பூச்சிகள் – செடிகளை பாதிக்குமா?

இதற்கு முன் காய்கறி செடிகள், வீட்டு தோட்டம், இயற்கை முறையில் செடிகளை வளர்ப்பது, இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், கீரைகள், மூலிகை செடிகள், மூலிகைகளைக் கொண்டு பூச்சிகளை விரட்டும் பூச்சி விரட்டி என பலவற்றை பற்றி தெரிந்து கொண்டோம்.. காய்கறிகளையும், கீரைகளையும் வீட்டிலேயே வளர்க்க எந்த பிரத்தியேக செலவுகளும் பொருட்களும் அவசியமில்லை என்றும் பார்த்தோம்.. சாதாரணமாக வீட்டில் இருக்கும் ஏதேனும் பழைய உடைந்த பொருட்களில் இயற்கை வீட்டு கழிவுகளையும், மண்ணையும், மக்கு உரங்களையும் கொண்டு மண் கலவைகளை தயார் செய்து நாட்டு விதைகளை நட்டு செடிகளுக்கு அன்றாடம் நீரை தெளிப்பதாலும், மாதம் இருமுறை ஏதேனும் சமயலறைக் கழிவுகளை மக்கவைத்து உரமாக்கி அளிப்பதிலும் நல்ல விளைச்சளை பெறமுடியும் என்றும் பார்த்தோம்.. சிலருக்கு இதனைப் படிக்கும் போதே ஒன்று நினைவிற்கு வரும். ஆம்.. பூச்சிகள் தான், செடி வளர்ச்சி, செடிகள், தோட்டம் என்றவுடனேயே பலருக்கு நினைவுக்கு வருவது பூச்சிகளின் தாக்குதல் தான். 

ஆசையாசையாய் நாமும் நமது வீட்டில் செடிகளை வைத்து நமக்கான சுவையான கீரைகளையும், காய்களையும் வீட்டிலேயே புதிதாக அறுவடை செய்து உண்பது என்றாலே அது தனி சுவையும், சத்துக்களும் கொண்டது தானே. யாருக்குத்தான் பிடிக்காது. இந்த ஆசையில் அச்சுறுத்தலாக இருப்பது பூச்சிகள் அல்லவா.. இலைகளை திண்பது, தண்டுகளை துளைப்பது, தண்டுகளில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சுவது, காய்களை திண்பது, வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவது என பலப்பல வகைகளில் பூச்சிகள் நமக்கு தொந்தரவுகளை அளிக்கிறதே.. பின் எங்கிருந்து செடிகளை வளர்ப்பது. இவற்றை கொல்ல நச்சுக்கள் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால் பூச்சிகள் மட்டுமல்ல நமக்கே அவை உயிர் கொல்லும் விஷமாக மாறுகிறதே என தோன்றுவதும் இயல்புதான். இந்த காரணங்களால் செடி வளர்க்கும் ஆசையே பலருக்கு நிராசையாக போய்விடுகிறது.

பூச்சிகள் என்ன அவ்வளவு கொடூரமானவைகளா? தம்மாத்தூண்டு பூச்சி, அறிவியலில் நவீன தொழில்நுட்பத்தில் பல சாதனைகள் படைக்கும் மனிதர்களை விட பெரியவைகளா?

பூச்சிகள்…

உலகிலேயே பூச்சிகள் இனம் தான் பெரிய இனம். பல கோடி ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றியவை இந்த பூச்சிகள் இனம். இந்தியாவில் மட்டும் லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்கள் உள்ளது. உணவுச்சங்கிலியில் முக்கியப்பங்கை வகிக்கிறது இந்த பூச்சிகள். பல்லுயிர் வளர்ச்சியில், சுற்றுச்சூழல் பராமரிப்பு பாதுகாப்பு போன்றவற்றில் பெரும்பங்கு கொண்டவை இந்த பூச்சிகள். இந்த பூச்சிகளின் இனத்தில் இருக்கும் தொண்ணூறு சதவீதம் பூச்சிகள் பயனுள்ள பூச்சிகள் மட்டுமல்ல அவசியமான பூச்சிகளுமாகும். குறிப்பாக தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமல்லாமல் இன்னும் பல பூச்சிகள் மனிதர்களுக்கு உதவும் பூச்சிகள். மனித இனம் செழித்து வாழ உணவு அவசியம், அந்த உணவு கிடைக்க செடிகளுக்குள் மகரந்த சேர்க்கை அவசியம் இதனை ஒரு செடிக்கும் மற்ற செடிக்கும் இடையில் நிகழ்த்தி மனிதனின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது சில பூச்சிகள். பூச்சிகள் இந்த மகரந்த சேர்க்கையை செய்யவில்லை என்றால் உணவு தேவை பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் முற்றிலும் அழிந்து அழிவு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும். 

