வெயில் காலம் நெருங்குகிறது…
தண்ணீரை சேமிக்க சில எளிய வழிமுறைகள்… இவற்றை பின்பற்றினாலே போதும் வரக்கூடிய கோடைக்காலத்தை எளிதாக சமாளிக்கலாம்.
- அவசர உலகத்தின் மத்தியில் பலர் குழாய்களைச் சரியாக மூட மறந்துவிடுகிறோம். இதனால் நீர்க்கசிவு ஏற்படுவதுடன் தண்ணீர் வீணாகிறது. ஒவ்வொரு முறை குழாயை அடைக்கும் பொழுது சரியாக அடைத்துவிட்டோமா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- குழாயில் பழுது இருந்தாலும் உடனடியாக அந்த பழுதை சரி செய்து நீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- முடிந்தவரை இந்திய கழிவறைகளை பயன்படுத்துதால் நீரை சேமிக்கமுடியும். வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒருமுறை பிளஸ் செய்யும் பொழுது அதிக நீர் வீணாகும். உடல் ஆரோக்கியத்திற்கும் இந்திய கழிவறைகளே சிறந்தது தானே.. மூட்டுவலி, உடல் வலி, தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், வாயு தொல்லை, அடிவயிற்று தொந்தரவுகள் போன்றவை இந்திய கழிவறைகளை பயன்படுத்துவதால் நீங்கும்.
- குளியல் தெளிப்பானை தவிர்த்து வாளியில் நீரை நிரப்பி குவளையில் எடுத்து குளிப்பது நீரை சேமிக்க சிறந்த வழி. இதனால் அதிகமாக நீரை சேமிக்க முடியும். (ஒவ்வொரு முறையும் குனிந்து நிமிர்ந்து நீரை ஊற்றி கொள்வதால் உடல் சோம்பல், உடல் அசதி மறைவதுடன் நீர் சேமிக்கப்படும். காலை உடற்பயிற்சியும் எளிதாக நிறைவடையும், உடலும் ஆரோக்கியமாகும்.
- முகச்சவரம் செய்யும் பொழுது, வாய் கொப்பளிக்கும் பொழுது, முகம் கழுவும் பொழுது நீரை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். தண்ணீரை திறந்துவிட்டு பயன்படுத்துவது அதிக நீரை தேவையில்லாமல் வீணாக்கும்.
- அரிசி, மற்ற தானியங்களை கழுவும் பொழுது அவற்றில் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து, பின் எளிதாக 2 முறை கழுவி விடலாம். அதை விட்டுவிட்டு நீரைத் திறந்து வீணாகிக் கொண்டு பலமுறை கழுவுவதை தவிர்க்கலாம். கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை இவ்வாறு நீரில் 10 நிமிடம் உப்பு சேர்த்து ஊற வைத்து பின் எளிதாக அலசி எடுத்துக் கொள்ளலாம். இதனால் அதிக நீர் வீணாவதை தடுக்க முடியும்.
- கழுவிய நீரை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து அதனை வீட்டில் இருக்கும் செடிகளுக்கு ஊற்றுவதால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் செடிகளுக்கு நீருடன் கிடைக்கும். இந்த சத்தைக்கொண்டு மீண்டும் இந்த செடிகளின் மூலம் காய்கறி கீரைகளை இயற்கையான முறையில் பெறலாம். அவற்றை அதிகமான நீரை கொண்டு அலச தேவையில்லை, வீட்டிலேயே இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் என்பதால் லேசாக ஒரு முறை அலசி விட்டு சமைக்கலாம்.
- இவ்வாறு நீர் சுழற்சியை ஆரோக்கியமான முறையில் கையாளலாம்.
- இரவு தூங்கும்பொழுது ஜன்னல்களை திறந்துவைத்து தூங்கவும். இதனால் பின்னிரவு குளிர்ந்த காற்று நமக்கு கிடைப்பதுடன், குளிரூட்டிகளால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தவிர்க்கமுடியும், இதனால் குளிக்க குறைந்த நீரை பயன்படுத்தினாலே போதும்.
- வீட்டில் பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் நீரை வேறொரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு கழுவுவதால் குறைந்த நீரை கொண்டே பாத்திரங்களை கழுவவும் முடியும். இவ்வாறு சேமித்த நீரை செடிகளுக்கு ஊற்றலாம். ரசாயன கலப்பில்லாத சோப்புகள், பாத்திரம் துலக்கும் பொடிகளைக் கொண்டு பாத்திரங்கள் கழுவுவது நீரை மறுசுழற்சி செய்ய பெருமளவில் உதவும். இரசாயன கலப்பில்லாத சோப்புகளை கொண்டு குளிப்பதாலும் வீணாகும் நீரினை நேரடியாக செடிகளுக்கு செல்லும்படி செய்யலாம். இதனால் நீர் வீணாவதை பெருமளவில் தவிர்க்கலாம்.
