Wrightia tinctoria; Pala Indigo Plant; வெட்பாலை
தோல் நோய்களுக்கு அற்புதமான மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை மரம் வெட்பாலை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பார்க்கக் கூடியது. கிராமங்களிலும் நகரங்களிலும் கூட இன்றும் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை மரம். தெற்காசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படக் கூடியது. குடசம், வற்சம், கிரிமல்லிகை என பல பெயர்களை கொண்டிருக்கக் கூடிய மரம். மூலிகை மரம் வெட்பாலையின் தண்டு, இலை, காய் என அனைத்துமே பால் நிரம்பி உள்ளது. இது ஒரு பால் வடியும் மூலிகை மரம்.
இது வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு.
தனி இலைகள் எதிரிலைக் குறுக்கு மறுக்கு அடுக்கத்தில் அழகாகக் காணப்படும். கோடை காலத்தில் பூக்கும் இதனுடைய பூக்கள் நல்ல நறுமணத்துடன் மல்லிகையை ஒத்த அமைப்பிலும் வெள்ளை நிறத்திலும் இருக்கக் கூடியது. இந்த பூக்கள் கிளைகளின் நுனியில் தொகுப்பாகக் காணப்படக் கூடியதாக இருக்கும்.
இந்த வெட்பாலை மரத்தில் ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால் இதனுடைய காய்களும், கனிகளும். நீளமான இரட்டை காய்கள் தனித்தனியாக நீண்டு ஒன்றாக அதன் நுனிப்பகுதியில் இணைந்து இருக்க கூடிய ஒரு அற்புதமான அமைப்பை பெற்றிருக்கக் கூடிய காய்களை கொண்ட ஒரு மரம் இந்த வெட்பாலை மரம்.
இதன் இலை, பட்டை, வித்து (அரிசி) ஆகியவை மருத்துவப் பயன் கொண்டது. இது துவர்ப்பு, இனிப்பு மற்றும் சிறிது கசப்பு சுவையையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு மரவகை. வெட்பாலை மரம் வெப்பத்தை அதிகரிக்கக் கூடியதாகவும் கார்ப்பு பிரிவைச் சேர்ந்ததாகவும் இருக்கக்கூடியது.
இலைகளில் Indican என்று சொல்லக்கூடிய நிறமி உள்ளது. வெட்பாலை தோல் நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் காமத்தை பெருக்க கூடியதாகவும், உடலை உரமாக்கக்கூடியதாகவும் இருக்கக் கூடியது.
வெப்பாலை தீர்க்கும் நோய்கள்
வெப்ப குணத்தை கொண்ட வெட்பாலை மரமானது வளி நோய்களையும், முப்பிணி பெருக்கையும் நீக்கும். உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றி, நுண்கிருமிகளால் வரக்கூடிய தொற்றுகளை போக்கக் கூடியது. வெப்பாலை அரிசி வெப்பத்தால் வரக்கூடிய தொந்தரவுகள், குடல் வாயு, வயிற்றுப் பொருமல், கழிச்சல் போன்றவையை தீர்க்கவும் உதவுகிறது.
பல்வலி குணமாக
பல்வலி குணமாக – வெட்பாலை இலைகளை மென்று சுவைக்க தீராத பல்வலி குணமாகும்.
வெட்பாலை தைலம்
இந்த தைலம் பல சரும தொந்தரவுகளுக்கு சிறந்தது. வெட்பாலை இலை ஒரு கைப்பிடி எடுத்து காம்பு, நரம்பு நீக்கி அதனை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் முழுகும் படி செய்து வெயிலில் சூரிய ஒளியில் படும்படி மூன்று நாட்கள் வைத்து எடுக்க வேண்டும்.
தோல் நோய் (Psoriasis)
தோல் நோய்களுக்கு வெட்பாலை தைலம் / வெட்பாலை எண்ணெய்யை ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு சாப்பிட்டு பின் அதனை உடலில் பூசி வர காளாஞ்சப்படை என்னும் நோய் நோய் (சோரியாசிஸ்) குணமாகும்.
பொடுகு மறைய
வெட்பாலை தைலம் / வெட்பாலை எண்ணெய்யை தலைக்கு சாதாரண தேங்காய் எண்ணெய் போல் தேய்க்க பொடுகு மறையும்.
முகப்பரு கட்டிகள் மறைய
முகத்தில் ஏதேனும் திட்டுகள், குழிகள், பரு, கட்டிகள் இருக்க இரவில் படுக்கும் முன் முகத்தை சுத்தமாக கழுவி இந்த வெட்பாலை தைலத்தை தேய்த்து நன்கு மசாஜ் செய்து படுக்க விரிவும் அவை மறைந்து முகம் பளபளப்பாகும்.
ஆண்மை பெருக
வெட்பாலை வித்துக்கள் அதாவது அதன் அரிசியை பொடித்து தினமும் இரு வேளை ஒரு முதல் இரண்டு கிராம் அளவு உட்கொள்ள ஆண்மை பெருகும். வயிற்றுப் பொருமல் குணமாகும்.
உடல் களைப்பு நீங்க
வெட்பாலை பட்டையை குடிநீரிட்டுக் பருக சுர நோயின் பின் காணும் உடல் களைப்பை நீக்கி, பசித்தீயைத் தூண்டும். உடலுக்கு வன்மை தரும்.