விபூதி என்று சாதாரணமாக அழைக்கப்படும் திருநீறு, இறைவனிடமிருந்து பிரசாதமாக கிடைப்பதால் திரு சேர்த்து திருநீறு என்று அழைக்கப்படுகிறது. இதனை அணிவதால் பல பல நன்மைகள் உண்டாகிறது.
“திருநீறு இல்லாத நெற்றியும், நெய் இல்லாத உணவு பாழ்”
என்றார் அவ்வையார்.
அந்தளவு மகத்துவம் வாய்ந்தது திருநீறு. ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் இல்லாமல் அறிவியல் ரீதியாக இதனை உள் நோக்கினால் விபூதி என்ற திருநீறின் பலன் நமக்கு தெரியும்.
சரி திருநீறு எதிலிருந்து பெறப்படுகிறது என தெரியுமா?
கோ மாதா என்று அழைக்கப்படும் நாட்டு பசுவின் சாணத்தில் இருந்து கிடைக்கப்படும் ஒரு உயர்ந்த பொருள்தான் இறைவனின் பிரசாதமாக கிடைக்கும் திருநீறு. பசுவிலிருந்து கிடைக்கும் சிறுநீர் (கோமூத்திரம்), கோமியம் எனும் சாணம் உட்பட அனைத்துமே மனித குலத்திற்கும், உலகத்திற்கும் நன்மை செய்யும் தன்மைக் கொண்டது.
மண்ணை வளப்படுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரை அதிகரிக்கவும், மழை கிடைக்கவும், புவி வெப்பமடைதலை தடுக்கவும் பசுவின் கழிவுகள் நமக்கு உதவுகிறது. அதன் அபார மருத்துவ குணங்களையும், கண்ணுக்கு தெரியாத சக்தியையும் தெரிந்த பலர் இன்று பசுவிலிருந்து கிடைக்கும் கழிவுகளை வைத்து சோப்பு, கூந்தல் தைலம், அழகுசாதனப் பொருட்கள் என பலவற்றை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். அன்று நம் முன்னோர் விபூதி, பஞ்சகவ்யம் என்ற உயர்ந்த தெய்வ பிரசாதத்தை தயாரித்து அன்றாடம் நெற்றியில் பூசவும், இறைவனுக்கு அபிஷேகம் செய்து பருகவும் செய்தனர். இதனால் மலட்டுத்தன்மை உட்பட பல உடல் உபாதைகள் நீங்கின.
இவ்வாறு, நம் முன்னோர்களும், சைவசமயமும், தமிழ் சமூகமும் நமக்கு அளித்த திருநீறு அணிவதால் கிடைக்கும் பலன்களை இனி பார்ப்போம்.
விபூதி / திருநீறு அணிவதால் கிடைக்கும் பலன்கள்
- உடல் நாற்றம் போகும்.
- உடல் சுத்தமாகும்.
- நினைவாற்றல் அதிகரிக்கும்.
- ஞானம் உண்டாகும்.
- முகத்திற்கு பொலிவு பெரும்.
- பில்லி சூனியம் நீங்கும்.
- இறைவன் திருவடியை பெறலாம்.
- பிறவிப் பயன் கிட்டும்.
- புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
- பாவங்கள் தீரும்.
- வியாதிகள் ஒழியும்.
- நோய்க் கிருமிகள் அழியும்.
- தீட்டுகள் கழியும்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வாரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே – திருமூலர்
எதிலும் கலப்படம் என்ற இன்றைய காலத்தில், இன்று நமக்கு கிடைக்கும் திருநீறும் பல கலப்படங்களுடன் வருகிறது என்பது நிதர்சனம். கலப்பட திருநீறு அழற்சியை ஏற்படுத்தும். திட்டாக நெற்றியில் படியும். இவை உடலுக்கு உகந்ததல்ல. அதனால் சுத்தமான கலப்படமில்லாத திருநீறை பயன்படுத்துவது சிறந்தது. நாட்டு மாடு வைத்து பராமரிக்கும் பல ஆதினங்கள் விபூதியை சுத்தமாக சரியான பசுவிலிருந்து தயாரித்து பக்தர்களுக்கு தருகின்றனர். அவற்றை பயன்படுத்த பலன் கிடைக்கும்.