முப்பத்தைந்து வயதை கடந்த தொன்னூறு சதவீத பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உடல் பருமன். அதிலும் ஒரு குழந்தை பெற்றவுடனேயே உடல் எடை மேலும் கூடுவது இன்று அதிகமாகிவிட்டது.
வீட்டில் உள்ளவர்களோ இதனால் எரிச்சல் அடைவதும் கிண்டல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அன்றாடம் இவ்வாறான நிகழ்வுகளால் மனக்குமுறலும், மன உளைச்சலும் அதிகரிக்கின்றது.
நாளுக்கு நாள் உடல் எடை கூடுவதும், அதனை குறைக்க வழிதெரியாமல் தாழ்வுமனப்பான்மையும் வளர்கிறது.
பல பெண்களோ இதற்கு தீர்வு ஒரு வேளை உணவினை குறைப்பது தான் அல்லது காலையும் மாலையும் நடப்பதுதான் என்று தவறாக நினைக்கின்றனர்.
உடல் பருமனுக்கு காரணம் என்ன? எவ்வாறு இதிலிருந்து வெளிவரலாம்? என்றெல்லாம் நிலையான யோசனை இல்லாத காரணத்தினால் இவ்வாறு பலவகைகளில் மேலும் மேலும் உடலினை சிரமப்படுத்திக் கொள்கின்றனர்.
மனரீதியான பெருமை நிலையும், உடல்ரீதியா கட்டுப்பாடில்லாத உணவு பழக்கமும், ஊசலாடும் எண்ணத்தினாலும் உடல் பருமன் நிலையாக ஓரிடத்தில் தங்குகிறது.
மனதால் பெருமையான நிலையில் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாடு இன்றி கண்டதை கண்ட நேரத்திலும், புதுப்புது உணவுகளை சுவைக்காக சுவைப்பதிலும் அதிக மும்முரம் காட்டுவார்கள். இதனால் உடல் கிடுகிடுவென்று எடையைக் கூட்ட பின் அதனை குறைக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலை தொடர அவர்கள் மேல் மற்றவர்கள் செய்யும் கேளிக்கைகளும், கிண்டலும் அதிகரிக்க என்ன செய்வதென்று அறியாமல் தாழ்வு மனப்பான்மை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
செய்வதறியாது கடற்கரை, பூங்கா, சாலை, மொட்டைமாடிகளில் நடப்பதும், பலவகையான நவீன அதிநவீன உடற்பயிற்சி கூடங்களில் சேர்வதும், அம்பாக உடலை வளைக்கக்கூடிய பயிச்சியினை அளிப்போம் என்று விளம்பரப்படுத்தும் மையங்களில் சேர்வதும், குறைந்த நாட்களில் தங்களின் பொடிகளை காலை உண்ண விரைவில் ஒல்லியான உடல் என்று விளம்பரப்படுத்தும் மையங்களில் சேர்வதும், எந்த உணவு கட்டுப்படும் இல்லாமல் காலையில் ஒரு சில நிறுவனத்தின் பானத்தை குடிப்பதால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று விளம்பரப்படுத்தும் மையங்களில் சேர்வதும், அயல்நாட்டு கலைகளைக் கொண்டு உடலிடையை குறைக்கலாம் என்னும் வெள்ளைத்தோல் விளம்பரங்களுக்கு மயங்கி அதனில் சேர்வதும் இன்றைய நவநாகரீகமாக உள்ளதும்.
அதிக பணத்தை வீணாக்கும் இந்த வகை செயல்பாடுகள் எந்த பயனும் இல்லாமல் மேலும் மேலும் மனஉளைச்சலை தரக்கூடியதாக மட்டுமே உள்ளது. திடமான நம்பிக்கை, தரமான உணவு கட்டுப்பாடு, பாரம்பரிய பழக்கவழக்கங்கள், அளவான உடற்பயிற்சியும் உடல் வன்மையையும், உடல் அழகையும் மேம்படுத்தும்.
உடல் பருமனாக உள்ளவர்களுக்கு தங்களின் உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து விடலாம் என்கிற முழு நம்பிக்கை முதலில் தேவை.
பலர் முதலில் அவ்வாறு முழு நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள், ஒரே மாதத்தில் இவ்வளவு எடை குறைந்து சிக்கென்று தோன்ற வேண்டும் என்பது போன்ற கனவு உலகத்தில் மிதப்பார்கள்.. இரண்டு மாதமாகியும் உடலில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்க நம்பிக்கை காணாமல் போய் எதிர்மறை எண்ணம் தலைதூக்குகிறது.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், உடல் பருமனில் இருந்து விடுபட குறைந்தது ஒரு சில காலம் தேவைப்படும். அதுவரை சற்று பொறுமையாகவும், தொடங்கிய பயிற்சிகளை மனம் தளராமல் செய்யவேண்டும்.
