Dichrostachys Cinerea; Veerataru; விடத்தேர்; விடத்தேரி
கிராமங்களில் இந்த மரத்திற்கு வேடிக்கையாக சில விடுகதையை கேட்பார்கள்…
இலையிலே பிறந்து
இலையிலே வளர்ந்த
இலைவணிய பெண்ணே இலையில் சிறிய இலை எது?
பூவிலே பிறந்து பூ விலே வளர்ந்த புவணியனே பூவிலும் சிறிய பூ
எது?
இரண்டிற்கும் இந்த விடத்தலை தான் விடை.
கடுகை விட சிறிய இலைகளைக் கொண்ட மூலிகை மரம் விடத்தலை. கிராமங்களை சுற்றியிருக்கும் காடுகளில் அதிகளவில் இந்த மூலிகை மரத்தை பார்க்க முடியும். பின்னிப்பிணைந்த காய்களைக் கொண்ட இந்த விடத்தேர் மர பூக்கள் மிக அழகாக பஞ்சு போல் இரு நிறங்களில் இருக்கும். கிரகங்களில் சனி கிரகத்திற்கு உரிய மரம் இந்த விடத்தேர் என்ற விடத்தலை மரம். முட்கள் நிறைந்த இந்த மரத்தின் இலை, வேர், பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டது. மேலும் பெரும் வியாதிகளுக்கும் மருந்தாக உள்ள மிக முக்கிய மரம் இது.
வாதம், நீரிழிவு, ஆஸ்துமா, சளி, சிறுநீரக தொந்தரவுகள், காசம், வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி, கண் வலி, பல்வலி, விசக்கடிகளுக்கும், புண்கள், உடல் வலி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த மூலிகை விடத்தேர். மலமிளக்கியாகவும், நவ மூலத்திற்கும் மிக சிறந்த மருந்தாக உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும் ஆண்மை சார்ந்த மருந்துகள் தயாரிக்க இதனையும் ஒரு பல மூலிகைகளுடன் பயன்படுத்துவதுண்டு.
இந்த மரம் வெப்பமண்டல இடங்களில் புதர் செடியாக பல இடங்களில் காணப்படும், இது மரமாக மாறுவதற்கு பல காலமாகும். இரண்டு வகை நிறங்களில் மலர்கள் காணப்படுவது இதன் சிறப்பாகும். வலுவான தன்மை கொண்ட மரம் என்பதால் உழவு கலப்பைகள், உலக்கை இந்த மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. விடத்தேர் மரத்தை எளிதாக கரையான் பிடிப்பதில்லை, அவ்வளவு உறுதியான மரம்.
உடல் வலி நீங்க
விடத்தலை மரத்தின் பூ, காய், பட்டை மற்றும் இலையை சமஅளவு எடுத்து கசயமாக காய்ச்சி ஒருவேளை காலையில் பருகிவர உடல் வலி நீங்கும்.
மூல நோய்க்கு
பாலுடன் விடத்தலை பட்டையை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர மூலம், இரத்தமூலம் தொந்தரவிலிருந்து வெளிவர உதவும், உடல் உஷ்ணம் தணியும்.