Cadaba fruticosa; வீழி; விழுதி
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த மூலிகைகளின் வரிசையில் இந்த விழுதியும் ஒன்று. வறட்சியான நிலங்களில் அதிகம் காணப்படும் முள்ளில்லாத குறுஞ்செடி மூலிகை இது. மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாத மலைகள், வனங்கள் மற்றும் தரிசு நிலங்களில் காணப்படும் மூலிகை. இந்த விழுதியின் இலைகள் சிறிதாகவும் காய்கள் சற்று பெரிதாகவும் இருக்கும். தனி இலைகளைக் கொண்டது மற்றும் இதன் பூக்கள் வெண்ணிறத்திலும், பழங்கள் செந்நிறத்திலும் இருக்கும்.
விழியிலை என்றும் கூறப்படும் விழுதியின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டது. சருமத்தில் ஏற்படும் பல நோய்களையும், குத்தல், குடைச்சல், வாத நீர், வாத வீக்கம், மலப் புழு, துர்மலம், இடுப்பு வலி, கருப்பை, இரத்தக் கட்டு என பல நோய்களுக்கும் மிக சிறந்த மூலிகை. களைப்பு நீங்கும்.
”விழுதித் தழைகரப்பான் வெண்மேகம் நீங்கும்
பழுபடுவன் சூலைநோய் மாறும்-எழுபேதி
யாக்கும் அதிமந்தம் அகக்கிருமி துன்மலமும்
போக்கும் அதுவே புகல்”
– அகஸ்தியர் குணபாடம்
சரும நோய்கள் / செயலாற்ற பாகம்
இலையை அரைத்து பற்றிடலாம். அதேப்போல் உடலில் ஒரு பக்கம் செயலற்று போனால் இலைக்கசாயத்தை தினம் மூன்று வேளை கொடுத்து, இலையை அரைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் பற்றுபோட நல்ல பலன் கிடைக்கும்.
வீக்கம் மறைய
இலையை வதக்கி உடலில் ஏற்படும் வீக்கங்கள் கட்டிகள் மீது வைத்து கட்ட கட்டிகளின் வீக்கம் விலகும்.
விழுதி கசாயம்
விழுதி இலையை விளக்கெண்ணையில் தாளிச்சு சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து ரசம் போல் காய்ச்சி உணவுடன் பருக பேதியாகும், மலப்புழு நீங்கும், வாத வீக்கம், வாத நீர் வெளியேறும் மற்றும் குத்தல் குடைச்சல் நீங்கும்.
ஒரு லிட்டர் நீரில் விழுதி இலையை சேர்த்து கால் பங்காக சுண்டியப் பின் எடுத்து அந்த கசாயத்துடன் விளக்கெண்ணை சேர்த்து பருகவும் பேதியாகும், மலக் கழிவுகள் வெளியேறும்.
கருப்பை நோய் / இடுப்பு வலி தீர
இலை சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து காலையில் பருக பேதியாகும், இடுப்பு வலி, உடல் வலி மறையும், பெண்கள் கருப்பை தொந்தரவுகள் மறையும், விரைவில் கரு உருவாக உதவும்.
நல்லெண்ணையில் விழுதி இலை சாறினை சேர்த்து பதமாக காய்ச்சி வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தலை முழுகி வர பீனிச ரோகம் நீங்கும்.