விரதம்

வாகனத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் சர்வீஸ் தேவை

பொதுவாக ஒரு வாகனத்தை வாங்கியபின் 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்கு ஒரு முறை அந்த வாகனத்தை ஆரம்பம்முதல் சர்வீஸ் செய்கிறோம். அதோடு தேவைக்கு ஏற்ப, பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் தரமான  எரிபொருளையும் அந்த வாகனத்திற்கு அளிக்கிறோம். அதிலும் தரமற்ற எரிபொருள் வாகனத்தை பழுதாக்கிவிடும், வெவ்வேறு இடங்களில் எரிபொருளை மாற்றி மாற்றி போட்டால் வாகனம் பழுதாகிவிடும் என்று பார்த்துப்பார்த்து பராமரிக்கிறோம்.  இவையெல்லாம் செய்தால் மட்டுமே வாகனம் நன்றாக ஓடும் என்று மெனக்கிடும் நாம் உடலுக்கு மட்டும் ஏன் வஞ்சனை செய்கிறோம்?

ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று வேளை,  அதிகப்படியாக அவரவருக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பது, அதிலும் ஒரு உணவு செரிப்பதற்கு முன்பு அடுத்த உணவையும் வயிற்றில் போட்டுவிடுகிறோம். உடல்  பராமரிப்பு என்றால் அது எங்கு கிடைக்கும் என்ற அளவிற்கு பராமரிக்கிறோம்.. கிடைக்கும் இடங்களிலெல்லாம் கிடைக்கும் தரமற்ற உணவை அதிலும் செயற்கை சுவையூட்டப்பட்ட உணவை லபக் லபக் என்று விழுங்குகிறோம்.. அதிலும் அந்த வயிற்றிற்கு பாவம் ஓய்வே கிடையாது. காலை தொடங்கி  பின்னிரவு வரை ஏதேனும் ஒன்றை அடுக்கிக்கொண்டே இருக்கிறோம். பாவம் அந்த வயிறு எவ்வளவு நான் உழைத்துக் கொண்டே இருக்கும் என்றாவது யோசித்திருக்கிறோமா?

வாகனத்தை எப்படி சர்வீஸ் செய்கிறோமோ அதேபோல் உடலையும் சர்வீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா? ஓய்வின்றி (சர்வீஸ் இன்றி) தொடர்ந்து உடலுக்கு எரிபொருளான உணவை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் தொடங்கி அஜீரணக் கோளாறு என ஆரம்பித்து பல உடல் பிரச்சனைகள் விரைவில் நம்மை வந்தடையும். இவ்வாறு செய்வதால் வாகனம் எவ்வாறு சூடேறி மற்ற பாகங்களை சேதம் செய்யுமோ அவ்வாறு உடலும் சூடாகி உடலில் இருக்கும் மற்ற உறுப்புகளையும் இரத்தத்தையும் சூடாக்கி சீரான உடலமைப்பை மாற்றி உடல்பருமனுக்கும் வழிவகுக்கிறது.

அது என்ன சர்வீஸ் என்கிறீர்களா?

வாகனத்தை சர்வீஸ் செய்யும் பொழுது ஏதேனும் தொந்தரவு இருந்தால் அதை தெரியப்படுத்துகிறோம் அல்லது மொத்தமாக எல்லா பாகமும் சரியாக உள்ளதா என்று ஒரு பார்வை பார்க்கிறோம் அல்லது இன்ஜின் ஆயில் போன்றவற்றை மாற்றுகிறோம் அதேபோல் ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவு சீராக உட்கிரகித்து உடலுக்கு சக்தியை அளிக்கிறதா, கழிவுகளை முறையாக  வெளியேற்றுகிறதா என்று கவனிக்க வேண்டும்.  அதிக உஷ்ணம் இல்லாத மூச்சுக்காற்று, சிறுநீர், மலம், வியர்வை  போன்ற கழிவுகள் சீராக வெளியேற வேண்டும். இவற்றை கண்காணிப்பது அவசியம். மேலும் உடல் சூடு சீராக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். முதலில் உண்ட உணவு செரிப்பதற்குள் அடுத்தடுத்து உணவுகளை வயிற்றில் போடுவதால் வயிற்றில் உள்ள உணவுகள் ஒன்றோடு ஒன்று வினைபுரிந்து புளிக்கத் தொடங்கிவிடும். இதனால் புளிச்ச ஏப்பம், எதுக்களித்தல், நெஞ்சைக் கரித்தல் போன்ற தொந்தரவுகள் முதலில் ஏற்படும். இவற்றை அறிந்துகொள்ளவேண்டும்.

எவ்வாறு உடலை சர்வீஸ் செய்வது?

மாதமொருமுறை ஒருநாள் மட்டும் உண்ணா நோன்பு  இருப்பது தான் உடலை சர்வீஸ் செய்வது. ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதா என்று பயப்படவேண்டாம். சுத்தமான நீரை மட்டும் அருந்தி உடலுக்கும் வயிற்றிற்கும் ஓய்வு கொடுப்பதால் பல வியாதிகள் நம் பக்கமே வராது. நமது முன்னோர்கள் பண்டிகை விசேஷங்களுக்குப்பின் இப்படி விரதமிருக்க ஒரு விரதத்தையும் கூடவே வைத்தது இதற்காகத்தான். விசேஷநாட்களில் வயிறுமுட்ட உண்பதால் வயிற்றிற்கு ஓய்வு கொடுத்தார்கள்.. இன்று விசேஷம்போலத்தான் அனைத்து நாட்களும் உள்ளது அதனால் மாதம் ஒருமுறை இந்த உபவாசம் அவசியம்.

என்னால் முழுநாளும் உண்ணாமல் இருக்க முடியாது என்பவர்கள் ஒருநாள் முழுவதும் பழங்களையும், பழச்சாறுகளையும் எடுத்துக்கொள்ளலாம். இளநீர், தேங்காய், பப்பாளி,  கொய்யா, வாழைப்பழம், சாத்துக்குடி, உலர் பழங்கள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைபருப்புகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதாவது சமைத்த உணவை தவிர்க்கவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் அடித்துக்  கொண்டு வெளியில் வந்துவிடும். அதோடு அந்த நாளில் சின்னவேலைகளை மட்டும் செய்து வீட்டில் மகிழ்வான சூழலில் ஓய்வெடுப்பதும் அவசியம். 

இந்த சர்வீஸால் என்ன பயன்…

இந்த உண்ணா நோன்பால் உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறுவதோடு உடலில் உள்ள நுரையீரல், தோல், குடல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகளும்  வெளியேறும். இதனால் உடல் தூய்மை அடையும். இந்த உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் அதிகமான நீரினை (காய்ச்சி சீரகம் சேர்த்து ஆறவைத்து பானையில் வைத்த நீர்) பருகுவது அவசியம். இதனை பருகுவதால் உடல் வெப்பம் குறைவதோடு உடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேறும். உடல் கழிவுகள் நீங்குவதோடு, உடலில் உள்ள பாகமும் உடலிலுள்ள உறுப்புகளும் புத்துணர்வு பெறுகிறது. இந்த உண்ணா நோன்பிற்குப் பின் உடல், மனம் இரண்டும் வலிமை பெறுவதோடு புதிய வடிவத்தையும்  பெறுகிறது. உடலின் செரிமான சக்தி, இயக்க சக்தி, நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை அதிகரிக்கிறது. இந்த மூன்று சக்திகளும் உடலில் பலத்தை குறிப்பதாகும். இவை மூன்றும் அதிகரித்தால் உடலில் எந்த நோய் தாக்குதலும் ஏற்படாது. கழிவுகள் வெளியேற்றம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு. இந்த உண்ணா நோன்பால் கழிவுகள் வெளியேறுவதோடு உடல் உறுப்புகள் புத்துணர்வு அடைகிறது. 

வயிற்றை ஒருநாள் காய போடுவதால் வயிற்றிலுள்ள செரிமானமாகாத உணவுகளை வெளியேறுவதோடு ஜீரண மண்டலம், ஜீரண சுரப்பிகள் சீரான ஓட்டத்தை அடைகிறது. மேலும் உடலில் வெப்பநிலை சமநிலையை  அடைய உதவுகிறது. வயிற்றில் ஏதேனும் புளித்த உணவுகள், செரிமானமாகாத உணவுகள் இருந்தால் அவற்றை வெளியேற்றவும் இந்த உண்ணா நோன்பு உதவுகிறது.

யாரெல்லாம் உண்ணநோன்பு இருக்கவேண்டும் 

பொதுவாக இருபது வயதைத் தாண்டிய அனைவரும் இந்த உண்ணாநோன்பை கடைபிடிக்க வேண்டும். அதாவது உடலை சர்வீஸ் செய்ய வேண்டும். உடலின் தன்மைக்கும், உடலில் உள்ள நோய்க்கும் ஏற்ப தகுந்தாற்போல் கடைபிடிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் எளிமையாக ஜீரணிக்கும் உணவுகளை உண்டு எளிதாக சர்க்கரை வியாதியை போக்கலாம்.

இவ்வாறு மாதம் ஒருமுறை நம் உடலை சர்வீஸ் செய்வதால் பல ஆண்டுகளுக்கு பழுதின்றி புத்துணர்வோடும் இளமையாகவும் நம் உடல் என்னும் வண்டியை ஆரோக்கியமாக ஓட்ட முடியும்.