ஒருமாதம் இவற்றை பின்பற்றி எந்த மாறுத்தலும் இல்லை என்பதற்கா மனதினை தளரவிடாமல், எதிர்மறை எண்ணங்களை தலைதூக்க விடாமலும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
அடுத்ததாக பலர் பலவகையான கடினமான நடை, உடற்பயிற்சிகளை செய்வார்கள். நாம் தான் தொடந்து உடற்பயிற்சிகளை செய்கிறோமே என்ற எண்ணத்தினால் எந்த உணவு கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்த அனைத்தையும் சுவைப்பார்கள். இவ்வாறு இருந்தால் எவ்வாறு உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும்.
கண்ட கண்ட உணவுகள், அதுவும் அயல்நாடுகளில் இருந்து.. நமக்கு புரியாத, உடல் ஏற்காத பொருட்களைக் கொண்டு தயாரித்த உணவுகள்.. சுவையூட்டிகள், மணமூட்டிகள், இரசாயனங்கள் கொண்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்றவற்றை உண்ணாமல் வாயினைக் கட்ட விரைவில் பளபளப்பு மேனியுடன் உடல் வசீகரமாகும் மேலும் எடை குறையும்.
நமது பாரம்பரிய உணவுகள், பழங்கள், நாட்டு காய்கறிகளை அதிகம் உட்கொள்வதால் விரைவில் உடல் பருமன் குறையும்.
நம்பிக்கையுடன் உணவும், உணவுடன் பாரம்பரிய பழக்கவழக்கங்களும் சேர ஆரோக்கியமான வாழ்வு சாத்தியப்படும்.
நமது பழக்க வழக்கங்களுக்கும் உடல் பருமனுக்கும் நிறைய தொடர்புண்டு. உடல் பருமனாக உள்ளவர்களில் பலர் உணவிற்கு பின் தூங்குபவர்களாக இருக்கின்றனர். எந்த நேரம் பார்த்தாலும் எதாவது ஒன்றை மென்று கொண்டே இருப்பார்கள். சில வீடுகளில் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் என்று கூறி வாங்கும் தின்பண்டங்களை பெரியவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் உண்பதும் உடல் பருமனுக்கு முக்கியமான காரணங்கள். இரவு தூக்கத்தை தவிர்த்து வேலைசெய்பவர்கள் எதாவது ஒரு குளிர்பானம், நொறுக்கு திண்ணிகளை தின்பது உடலுக்கு ஆபத்து மட்டுமல்ல உடல் பருமனுக்கும் காரணம்.
கணினி, தொலைக்காட்சிக்கு முன் உட்காரும் பலருக்கு எதையாவதும் மென்று கொண்டே இருக்கின்றனர். பலரோ இரவு உணவினை நடு இரவில் உண்பதும் ஆபத்தானது. இவ்வாறான பழக்கங்களை தவிர்ப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு வித்திடும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உணவையும், பழக்கவழக்கங்களையும் சீர்படுத்துவதோடு அளவான உடற்பயிற்சியும் அவசியமாகும். உடற்பயிற்சி என்றதும் பலர் நினைப்பது நடை பயிற்சியைத்தான். அதுவும் கிடைக்கும் நேரத்தில் காதில் பாட்டு கேட்டுக்கொண்டும், நண்பர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டும் நடப்பது இன்றைய நாகரீகமாக கருதுகின்றனர். இதற்கு எந்த பலனும் இருக்காது. உடலின் மேல் கவனம் இல்லாமல் ஏனோ நடப்பதால் எவ்வாறு உடல் பருமன் குறையும்?
உடற்பயிற்சி என்பது வெறுமனே நடப்பது மட்டுமல்ல..
உடல் பருமணுக்கு காரணத்தை முதலில் ஆராய்ந்து அதற்கு ஏற்ற முறையில் பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். அதிலும் அவர்களின் மனநிலையைப் பொருத்தும் உடலின் தன்மை அமைந்திருக்கும்.
சிலருக்கு உடல் தசைகளை விரிவு படுத்தும் பயிற்சி, நீச்சல், சூரியநமஸ்கரம், மூச்சுப்பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சிகள் அவசியமாகிறது. ஆயிரத்திற்கும் மேலிருக்கும் யோகப்பயிற்சியில் உங்களுக்கு தேவையான உங்கள் உடலுக்கு தேவையான பயிற்சியை மேற்கொள்வதே நல்ல பலனைத் தரும். அன்றாடம் மூச்சுப்பயிற்சியும், சூரியநமஸ்கரமும் அளவான ஆரோக்கியமான சூழலை உருவாக்கி நல்ல பலனை விரைவில் அளிக்கும்.