மனித இனம் செழித்து வாழ உணவு அவசியம், அந்த உணவு கிடைக்க செடிகளுக்குள் மகரந்த சேர்க்கை அவசியம் இதனை ஒரு செடிக்கும் மற்ற செடிக்கும் இடையில் நிகழ்த்தி மனிதனின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது சில பூச்சிகள்.

இன்று நம்மவர்கள் பலர் பொதுவாக பூச்சிகளை அழிக்க  பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பூச்சிகள் அழிவதில்லை மாறாக அவை தனக்கு தேவையான எதிர்ப்பு திறனை வரவழைத்துக்கொண்டு பெரும் தொந்தரவுகளை மனிதர்களுக்கு அளிக்கிறது. அதுமட்டுமல்ல நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், அந்த பூச்சிக்கொல்லிகளின் நச்சின் காரணமாக மனிதர்கள் பல நோய்களால் தாக்கப்படுகின்றனர்.

ஒரு உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். வீடுகளில் சாதாரணமாக திரியும் கொசுக்களை அழிக்க ஆயிரமாயிரம் கொசுக்கொல்லிகளை நவீன யுக்தி, நவீன தொழில்நுட்பத்துடன் கண்டுபிடித்து வெளியிட்டாலும், அவை அனைத்தும் பயனற்றது தான். இறுதியில் கொசுக்களை அழிக்க முடியாது என்ற நிதர்சனத்தை மறுக்க முடியாது.. புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் கொசுக்கள் தங்களுக்கு தேவையான எதிர்ப்பு திறனை பன்மடங்கு பெருக்கி கொள்ளும். ஆனால் கொசுவை அழிக்க நாம் பயன்படுத்திய நவீன யுக்திகள் நம்மையே அழிக்கும் என்பது தான் உண்மை. இன்றுவரை இயற்கைக்கு மாறாக எதைப் பயன்படுத்தினாலும் அவற்றால் மனிதனுக்கே பாதிப்புகள் அதிகரித்தன. கொசுவை கொல்லும் நவீன உக்திகளால் மனிதனுக்கு நுரையீரல் சம்பந்த நோய்கள், நுரையீரல் புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள், தோல் புற்றுநோய், கல்லீரல் சம்பந்தமான நோய்கள் போன்றவைகளே இன்று மனிதர்களுக்கு பெருகியுள்ளது. 

இயற்கைக்கு மாறாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அவற்றால் பாதிப்பு மனிதர்களுக்கு மட்டுமே என்பதை புரிந்து செயல்பட வேண்டும். கொசுக்கொல்லிகள் மட்டுமல்ல இன்றைய நவீன வாழ்வியல் நோய்களுக்கும் மற்ற பல வகையான நோய்களுக்கும் காய்கறிகளையும், கீரைகளையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. அதனால் பூச்சிகளை கொள்வதற்கு சிந்திக்காமல் நம்மை எவ்வாறு பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கலாம் என்று சிந்திப்போம். கொசுவிடமிருந்து நம்மை காக்க இயற்கையான பல வழிகள் இருப்பதைப்போல் பயிர்களை பாதிக்கும் பூச்சிகளிடம் இருந்தும் பயிர்களை பாதுகாக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பூச்சி விரட்டி மற்றும் தரமான நாட்டு ரக விதைகள். சரியான விதையை தேர்ந்தெடுக்க பூச்சிகளில் தாக்குதல் குறையும். மேலும் பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் என இரண்டு வகை பூச்சிகளுண்டு.

இதில் நன்மை செய்யும் பூச்சிகளை நமது தோட்டத்தில் அதிகரிக்க தீமை செய்யும் பூச்சிகள் தானாக குறைந்துவிடும். அது என்ன நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என்கிறீர்களா? கம்பளிப் பூச்சி கூட நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அடுத்த பகுதியில் வகைகள், பயன்களுடன் தெரிந்துகொள்வோம். மேலும் பூச்சிக்கொல்லிகளால் நமக்கும் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தெரிந்து கொள்வோம். அதனுடன் எவ்வாறு நமது தோட்டத்தை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது என்பதையும் தெரிந்து  கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *