அவசர உலகம், நவீன யுகம், நினைக்கும் நேரத்தில் உணவு, வெயிகாலமும் வெயிலே தெரியாத அளவு குளிரூட்டப்பட்ட வசதி, கைக்குள் உலகம் என நமது வாழ்வியல் முறைகள் நினைத்துப் பார்க்காத அளவு மாறிவிட்டது. கடந்த முப்பது நாற்பது வருடத்திற்கு முன் நாம் நினைத்துப் பார்க்காத வளர்ச்சி.
இது நமது அன்றாட நிகழ்வுகளை எளிமையக்கியது என்பது ஒரு பக்கமிருந்தாலும் மறுபக்கம் திரும்புமிடமெல்லாம் உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய்கள், கொழுப்பு, இரத்தக் கொதிப்பு, சிறுநீரக தொந்தரவுகள், பித்தப்பை கற்கள், நரம்பு தளர்ச்சி, சத்து குறைபாடுகள், மனஉளைச்சல், தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகு வலி, சரும நோய்கள், சுவாச நோய்கள், மலட்டுத்தன்மை, குழந்தையின்மை என அடுக்கிகொண்டே போகலாம்.
இவற்றிற்கெல்லாம் காரணம் சீரான உணவுப் பழக்கமில்லாததும், சரியான வாழ்க்கை முறை இல்லாததுமே காரணம். இந்த பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்து நம்மை நாம் ஓரளவு பாதுகாத்துக் கொள்ள யோகப்பயிற்சி, நடை பயிற்சி, உடற்பயிற்சி, தியானப்பயிற்சி அவசியப்படுகிறது. அதிலும் மிக எளிதாக செய்யக் கூடியது நடைப்பயிற்சி.
ஒவ்வொரு நாளும் குறைந்தது முப்பது நிமிடமாவதும் நடப்பது சிறந்த பலனை அளிக்கும். பசுமையான சூழல் நிறைந்த இடங்களில், மண்தரையில் காலை வேளையில் வெறும் காலில் நடப்பது சிறந்தது, முடியாதவர்கள் வீட்டின் மாடியில் சூரிய உதயத்தின் பொழுது நடக்கலாம், எட்டு நடை பயிற்சியாகவும் செய்யலாம். இதனால் பல நன்மைகள் ஏற்படும். அன்றாடம் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றை பார்க்கலாம்.
நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- இரத்த ஓட்டம் சீரடையும், இரத்தக் கொதிப்பிளிருந்து மிக எளிமையாக வெளிவரலாம்.
- உடல் பருமன் குறையும், தேவையில்லாத கலோரிகள் எரிக்க உதவுகிறது.
- நினைவாற்றலை அதிகரிக்கும், புத்துணர்வு பெறலாம்.
- வைட்டமின் சத்துக்களை எளிதாகப் பெறலாம்.
- வைட்டமின் சத்துக்களை எளிமையாக பெறுவதால் எலும்புகள் பலப்படும், வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கிறது.
- கெட்ட கொழுப்புச் சத்தை கரைக்கும்.
- இதயத்தை வலிமையாக்கும்.
- இரத்தம் சுத்தமாகும். கழிவுகள் நீங்கும் இதனால் பல நோய்களில் இருந்து வெளிவரலாம்.
- கண்ணுக்கு தெரியாத பல உயிர்சத்துக்களை பெறலாம்.
- நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும்.
- மனோதிடமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், மனஉளைச்சல் நீங்கும்.
- நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
- முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
- மூட்டுவலிக்கு சிறந்தது.
- உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
- கண்பார்வையை செழுமைபடுத்துகிறது
- ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.
- செரிமானம் சீராகும்.
- இளமையாக இருக்க உதவும்.