மரம் போல் அசையாமல் ஒரு காலில் திடமாக நிற்கும் ஆசனம் விருச்சாசனம். விருச்சம் என்றால் மரம். இதற்கு ஏகபாதாசனம் என்றும் பெயருண்டு. மற்றொரு கால் முழங்காலுக்கு மேல் இருக்க ஒருகாலில் அசையாமல் நிற்பதால் உடலின் சமநிலைக்கு பேருதவியாக இருக்கும் ஆசனமாகவும் இது உள்ளது.
உடலின் சமநிலையில் உடல் உஷ்ணமும், உறுப்புகளின் சமநிலையும் அடங்கும். இந்த ஆசனத்தை செய்வதால் உடலின் சூரிய மற்றும் சந்திர நாடி இயக்கப்படும். மேலும் இதனால் உடலின் சமநிலையையும் இந்த ஆசனத்தால் ஏற்படுத்த முடியும் அதேப் போல் உடலின் உஷ்ணத்தையோ அல்லது குளிர்ச்சியையோ கூட தக்கவாறு ஏற்படுத்திக் கொள்ள முடியும். கண்களையும் இந்த ஆசனம் செய்யும் பொழுது ஒரு புள்ளியில் நிறுத்த உடல் முழுவதுமே ஒருநிலைப்படும். இதனால் கவலை, மனஉளைச்சல் ஆகியன தீரும். நடைபயிற்சி செய்வதற்கு பதில் இந்த ஆசனத்தை செய்ய அதிக பலனைப் பெறலாம்.
இந்த விருச்சாசனத்தை செய்வதால் நினைவாற்றலை அதிகரிக்கலாம். குழந்தைகள் இளைஞர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும். மேலும் உடல் மூட்டுகள், நரம்புகள் வலுப்பெறும். உடலின் கீழ் பகுதியும் அடி வயிறு தொடைப் பகுதிக்குட்பட்ட உறுப்புகள், கால், கெண்டைத்தசை ஆகிய உறுதியாகும், அங்கிருக்கும் வலிகள், சதைப்பிடிப்பு, அதிக சதை, உடல் பருமன் ஆகியன மறையும்.
விருச்சாசனம் செய்முறை
தரை விரிப்பில் நேராக நின்று முதலில் வலது காலை மடக்கி இடது காலின் அடித் தொடையில் வைக்க வேண்டும். உடலை சமன் செய்ய இரண்டு கைகளையும் நீட்டி தலைக்கு மேல் உயர்த்தி ஒன்றாக கும்பிடுவது போல் வைத்து நேராக நிற்க வேண்டும். மூன்று முறை நிதானமாக சுவாசித்து பின் மறுபுறமும் இவ்வாறு செய்ய வேண்டும்.
மன அழுத்தம் நீங்கும்
ஒரு காலில் அசையாமல் நிற்க அதிக நிதானமும், பொறுமையும் ஏற்படும். அதனால் இந்த ஆசனத்தை செய்ய உடலும் மனமும் சமநிலைப்படும். மன அழுத்தம், மன உளைச்சல், கவலை நீங்கும்.
மூட்டுவலிக்கு சிறந்தது
மூட்டுகளில் ஏற்படும் வலி, தொந்தரவு, அசதி ஆகியவற்றிற்கு சிறந்த ஆசனம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்ய மூட்டுவலி, கால் வலி விரைவில் நீங்கும்.