து சிறுவர்களுக்கும், நோயாளிகளுக்கும் கொடுத்து வர விரைவில் ஆரோக்கியம் கிடைக்கும்.

arrow-root flour tamil, Maranta Arundinacea, Curcuma Angustifolia, East Indian ArrowRoot

அரரூட் மாவு தயாரிக்க

பொதுவாக மாவாகவே அரரூட் கிழங்கு மாவு கிடைத்தாலும் கிழங்கு கிடைக்கும் காலத்தில் கிழங்கிலிருந்தும் நாமே வீட்டில் மாவு தயாரித்து வைத்துக் கொண்டு பல பயன்பெறலாம். மாவு தயாரிக்க நன்கு முதிர்ந்த கிழங்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை மண்ணில்லாமல் நன்கு சுத்தம் செய்து நீரில் கழுவி தோலை நீக்கி அரைத்து மாவாக்க வேண்டும். பின் ஒரு வாயகன்ற பத்திரத்தில் நிறைய நீர் விட்டு, அதன் வாயை மெல்லிய துணியால் கட்டி, அத்துணியை தண்ணீர் மட்டத்துக்குக் கீழே விட்டு, துணியின் மேல் மாவைக் கொட்டி கையால் நன்கு கரைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மாவு பாத்திரத்தின் அடியில் செல்லும். மாவு முடிந்தவுடன் துணியை நீக்கிவிட்டு மாவை நன்றாகக் கலக்கி தெளிவை இறுத்திட வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்து வடிகட்டி அடியில் காணும் மாவை எடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுக்க, அரரூட் மாவு தயாராகும். இதுவே அரரூட் மாவு தயாரிக்கும் முறையாகும். எளிதாக செய்து வைத்துக் கொள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு கொடுக்கலாம். மேலும் சில அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

(1 vote)