Health n organics Tamil Gardening, Kitchen Garden, Terrace Garden, Keerai in Pot, Veetu Thottam, maadithottam, Gardening in Tamil

வீட்டுத் தோட்டம் பொழுதுபோக்கா? அவசியமா?


உணவு என்றவுடன் நமக்கு கடையில் கிடைக்கும் அரிசி, பருப்பு தொடங்கி காய்கறி, கீரைகள் வரை வாங்கி, சமைத்து உண்பது மட்டுமே நினைவில் உள்ளது. ஆனால் அதற்கு முன் உணவு தொடங்கும் இடம், உணவின் வித்து, உணவு விளையும் முறை, தரம்பிரிக்கும் உத்திகள், பக்குவப்படும் நிலைகள், பதப்படும் முறைகள் மற்றும் விற்பனைக்கு ஏற்ப மாறுபடும் தன்மைகள் என இதில் பல கட்டங்கள் உள்ளது.

இந்த பாதையில் இறுதியாக நமது சமையலறைக்கு வந்து உணவாக மாறும் இவை உணவு என்ற தரத்திற்கு மேல் நச்சுக்களின் கூடாரமாக உள்ளது. நம்மைப் பொறுத்தவரை கண்களை மூடிக்கொண்டு சந்தையில் கிடைப்பதை வாங்கி வந்து உண்கிறோம்.

எங்கிருந்து வருகிறது உணவு?

அது எப்படி, எங்கு விளைகிறது, எவ்வாறு பக்குவப்படுகிறது என்றெல்லாம் கண்டுகொள்வதில்லை, அதற்கு நேரமும் இல்லை. நமது இந்த அலட்சிய போக்கினால் விளைவுகளோ பயங்கரமாகயுள்ளது. காரணம் தெரியாத நோய்கள், நரம்பு மண்டல குறைபாடுகள், வளர்சிதை சீர்கேடு, மரபணு கோளாறு, புற்றுநோய் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 

ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தும் கைபேசிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கூட நமது உணவிற்கும் அதனை ஜீரணிக்கும் உடலுக்கும் கொடுப்பதில்லை என்பது நிதர்சனம்.

சாதாரண ஒரு கைபேசியை வாங்குவதற்கு முன் அதனைப்பற்றி தீரவிசாரிப்பதும், அதில் உள்ள புரியாத தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டும் நாம் நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் நம்மை பேணும் உடலிற்கு நஞ்சில்லாத உணவை அளிக்கிறோமா? ஒவ்வொருநாளும் மூன்றுவேளை தவறாமல் உண்ணும் அந்த உணவிற்காக நேரம் கொடுக்கிறோமா? 


உணவு விளையும் நிலத்தில் நச்சு, மலட்டு விதைகள், மரபணு மாற்று விதைகள், அதிக விளைச்சலுக்கு இரசாயனங்கள், பூச்சி தாக்குதலுக்கு பூச்சிக்கொல்லி விஷங்கள், நோய் தாக்குதல் களைகளுக்கு தனித்தனி நச்சுகள், விளைந்த தானியம், காய்கனிகளை பாதுகாக்க நச்சுகள், இரசாயனங்கள், விளைந்ததில் இருக்கும் நல்லவற்றை பிரித்து மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்பதும், மீதம் இருக்கும் வெறும் சக்கைகளை நவீனப்படுத்தி சந்தைப்படுத்துவதும் எல்லா இடங்களிலும் நடந்தவண்ணம் உள்ளது. இதனை உண்டு நோய் எதிர்ப்பு சத்து கூட இல்லாமல்  பலியாவது நமது அடுத்த தலைமுறையினர் தானே.

