விதைகளைப்பற்றி பல பல செய்திகளையும், விதைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் பற்றிய பல அறிய செய்திகளை இதுவரை பார்த்தோம்.
- விதைகளைப் பற்றிய அறிமுகம் – விதைகள்…
- விதைகளும் நமது முன்னோர்களின் அறிவியலையும் தெரிந்துக்கொள்ள – விதைகளும் விழாக்களும்….
- நாட்டு விதைகள் / மரபு விதைகள் – காய்கறி விதைகள், கீரை விதைகள்…
- இனி விதைகளே பேராயுதம் – விதைகளே பேராயுதம்…
- விதைகளும் அதன் வகைகளும் (நாட்டு விதைகள், ஒட்டு விதைகள்…) – விதைகளும் வகைகளும்…
- மரபணு மாற்று விதைகள், பயிர்கள் – மரபணு மாற்று பயிர்கள்…
- நாட்டு காய்கறி விதைகளின் பட்டங்கள் ( ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் ) – விதைகளும் பட்டமும்…
- நாட்டு விதைகளை எளிதாக கிராமங்களில் பெறலாம் – கிராமங்களில் நாட்டு விதைகள்…
இனி விதைகளை எவ்வாறு பாதுகாப்பது, விதைகளை விதைப்பதற்கு முன் எவ்வாறு விதை நேர்த்தி செய்வது எந்தெந்த நாட்களிலெல்லாம் விதைகளை விதைப்பது என்று பார்ப்போம்.
இன்று நாம் பாதுகாக்கும் ஒவ்வொரு விதையும் வருங்காலத்து தலைமுறையினரின் வாழ்வை பாதுகாக்கும் வித்துக்கள்.
இன்றைய விதை நாளைய மரம் மட்டுமல்ல, விதைகளால் உணவு, தூய்மையான காற்று, வளமான மண், ஆரோக்கியமான வாழ்வு என பல வகைகளில் விதைகளுடன் மனிதன் பின்னிப் பிணைந்திருக்கிறான். இன்று நாம் பாதுகாக்கும் ஒவ்வொரு விதையும் வருங்காலத்து தலைமுறையினரின் வாழ்வை பாதுகாக்கும் வித்துக்கள்.
உணவுச்சங்கிலியில் ஏதேனும் ஒன்று அறுபட்டாலும் உணவுத்தட்டுப்பாடும், ஆரோக்கிய குறைபாடும் ஏற்படும். அதேபோல் விதை சுழற்சியில் விதை விதைப்பது முதல் விதை அறுவடை செய்வது வரை இருக்கும் சுழற்சி அறுபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வெண்டை, கத்திரி, புடலை, பாகல், பீர்க்கன், கொத்தவரை, தக்காளி, அவரை என அனைத்து காய்களின் விதைகளையும் நாமே நமது தோட்டத்திலிருந்து பெறமுடியும். முதலில் ஏதேனும் சந்தை அல்லது கிராமங்களிலிருந்து பெரும் விதைகளை விதைக்கும் நாம் அந்த விதைகள் முளைத்து பூத்து பின் காய்ப்பினைக்கொடுக்க தொடங்கியதும் அவற்றில் நல்ல தேறிய பெருத்த காயினைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடவேண்டும்.
எவ்வாறு விதைகளை பக்குவப்படுத்துவது?
காய் நன்கு முற்றியப் பின் காய்ந்து விதைகளை அளிக்கும் நிலையில் தரமான நன்கு தேறிய விதைகளை எடுத்து இரண்டு நாட்கள் மாலை வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
எவ்வாறு விதைகளை சேமிப்பது?
இந்த விதைகளை வசம்புத்தூள், கறித்தூள் அல்லது நாட்டுமாட்டின் காய்ந்த சாணப்பொடியினை சேர்த்து பானையில் அல்லது சாக்குப்பையில் கட்டிவைக்கவும்.
நமது பாரம்பரிய அவரைக்கு எவ்வாறு நேரமும் காலமும் தெரியுமோ என்று தெரியாது.. கார்த்திகை மாதம் தொடங்க அவரைக்கு கொண்டாட்டம்தான் என்பதைப்போல் விதைகளுக்கும் காலமும் நேரமும் தெரியும்.
எந்த காலத்தில் விதைகளை பெறலாம்
விதைகளை எல்லா காலங்களிலும் பெறமுடியும் என்றாலும், நல்வித்துக்களை மாசி, பங்குனி மாதங்களில் தரமானதாகவும், அதிக முளைப்புத்திறன் கொண்டதாகவும் பெற முடியும். சந்தைகளில் கிடைக்கும் விதைகளின் முளைப்புத்திறனை மறுவிதைப்பில் இந்த மாதங்களின் துணையுடன் பெறலாம்.
பொதுவாகவே நமது தோட்டங்களில் விதைக்கும் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். சில விதைகள் முளைப்புத்திறன் அற்றதாகவும் அல்லது குறைந்தும் இருக்கும். விதைகள் விதைப்பிற்கு ஏற்ற மண், சூழல், காலம், நீர் போன்றவற்றின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். அதேபோல் சில விதைகளை பூச்சிகள், நோய்கள் தாக்கியிருக்கும் அல்லது கடினமான விதைகளாக இருக்கும். இவ்வாறான விதைகளும் முளைப்புத்திறன் அற்றதாக இருக்கும்.
விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க விதைப்பதற்கு முன் விதைகளுக்கு விதைநேர்த்தி அவசியமாகிறது. பொதுவாக திருவிழாக்களில் முளைப்பாரி சுமந்து செல்வது விதைகளின் முளைப்புத்திறனை அறிந்துகொள்ளத்தான். விதைநேர்த்தி செய்து விதைக்கும் விதைகள் பலவகையான தாக்குதலில் இருந்தும் காக்கப்படும்.
விதை நேர்த்தி
விதை நேர்த்தி என்பது விதைகளை பாதுகாத்து அதன் நோய்த்தாக்குதல், பூச்சித்தாக்குதல் போன்றவற்றை குறைத்தும் முளைப்பு திறன், விளைச்சல் போன்றவற்றை அதிகரிக்கும் ஒரு செயல்.
இன்றைய அறிவியல் பலவிதமான நச்சு கலந்த இரசாயனங்களைக்கொண்டு இந்த விதைநேர்த்தியினை செய்து விதைகளை சந்தைப்படுத்துகின்றனர். இதுவும் ஒருவகையில் நமது உணவு நஞ்சாவதற்கு காரணமாகிறது. அதாவது விதையிலேயே இரசாயனங்களை ஊடுருவச்செய்வது. பல நேரங்களில் சந்தைகளில் கிடைக்கும் விதைகளில் ஒருவிதமான கலர்பொடி போன்ற பூச்சு கலந்திருக்கும் இவையெல்லாம் இரசாயனங்கள் கலந்த விதைநேர்த்தி செய்தது என்று தெரிந்துகொள்வோம்.
எவ்வாறு விதை நேர்த்தி செய்வது என பார்ப்போம்….