Pedalium murex; Yanai Nerinjil
சிறுநீரக கற்களை கரைக்கும் அற்புத மருத்துவகுணம் கொண்ட மூலிகை யானை நெருஞ்சில். மண்ணில் நடக்கும் பழக்க உள்ள அனைவருக்குமே பரிச்சயமான மூலிகை இது. நேரடியாக சொல்ல வேண்டுமானால் இதுதான் யானை நெருஞ்சில் என தெரியாது என்றாலும் இந்த மூலிகையை பெரும்பாலும் நாம் அனைவருமே பார்த்திருப்போம். அப்படியா.. எனக்கு தெரியுமா இந்த மூலிகை? என்கிறீர்களா.. மண்ணில் நடக்கும் குத்துமதிப்பாக உருண்டை வடிவத்தில் முள் ஒன்று குத்துமே அந்த முட்களுக்கு சொந்தமான செடிதான் யானை நெரிஞ்சில். பேச்சு வழக்கில் நெரிஞ்சி முள் என்பார்கள். நெரிஞ்சில் வகையில் யானை நெரிஞ்சில், சிறு நெரிஞ்சில் மற்றும் செப்பு நெரிஞ்சில் என மூன்று வகை உள்ளது.
தமிழகத்தில் சாதாரணமாக மணல்பாங்கான இடங்கள், ஆற்றங்கரை ஓரம், கடற்கரை ஓரம் என எங்கும் தானாக வளர்ந்து நிறைந்திருக்கும் ஓரு சிறு செடிவகை மூலிகை தாவரம் இந்த யானை நெருஞ்சில். ஒருவித வெகுட்டல் மணம் கொண்ட மூலிகை இது. ஆனால் கற்களை கரைக்கும் சிறந்த மூலிகை. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த நெரிஞ்சி செடியின் இலை, விதை, தண்டு ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
சிறுநீரகக் கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்ட இந்த யானை நெரிஞ்சில் கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. மேலும் சிறுநீரைப் பெருக்கி, வெப்பத்தை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தொந்தரவுகளுக்கு நல்ல ஒரு மருந்தாகவும் உள்ளது. மலட்டுத்தன்மை நீக்கும், விந்தணு மற்றும் காமத்தை பெருக்கும் தன்மையும் கொண்டது. காயங்களை ஆற்றும்.
சிறுநீரக கற்களை கரைக்க மற்றும் மற்ற தொந்தரவுகளுக்கு
- யானை நெருஞ்சி முழு செடியையும் எடுத்து அதனை நான்கு மண் போக லேசாக கழுவி ஒரு லிட்டர் நீரில் சிறிது நேரம் ஊறவைக்க அல்லது நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்ய அந்த நீர் ஜெல்லி போல் வழுவழுப்பாக மாறிவிடும். இதனை காலையில் சில நாட்கள் அன்றாடம் குடிக்க வெள்ளைப்படுதல், சொட்டு சொட்டாக சிறுநீர் போதல், நீர்க்கடுப்பு, மலட்டுத்தன்மை நீங்கும், சிறுநீரக கற்கள் கரையும்.
- இலைகளை அரைத்து தயிரில் கலந்து காலையில் உண்டுவரவும் இந்த தொந்தரவுகள் மறையும்.
காயங்களுக்கு
உடலில் ஏதேனும் இடத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதனை ஆறவைக்க யானை நெரிஞ்சில் இலை உதவும். இலையை அரைத்து பற்றிட நல்ல பலன் கிடைக்கும்.
மலட்டுத்தன்மை நீங்க
நெரிஞ்சில் விதை மலட்டுத்தன்மையை போக்கும். விதைகளை சேகரித்து லேசாக உடைத்து நீரில் அரைப்பங்காக சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பருகிவர மலட்டுத்தன்மை நீங்கும், விந்தணு பெருகும்.