இந்த நிலைமையில் இருந்து நம்மையும், நமது குழந்தைகள், குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. வெறுமனே கிடைப்பதைக்கொண்டு ஏதோ சமைப்பதுடன் நின்றுவிடாது நமக்கான உணவில் நம்மால் முடிந்த அளவு நாமே நமது வீட்டிலோ, நமது மாடியிலோ, சிறு இடத்திலோ நமக்கு தேவையானவற்றை விளையவைத்து உண்பதால் நம்மையும் வளரும் நமது சமுதாயத்தையும் காக்கலாம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு

இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்விக்கு, மனமிருந்தால் மார்க்கமுண்டு. பல அந்நிய நாட்டின் தொந்தரவுகளுக்கு இடையில் எந்த வளமும் இல்லாத இஸ்ரேல், கியூபா, ஜப்பான் போன்ற நாடுகளால் அவர்களுக்கு தேவையான உணவை பெரும்பாலும் அவர்களே பயிரிடுகின்றனர். அதிக வெப்பம், தண்ணீருக்கே மற்ற நாட்டினை எதிர்பார்க்கும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இன்று மறுசுழற்சி மூலம் விவசாயத்தில் இறங்கியிருக்கின்றனர். பாதி மாதங்கள் பனி, மீதியில் சுமாரான சூரியஒளி.. இப்படி இருக்கும் உலக முன்னணி நாடுகளே விவசாயத்தில் மும்மரமாக சாதிக்கின்றனர். 


அவர்களுக்கே இவை சாத்தியமாகும் பொழுது, எல்லா இயற்கை வளமும் நன்கு அமைந்த நமது திருநாட்டில் ஏன் தோட்டம் அமைத்து நமக்கான உணவினை முடிந்தவரை நாமே விளையவைத்து நமது குடும்பத்திற்கான பாதுகாப்பான வாழ்வியலைக் கொடுக்க முடியாது.

உலகையே மிரட்டும் பல நோய்களில் இருந்து நமது குடும்பத்தைக் காக்க இதுவே ஒரே வழி. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை வழி வீட்டு தோட்டத்தால் மட்டுமே வரும் காலத்தின் உணவு தேவையை பூர்த்திசெய்ய முடியும் என்று கூறியுள்ளது. 

நஞ்சான உணவு

இந்திய ஜனதொகைக்கு தேவையான தானியங்கள், காய்கறிகள், பழங்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதிசெய்வது தினந்தோறும் அரங்கேறும் ஒன்றுதான் என்றாலும், அதற்கு இணையாக அந்த உணவுகளை உண்டு நமது சுற்றாரும், உறவினரும், ஏன் நம் வீட்டாரும் புற்றுநோய்க்கு இரையாவதும் அன்றாடம் அரங்கேறுகிறது. இதில் இருந்து நமது குடும்பத்தை காப்பது நமது கடமையும் தான்.  வீட்டுதோட்டம் பாதுகாப்பான உணவை மட்டுமல்ல நோய்தீர்க்கும் மருந்தாகவும் நம்மை காக்கிறது. 

கடையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லி தெளித்த கருவேப்பிலை எந்த நோயையும் குணப்படுத்தாது, மாறாக அந்த நச்சுக்கள் பல நோய்களை வரவழைக்கும். ஆனால் நமது வீட்டில் இயற்கையாக விளையவைத்த ஒரு இலை கருவேப்பிலை புற்றுநோய்க்கே மருந்தாக அமைகிறது. இதுவே வீட்டுத்தோட்டத்தின் மாயமும் மந்திரமும். 

இவ்வளவு நாள் வீட்டுதோட்டம் என்பது பலருக்கு வெறும் பொழுதுபோக்காக இருந்தது, இனி வரும் காலத்தில் வீட்டிற்கு எப்படி ஒரு சமையலறையும், படுக்கை அறையும் அவசியமாக இருக்கிறதோ அதே போல் நமக்கான காய்கள், கீரைகளை பயிரிடும் தோட்டமும் அவசியமாக இருக்கவேண்டும்.

வளரும் நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பிற்கான அஸ்திவாரம் இதுதான். பணம் கொடுத்தால் கூட இன்று பாதுகாப்பான உணவு வெளியில் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம், இனியாவது விழித்தெழுந்து  வீட்டு தோட்டம் அமைப்பதன் மூலம் நமது தலைமுறையினருக்கான ஆரோக்கியம் என்ற சொத்தை சேமிக்க தொடங்குவோம்,