- இரசாயன கலப்பில்லாத மூலிகை பொடிகளைகளைக் (Herbal Bath Powder) கொண்டு குளிப்பதால் தோட்டத்திற்கு இரசாயன கலப்பில்லாத நீர் கிடைப்பதுடன், உடலும் புத்துணர்வு பெரும். இந்த மூலிகை கலந்த கழிவுநீர் நமது தோட்டத்திலிருக்கும் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி செடிகளின் வளர்ச்சியையும் பெருக்க உதவும்.
- மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் போன்றவை கோடையை சமாளிக்க அவசியமாகும். இரசாயன கீரைகள், காய்களை மட்டும் பெறுவதற்கு அல்ல, வீணாகும் நீரை சேமிக்க மட்டுமல்ல, வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ளவும் கோடையில் வரும் உஷ்ண நோய்களை போக்கிக்கொள்ளவும் தான்.
- கோடைகாலத்தில் செடிகளுக்கு மூடாக்கு அவசியமாகும். மூடாக்கு இடுவதால் நீர் ஆவியாகி வெளியேறுவதை தவிர்க்கலாம். செடிகளுக்கு தேவையான ஈரப்பதம் காக்கப்படும்.
- கழிவுநீரை சுத்திகரிக்க கூடிய சில வகையான நுண்ணுயிர்கள் இன்று சந்தையில் பெருமளவு கிடைக்கிறது. இவற்றைக் கொண்டு நம் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மூலம் சுத்திகரித்து வாகனம் கழுவுவதற்கு, செடிகளுக்கு மற்ற இதர தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
- பாத்திரங்கள் கழுவும் பொழுது குழாயில் மழை தெளிப்பான் அமைப்புடைய குழாயை பயன்படுத்துவதால் நீரை பெருமளவில் சேமிக்கலாம்.
- ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் அன்றாடம் துவைப்பதை குறைத்துக்கொண்டு துணிகள் கணிசமாக சேர்ந்தவுடன் துவைப்பதால் நீரின் தேவையை குறைத்துக் கொள்ளலாம்.
இரசாயன சோப்புகள் நீரை நச்சு கலந்த நீராக மாற்றுகிறது, இதனால் மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்கள் மடிவதுடன், மண் மலடாகிறது. பிளாஸ்டிக்கைப்போல் இதுவும் மண்ணிற்கும் உடலுக்கும் கேடை அளிக்கிறது. மண் மலடானால் உலக வெப்பம் அதிகரிக்கும், மழை பொலிவு குறையும், இயற்கை பேரழிவுகள் ஏற்படும். நாம் சாதாரணமாக குளிக்கும், துவைக்கும், பாத்திரம் துலக்கும், பல்துலக்கும் ஒரு செயல்பாடு நமது உலகை அழிக்கும் ஒரு செயலாக உருவெடுக்கிறது. - இரசாயனங்கள் (சோப்பு, ஷாம்பூ, பாத்திரம் கழுவும் திரவம்) சேர்ந்த கழிவுநீர் பெருமளவில் எதற்கும் பயன்படாது.
- பல்துலக்கும் பற்பசையும் இதைத்தான் செய்கிறது. நீர்சேமிப்பு இயற்கையின் துணையுடனேயே சாத்தியமாகும். பற்பொடியின் மூலிகைகள் மண்ணை வளமாகும்.
- நீரின்றி அமையாது உலகு. இன்று நாம் நீரை சேமித்தால் மட்டுமே நாளைய நமது தலைமுறையினர் இந்த உலகில் வாழமுடியும். நீரை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம்.
- ஒவ்வொரு நாளும் சத்தான சமையலறை கழிவுநீரும், உணவு நீரும் வீணாகிறது, இவற்றை சிறந்த முறையில் மேலாண்மை செய்வது ஒரு கலை, அதனை சிறப்பாக வீட்டுதோட்டத்தின் மூலம் செய்வதால் சத்தான இயற்கை உணவு கிடைக்க ஆரோக்கியம் எளிமையாகும்.
வீட்டிலிருந்து வீணாக வெளியேறும் ஒவ்வொரு துளிநீரும் நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே வீணாக்குகிறது. கிராமங்களில் படிக்காதவர்கள் செய்யும் நீர்மேலாண்மையை (கொள்ளையில் கத்திரிக்காய், வெண்டைக்காய் வளருவது மட்டுமல்ல, ஆடுமாடு கோழி போன்றவைக்கும் இந்த மறுசுழற்சி நீர்தான்) இனி நாமும் அவர்களைவிட சிறந்த முறையில் செய்து அசத்துவோம்.