அமிர்த கரைசல் – வீட்டுத் தோட்டத்திற்கு

அமிர்த கரைசல், ஒரு சிறந்த பயிர் ஊக்கி மட்டுமல்ல எளிமையான மண்வள ஊக்கியுமாகும். மண்ணின் நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் போன்ற மண்வளத்திற்கு காரணமாக இருக்கும் பலஉயிர்களுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. இந்த அமிர்தக்கரைசலை மாடிகளில் தோட்டம் வைத்திருப்பவரும் எளிமையாக தயாரித்து செடிகளுக்கு பயன்படுத்த சிறந்த மண்வளமும், செழிப்பான காய்கள், கீரைகளும் பெறலாம். 

அறுவடைக்குப்பின் மீண்டும் செடிகளை தொட்டிகளில் இடுவதற்கு முன்னும் பின் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் இந்த அமிர்தக் கரைசலை செடிகளுக்கும் மண்ணிற்கும் தெளிக்கலாம். இதனை எளிமையாக வீட்டிலேயே ஒரு பிளாஸ்டிக் அல்லது சிமெண்டலான ட்ரம், தொட்டி, பாட்டில் அல்லது குடம் போன்றவற்றில் தயாரிக்கலாம்.

இதில் ஏதேனும் ஒன்றை முதலில் தயார்செய்துகொண்டு அதில் நூறு கிராம் நாட்டுமாட்டின் பசுஞ்சாணம், நூறு மில்லிலிட்டர் (ml) கோமூத்திரம் (நாட்டுமாட்டின்), வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை அரை ஸ்பூன் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு குலுக்கி விட்டு நிழலில் மூடி ஒருநாள் வைக்கவேண்டும். 24 மணிநேரம் கழித்து தயாராக இருக்கும் இந்த அமிர்தக் கரைசலை ஒருபங்கு எடுத்து அதனுடன் பத்துப்பங்கு தண்ணீர் சேர்த்து மண்ணிலும், செடிகளிலும் தெளிக்கவேண்டும். தொடர்ந்து மண்ணிலும் செடிகளிலும் தெளிக்க சிறந்த வளர்ச்சியும், நோய்கள், பூச்சிகள் அண்டாமலும் செடிகள் வளமாக இருக்கும். 

இந்த அமிர்தக்கரைசலை தொடர்ந்து மண்ணில் பயன்படுத்த அனைத்து விதமான மண் மற்றும் செடிகளுக்கு தேவையான சத்துக்களும் எளிமையாக கிடைக்கும். எந்த செலவும் இல்லாமல் இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதனை தயார் செய்த அடுத்தநாள் முதல் மூன்றுநாட்களில் பயன்படுத்த வேண்டும். அதன் பின் இதன் வீரியம் குறைந்து விடும். வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் தேவையான அளவு ஒன்று அல்லது இரண்டு லிட்டர் மட்டும் ஒருமுறை தயார்செய்து கொண்டாலே போதும். அதனை  ஐம்பது செடிகளுக்கு மேல் தெளிக்கலாம். 

இதற்கு நாட்டு மாட்டின் சாணமும், கோமூத்திரமும் அவசியம். கிராமங்களில் இருப்பவர்கள் தான் இதனை எளிமையாக பெறலாம் என்பதெல்லாம் இல்லை. நகரங்களிலும் ஏன் சென்னை போன்ற பெருநகரங்களிலும் அங்கங்கே கோசாலைகளும், பசுமடங்களும் உள்ளது. இவற்றில் இருந்து ஒரு கையளவு சாணத்தையும், சிறிது கோமூத்திரத்தையும் பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. பல இடங்களில் இவை வீணாகத்தான் போகிறது. வைரத்தை விட உண்மையில் பெறுமதிப்பைப்பெறும் இவற்றை கொண்டு நமது தோட்டங்களை வளமாக்குவோம். ஆரோக்கியமான உணவிருந்தால் மட்டுமே வைரங்களை அணிந்து பொலிவுபெறலாம்.