அகத்திக் கீரை – கீரைகள் தெரிந்துக்கொள்வோம்

அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு கீரை. அது நமக்கு பல வகைகளில் நன்மையை செய்கின்றது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரை சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார். அகத்திக் கீரையில் புரதம், இரும்பு, சுண்ணாம்பு, உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

  • கடுமையான வயிற்று வலியால் கஷ்டப்படுபவர்கள் அகத்திக் கீரையை சாறு பிழிந்து அதில் தேன் சேர்த்து உண்டால் வயிற்று வலி உடனே அகன்று விடும்.
  • அடிபட்டு இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தால் இந்த அகத்தி இலைகளை அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டினால் இரத்தம் நின்று சீழ் பிடிக்காமல் விரைவில் குணமாகிவிடும்.
  • அகத்திக்கீரையை சாம்பாரில் சேர்த்து உணவுடன் உண்டால் பித்தம் குறையும், கபம் குறையும், வாதம் மட்டுப்படும்.
  • இந்தக் கீரையை வெங்காயம் சேர்த்து பொரித்துச் சாப்பிட்டால் குடலுக்கு வலிமை தரும். நரம்புகள் புத்துணர்வு பெறும்.
  • அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையைச் சேர்த்து சூப் வைத்து குடித்தால் கல்லீரல், இருதயம், சூளை ஆகியவை வலிமை பெரும்.
  • அகத்திக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும், சிறுநீர் தடையின்றி போகும், கண்கள் குளிர்ச்சி பெறும்.

அகத்திக்கீரையை தூசி படியாமல் காயவைத்து, சறுகு போல நன்கு காய்ந்ததும் எடுத்து நன்றாக இடித்து தூளாக்கி சுத்தமான துணியில் சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் நீராகாரத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு கலக்கி சாப்பிட்டு வந்தால் குன்ம நோய்கள் அகன்று விடும்.

புட்டாலம்மை என்னும் நோய்க்கு கீழ்கண்டவாறு பயன்படுத்தினால் இந்நோய் அகன்றுவிடும், அகத்திக் கீரையின் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். மெல்லிய வெள்ளை துணியை எடுத்து இந்த சாறில் நனைத்து வீங்கியுள்ள வலியுள்ள இடத்தில் துணியை பற்றுப்போடவேண்டும். ஈரம் உலர்ந்ததும் துணியை எடுத்து விட்டு மீண்டும் அகத்திக்கீரையின் சாறில் நனைத்து பற்றுப் போடவேண்டும். நான்கு அல்லது ஐந்து முறை இதுபோன்று செய்த பின்னர் வெந்நீரில் அந்த இடத்தை துடைத்து விட வேண்டும். இது போன்று இரண்டு நாட்கள் செய்தால் புட்டாலம்மை குணமாகும்.

(1 vote)