உணவையும், பழக்கவழங்களையும் நல்லமுறையில் வடிவமைத்துக் கொள்ளும்பட்சத்தில் உடல் தன்னால் வளைந்து நெளியும் தன்மையை அடையும். மேலும் உடற்பயிற்சி என்று வீணாக நேரத்தை செலவு செய்யாமல் அன்றாடம் நமது வீட்டு வேலைகளை செய்வதால் உடல் வளமாகவும், பலமாகவும் மாறும். நோய்களை எதிர்க்கும் தன்மையும் பெருகும்.
அதிகாலை எழுவதே உடல் பருமானைக் குறைக்கும் என்றபொழுது, அதிகாலை எழுந்து வாசலை சுத்தம் செய்து கோலமிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
எந்த தனிப்பட்ட உடற்பயிற்சியும் தராத அசைவுகளை கை முத்திரைகளுடன் கோலமிடுவது தருவதால் தேவையற்ற இடுப்பு சதைகள், வயிற்று சதைகள், தொடை சதைகள் குறைவதுடன் மூச்சுப் பயிற்சிக்கான பலனையும் அது அளிக்கிறது.
குனிந்து கோலமிடுவது மட்டுமல்ல குனிந்து நிமிர்ந்து பெருக்குவதால் முதுகெலும்புகள், தோல்பட்டை தசைகள் வலுப்பெறுகிறது. நரம்புகள், மூட்டுக்கள் இதனால் பலம் பெருகுகிறது.
ஆரோக்கியமாக இருந்த அந்த கால பெண்கள் பயன்படுத்திய ஆட்டுக்கல்லும், அம்மிக்கல்லும் இன்று காணாமல் போக துணி துவைக்கும் இயந்திரம், உடற்பயிற்சி இயந்திரம் வீட்டை அலங்கரிக்கின்றது.
ஆட்டுக்கல்லில், அம்மிக்கல்லையும் தூக்கிப்போட உணவின் சத்துக்களும், சுவையும் மட்டும் காணாமல் போகவில்லை நமது ஆரோக்கியமும் கூடவே சென்றது. தசைகள், நரம்புகளின் பலம் இதனால் பெருமளவில் உறுதியாக இருந்தது, உடல் பருமன் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் இருந்தது.
பல ஆயிரம் செலவுசெய்து உடற்பயிற்சி வகுப்பு, உடற்பயிற்சி இயந்திரங்கள் அளிக்காத ஆரோக்கியத்தை கைகளால் துணிதுவைப்பதன் மூலம் பெறலாம். துணிகளை தேய்ப்பது, கும்முவது, கசக்குவது போன்றவை விரல்களுக்கும், கைகளுக்கும் பயிற்சி மட்டுமல்ல, துணிகளை அடித்து துவைப்பதால் முன்னும் பின்னும் செல்லும் கை, தோள்பட்டை, முதுகு ஆகியவை பலம்பெறுகிறது.
பல பெண்களுக்கு ஏற்படும் கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்படும் பிடிப்புகள் விலகும். துணிகளை துவைத்து பின் நீரில் அலசுவதால் கால், தொடை, வயிறு, இடுப்பு, கை என அனைத்துப்பகுதியும் சீராக அவரவர் உடலுக்கு ஏற்றவகையில் அசைந்து கொடுக்க உடல் பருமன் மட்டுமல்ல, தசைப் பிடிப்பு, தேவையற்ற கொழுப்பு, மூட்டுவலி போன்றவை விலகுகிறது.
அடுத்ததாக துவைத்த துணிகளை காயவைப்பதே ஒரு தனிக் கலைதான் எனலாம். துணிகளை நன்கு முறுக்கிப் பிழிந்து, உதறி, விரித்து போடுவதால் கைகள், கழுத்து என உடல் முழுவது பழைய கட்டழகை மீட்கும்.
நமது கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் அதிகாலை எழுவதிலிருந்து, காய்களை நறுக்குவது, சமைப்பது, தரையில் அமர்ந்து உண்பது என அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று இன்றைய பெண்கள் நடத்தும் நவநாகரீக செய்கையால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இவை அனைத்தையும் நமது வீட்டு வேலைகள் ஆரோக்கியத்துடன் அளிக்கிறது.
இனியாவதும் உடற்பயிற்சி வகுப்புகள், சாதனங்களுக்கென்று பெரும் செலவு செய்யாது உடலை உண்மையில் பேணுவோம். வணிகமயம் என்ற மாயையில் சம்பாதித்த பணத்தை மட்டுமல்ல நமது உடல் ஆரோக்கியத்தையும் காப்போம்.